மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

டிஜிட்டல் திண்ணை!

டிஜிட்டல் திண்ணை!

திமுகவுக்கு எடப்பாடியின் பொங்கல் பரிசு!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப்பிலும் ஏதோ டைப்பிங் ஆனபடி இருந்தது.

“சட்டமன்றம் வரும் 8-ம் தேதி கூடப் போகிறது. பல அதிரடி திருப்பங்களை அன்று பேரவையில் எதிர்பார்க்கலாம். புதிய சட்டமன்ற உறுப்பினரான டிடிவி தினகரனும் அன்றைய பேரவை நிகழ்வில் பங்கேற்க இருக்கிறார். ஜனவரியில் சட்டமன்றத்தை எந்த தேதியில் கூட்டலாம் என முதல்வர் பழனிசாமி சேலத்தில் உள்ள ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அந்த ஜோதிடர், 'மார்கழி 24-ம் தேதியான வரும் திங்கள் கிழமை, அதாவது ஜனவரி 8-ம் தேதி சப்தமி திதியும்,அஸ்தம் நட்சத்திரமும் கூடிய நல்ல நாள். அன்று நீங்கள் பேரவையை கூட்டினால் உங்களுக்கு எந்த சிக்கலும் வராது’ என்று சொன்னாராம். அதன்படிதான் 8-ம் தேதி பேரவையை கூட்ட முடிவு செய்திருக்கிறார் பழனிசாமி. அன்றைய கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தப் போகிறார். எதிர்க்கட்சிகள் அன்று பிரச்னையை கிளப்பும் என்பதை முதல்வரும் அறியாமல் இல்லை.

அதனால்தான், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து சுமாராக 1 லட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை போடுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 3 வாரங்களுக்கு முன்பே தொகுதி வாரியாக வேலைகளும் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் 8 கோடியில் இருந்து 20 கோடி ரூபாய் வரை வேலைகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அதில் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருக்கும் தொகுதியில் மட்டும், 10 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்கப்பட்டு இருந்தால், 7 கோடி ரூபாய் வேலைக்கு ஒப்பந்ததாரர்களை எம்.எல்.ஏ.க்களே நியமித்துக் கொள்ளட்டும். கமிஷனும் அவர்களே வாங்கிக் கொள்ளட்டும். மீதி இருப்பதை மட்டும் நம்ம ஆட்கள் பார்க்கட்டும் என முதல்வரிடம் இருந்து வாய்மொழி உத்தரவாக வந்திருக்கிறது.

திமுக எம்.எல்.ஏ ஒருவர் இது சம்பந்தமாக எடப்பாடியிடம் பேசி இருக்கிறார். ‘என்ன திடீர்னு எங்களையே காண்ட்ரக்ட்காரங்களை பிக்ஸ் பண்ண சொல்லிட்டீங்க...?’ என கேட்டாராம். அதற்கு பழனிசாமியோ, ‘புத்தாண்டுக்கும், பொங்கலுக்கும் எல்லோருக்குமே ஏதாவது செய்யணும்னு நினைச்சிட்டு இருந்தேன். இது பொங்கல் பரிசாக இருக்கட்டுமே..’ என்று சொல்லி இருக்கிறார்.

திமுக எம்.எல்.ஏக்களில் சிலர் உடனடியாக ஒப்பந்ததார்களை நியமித்து முதல் தவணையாக கமிஷனை வாங்கிக் கொண்டார்களாம். சிலருக்கு முதல் தவணையே சில லட்சங்கள் வரை கமிஷன் வந்திருக்கிறது. ‘நம்ம கட்சியில இதைக் கொடு... அதைக் கொடு என நம்மகிட்ட இருக்கிறதைத்தான் புடுங்குவாங்க. எடப்பாடியைப் பாருங்க.. எதிர்க்கட்சின்னு கூட பார்க்காமல் எல்லோருக்கும் பிரிச்சு கொடுத்து இருக்காரு... ஜெயலலிதா இருந்தபோது கூட இப்படி செஞ்சது இல்ல... எடப்பாடி... எடப்பாடிதான்!’ என திமுக எம்.எல்.ஏக்களே சந்தோஷமாக சொல்ல ஆரம்பித்துள்ளனர். இப்படி எடப்பாடி மீது பேரன்பில் இருக்கும் திமுக எம்.எல்.ஏக்கள் எப்படி சட்டமன்றத்தில் எதிராகப் பேசப் போகிறார்கள் என்று கேட்கிறார்கள் அதிமுகவினர்” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது.

