மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

தென்னாப்பிரிக்காவின் வியூகத்தை உடைத்த வேகம்!

தென்னாப்பிரிக்காவின் வியூகத்தை உடைத்த வேகம்!

எத்தனையோ கோடிகளை செலவு செய்து, பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கணிக்கப்படும் தகவல்களையெல்லாம் ஒவ்வொரு பந்திலும் அடித்து தூளாக்குவதினால் தான் கிரிக்கெட் எனும் விளையாட்டு பல வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் மென்மேலும் பொலிவு கூடிக்கொண்டே போகிறது. தென்னாப்பிரிக்க மண்ணில் கால்பதித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.

பல மாதங்களுக்குப் பிறகு ஆசிய கண்டத்தைத் தாண்டி இந்திய அணி விளையாடுகிறது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் விளையாடியதும் திருப்திகரமானதாக இல்லை. ஹோம் கிரவுண்டுக்கு வந்த அணிகளையும், இலங்கை அணியையும் வெற்றிபெற்று நிகழ்த்திய சாதனைகளுக்கான பலன் தென்னாப்பிரிக்க கிரவுண்டுகளில் தெரியும் என கிரிக்கெட் ஆலோசகர்களால் பேசப்பட்டது. முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டிருந்த மைதானம் இரண்டாவது நாளில் 100 சதவிகிதம் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என கிரிக்கெட் ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டது. ஆனால், இவை இரண்டுமே முதல் நாள் ஆட்டத்தில் தவிடுபொடியானது. வீசிய முதல் மூன்று ஓவரிலும் மூன்று விக்கெட் எடுத்த புவனேஷ், தனது முதல் டெஸ்ட் விக்கெட் எடுத்த பும்ரா என்று இன்றைய போட்டி களைகட்டியது.

முதல் ஓவரில் புவனேஷ்வர் குமார் வீசிய இரண்டு பந்துகளும் மிகவும் மோசமானவை என்பதை அவரது முகமே சொன்னது. ஆனால், மூன்றாவது பந்து புவனேஷ்வருக்கு விக்கெட்டைப் பறித்துக்கொடுத்தது.

தென்னாப்பிரிக்காவின் ஓபனிங் பேட்ஸ்மேன் எல்கர் நேரான பந்தை எதிர்பார்த்துக் காத்திருக்க, பந்தில் புவனேஷ்வர் உருவாக்கிய மிகச்சிறிய திருப்பம் ஒரு விக்கெட்டைப் பரிசாகக் கொடுத்தது. அரவுண்டு ஆஃப் திசையில் வந்த பந்தை தடுக்க முயற்சித்தபோது இந்த விக்கெட் விழுந்தது.

முதல் ஓவரில் ஒரு விக்கெட்டை வீழ்த்திவிட்டு, மூன்றாவது ஓவரை வீசிய போதும் மர்க்ரம் விக்கெட்டை வீழ்த்தினார் புவனேஷ்வர். எல்கருக்கு வீசியதுபோலவே சிறு திருப்பத்துடன் தொடர்ந்து பந்துகளை வீசிய புவனேஷ்வர், கடைசி பந்தில் கிட்டத்தட்ட ஸ்பின் பவுலர் வீசக்கூடிய அளவுக்கு பந்தை அதிகம் திருப்பினார். இதை எதிர்பார்க்காத மார்க்ரம் கிட்டத்தட்ட உறைந்துபோன நிலைக்குச் சென்றுவிட்டார். பந்து மார்க்ரம் கால் பேடில் பட்டது தான் தாமதம், பவுலர் அம்பயரிடம் அப்பீல் செய்ததும், உடனே அவுட் கொடுக்கப்பட்டு, மார்க்ரம் கிளம்பிப் போய்விட்டார். அத்தனை சிறப்பாக புவனேஷ்வர் வீசிய பந்து மார்க்ரமின் பேடில் தாக்கியிருந்தது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா 7 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இரண்டு விக்கெட்டுகள் விழுந்திருந்த ஏமாற்றத்திலிருந்த ஹாசிம் அம்லாவை, டிவில்லியர்ஸ் வந்து சமாதானப்படுத்தினார். ஆனால், இந்த கூட்டணி அதிக நேரம் நீடிக்கவில்லை.

