பேருந்தை ஓட்டிய அதிமுக எம்.எல்.ஏ.!

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், அந்தியூர் அதிமுக எம்.எல்.ஏ ராஜா கிருஷ்ணன் தாமாக முன்வந்து அரசுப் பேருந்தை இயக்கினார்.
போக்குவரத்து தொழிலாளர்களுடனான அமைச்சரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 70 ஊழியர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இன்று சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பேருந்தை நம்பியிருந்த பொதுமக்களின் அன்றாடப் பணிகள் முற்றிலும் முடங்கியது.
வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றதால் பல பேருந்துகள் பணி மனையிலேயே நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதனைச் சமாளிக்கத் தற்காலிக ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரிலும் பல பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மதியம் மூன்று மணியளவில் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. இதனால் களத்தில் இறங்கிய அந்தியூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜா கிருஷ்ணன் தாமாக முன்வந்து பேருந்து இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் அந்தியூரில் இருந்து ஈரோடு செல்லும் பேருந்தை இயக்கினார். ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை சரிபார்த்த பின்பே அவர் பேருந்து இயக்கியதாகக் கூறப்படுகிறது.