ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட ரகுல்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்துக்குச் சற்றும் குறைவில்லாமல் அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருப்பது செல்வராகவன் இயக்கத்தில் ஒப்பந்தமாகியுள்ள புதிய படத்தையும்தான். நடிகர்களைப் போலவே சில இயக்குநர்கள் தங்களுக்கென்று நிலையான ரசிகர்களைப் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் செல்வராகவன்.
இந்தக் கூட்டணி உருவாகியதும் கதாநாயகி யார் என்பதே பெரிய கேள்வியாக இருந்தது. செல்வராகவனைப் பொறுத்தவரை கதாநாயகனுக்கு நிகராக கதாநாயகி கதாபாத்திரத்தை நுட்பமாக படைக்கக் கூடியவர். படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின.
ஏற்கெனவே ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் நடித்து அவர் கவனம் பெற்றிருந்தார். ஆனால், பிரேமம் மலர் டீச்சராக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருந்த சாய் பல்லவி செல்வராகவனைச் சந்தித்தார் என்ற செய்தியும் அதன்பின் இந்தப் படத்தில் அவர் ஒப்பந்தமான செய்தியும் வெளிவந்த பின்பு ஆட்டத்திலிருந்து ரகுல் விலகிவிட்டார் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.