தென்னாப்பிரிக்க அணி 12 ரன்களைக் கடந்த நிலையில், தனது மூன்றாவது ஓவரை வீசவந்தார் புவனேஷ்வர். தற்போதைய கிரிக்கெட்டின் அதிசிறந்த பிளேயர்களில் ஒருவரான அம்லாவை எதிர்கொள்ளுவது எவ்வளவு கடினம் என்பதை, முதல் நான்கு பந்துகளில் உணர்ந்தார் புவனேஷ்வர். எவ்வித சலனமும் இல்லாமல் விளையாடினார் அம்லா. ஆனால், ஐந்தாவது பந்தில் இளம் பந்துவீச்சாளர் மைதானத்தைக் கணித்துவிட்டு வீசினால் என்னவாகும் என்பதை அம்லா உணர்ந்தார். இத்தனைக்கும், Back Foot Punch எனப்படும் அம்லாவின் ஃபேவரிட் ஷாட்டுக்குத்தான் அந்த பந்தை முயற்சித்தார் அம்லா. ஆனால், சரியான ஃபுல் லெந்தில் இறங்கிய பந்து சிறிய அளவில் ஸ்விங் ஆகி விக்கெட் கீப்பர் சஹாவின் கைகளுக்குள் சென்றது. இப்படியாக புவனேஷ்வர் காட்டிய ஆக்ரோஷத்துக்கு மற்ற பவுலர்களால் ஈடுகொடுக்கமுடியவில்லை. வெய்யில் ஏறத் தொடங்கியதும் ஆக்ரோஷம் அடங்கியது. அலட்சியம் தலைதூக்கியது. அம்லாவின் விக்கெட்டினால் தனித்துவிடப்பட்ட டிவில்லியர்ஸுடன் இணைந்திருந்த டுப்லெசிஸ் இத்தனை நாட்கள் பேசியதுபோலவே மிகவும் பொறுமையான ஆட்டத்தைக் காட்டினார்.

32 ஓவர்கள் வரை இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தைக் கொடுத்தது. அவர்களைப் பிரிக்க பும்ரா வந்தார். அவரது முதல் டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டை டிவில்லியர்ஸ் மூலமாக எடுத்தார். வேகப்பந்துவீச்சாளர்களே பந்தை ஸ்விங் செய்ய கடுமையாக முயற்சிக்கும் நிலையில், பும்ராவின் பந்தை சாதாரணமாக எதிர்கொண்டார் டிவில்லியர்ஸ். ஆனால், ஆஃப் ஸ்டம்பில் தாக்கி டிவில்லியர்ஸுக்கு வெய்யிலில் இருந்து ஓய்வளித்தார் பும்ரா.

புவனேஷ், பும்ரா போலவே ஹர்திக் பாண்டியாவும் 35ஆவது ஓவரில் டுப்லெசிஸின் விக்கெட்டை எடுத்தார். ஐந்தாவதாக விழுந்த இந்த விக்கெட் கிட்டத்தட்ட வெற்றி பெற்றதற்கான கொண்டாட்ட மனநிலையை இந்திய அணி வீரர்களிடையே உருவாக்கியது. தென்னாப்பிரிக்க வீரர்கள் தடுப்பாட்டத்துக்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டார்கள். ஆனாலும், விக்கெட்டுகளைப் பரித்துவிட்ட அலட்சியத்தால் இந்திய அணியினர் தொடர்ந்து ரன்களைக் கொடுக்கத் தொடங்கினார்கள்.

36ஆவது ஓவரில் டுப்லெசிஸ் அவுட் ஆனபோது 142இல் இருந்த தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் 45ஆவது ஓவரில் டி-காக் அவுட் ஆனபோது 202ஆக இருந்தது. அதாவது ஒன்பது ஓவர்களுக்கு(54 பந்துகளுக்கு) 60 ரன்களை அடித்திருந்தனர் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள். இது ஒருநாள் போட்டிக்கு சமமான ரன்குவிப்பு. டி-காக் விக்கெட்டையும் புவனேஷ்வர் எடுத்தார். தொடக்கத்திலிருந்தே ரன்களைக் கட்டுப்படுத்திவந்த முகமது ஷமி பிலாந்தரின் விக்கெட்டை 51ஆவது ஓவரில் எடுத்தார். இதன்மூலம் 50.2 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்திருந்தது தென்னாப்பிரிக்க அணி. புவனேஷ்வர் 4 விக்கெட்டுகளும், ஷமி, பாண்டியா, பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தனர். அதுவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ஓவர்கள் தான் வீசியிருந்தார். விக்கெட்டுகள் எதுவும் எடுக்கவில்லை.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வெள்ளி 5 ஜன 2018