”10 கோடி வேலை என்றால் அதில் 7 கோடி ரூபாய் வேலையை திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்துவிட்டார். மிச்சம் இருக்கும் 3 கோடியை என்ன செய்வார்கள்?” என்ற கேள்வியை போட்டது ஃபேஸ்புக்.

பதிலை அடுத்த மெசேஜ் ஆகப் போட்டது வாட்ஸ் அப். “ சொந்தக் கட்சிக்காரங்களை சமாளிச்சு ஆகணும் இல்லையா? ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அதிமுக ஒன்றிய, நகர செயலாளர்கள் இருக்காங்க.. அவங்களையும் திருப்திப்படுத்தியாகணும். அவர்களுக்காகத்தான் அந்த மிச்சத் தொகையை விட்டுக் கொடுத்திருக்கிறார் முதல்வர். அதேபோல திமுக முன்னாள் அமைச்சர்களும் காண்ட்ராக்ட் கேட்டாலும் உடனே கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டு இருக்கிறாராம் முதல்வர். ‘நம்ம ஆட்களை சமாளிக்கிறது பெரிய விஷயம் இல்லை. எதிர்க்கட்சிகளை மனசு நோகாம பார்த்துக்கணும்..’ என்று சொன்னபடியே இருக்கிறாராம் எடப்பாடி. இதுமட்டுமல்ல, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிலரும் கூட, சிலர் முதல்வருக்கு தூது விட்டிருக்கிறார்களாம். தங்களுக்கு எந்த கமிஷனும் கிடைக்காத ஆதங்கத்தில் இருக்கிறார்களாம் அவர்கள்’’ என்று முடிந்தது அந்த பதில் மெசேஜ்.

“சரி... திமுக எம்.எல்.ஏக்களுக்கு கமிஷன் போன கதையெல்லாம் செயல் தலைவர் ஸ்டாலினுக்குத் தெரியாமல் இருக்குமா?” என்ற கேள்வியை ஃபேஸ்புக் கேட்டது.

உடனே வாட்ஸ் அப்பில் பதில் வந்தது. “அது எப்படி தெரியாமல் இருக்கும்? தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறார் அவர்” என்பதுதான் அந்த மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், “கனிமொழியின் பிறந்த நாள் விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சி.ஐ.டி காலனியில் உள்ள கனிமொழி வீட்டுக்கு வெளியே காலையில் இருந்தே வாண வேடிக்கையும், மேள தாளங்களும் அமர்க்களப்பட்டது. ‘ஸ்டாலின் பிறந்தநாள் விழா கூட இப்படி கொண்டாடியது இல்லை. 2ஜி வழக்கில் இருந்து வெளியே வந்த உற்சாகத்தில் இருக்கிறார் கனிமொழி. அதனால்தான் வீட்டுக்கு வந்த எல்லோரையும் சந்தித்து வாழ்த்துக்களை வாங்கிக் கொண்டார் கனிமொழி.

கனிமொழியோடு, ராசாத்தி அம்மாளும் அருகிலேயே நின்றபடி மகளை வாழ்த்துவதைப் பார்த்து சந்தோஷத்தில் இருந்தார். அதே நேரத்தில் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் யாரும் கனிமொழி வீட்டுப் பக்கம் போகவே இல்லையாம். சிலர் போனில் மட்டும் வாழ்த்துச் சொல்லி இருக்கிறார்கள்” என்ற ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 5 ஜன 2018