மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

ரஜினி, கமலுக்கு ஆதரவு: சூர்யா பேச்சு!

ரஜினி, கமலுக்கு ஆதரவு: சூர்யா பேச்சு!

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அப்படத்தின் நாயகன் சூர்யா, அரசியலில் நுழைந்துள்ள ரஜினிகாந்துக்கும் கமல்ஹாசனுக்கும் தன் வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்தார்.

‘சொடக்கு மேலே சொடக்கு போடுது’ என்று தொடங்கும் பாடல் வரிகள் மூலம் படம் வெளியாகும் முன்பே இசையினால் பெரும் எதிர்பார்ப்பை உண்டாகிய தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை ஹையாத் ஹோட்டலில் நடைபெற்றது. ஸ்டுடியோ கீரீன் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா,தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா , கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் ,தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன் , ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் , கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சரியாக இரவு 8 மணிக்குத் தொடங்கிய விழாவில் பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் திரைத் துறையைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய கீர்த்தி சுரேஷ், “சூர்யா சாரைப் பலமுறை படங்களில் பார்த்து வழிஞ்சி இருக்கேன். ஆனா இப்போ அவர் கூடயே படம் நடித்திருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம். அதே போல எனக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு என் நன்றி. அப்புறம் முக்கியமாக என் அன்பான பிரதர் பற்றி சொல்லியே ஆகணும்,விக்னேஷ் சிவன் ஸார் ரொம்ப ஸ்வீட். இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் என் வாழ்த்துகள்” என்று பேசினார்.

கீர்த்தி சுரேஷைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், “தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் தானா சேர்ந்த கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு முக்கியமான காரணம். நான் ஸ்பெஷல் 26 படத்தின் உரிமையை வாங்கி. அந்தப் படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்துப் புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். சூர்யா நடித்த ‘காக்க காக்க’ போன்ற படங்களைப் பார்த்துத்தான் வளர்ந்தேன். அந்தப் படம்தான் என்னைப் போன்ற பலரை சினிமாவை நோக்கிப் பயணிக்க வைத்தது. உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சூர்யா. சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கைக் கொடுத்துள்ளேன். இதற்கு மேல் மற்ற விஷயங்களை நீங்கள் படத்தில் பாருங்கள்” என்று கூறினார்.

கீர்த்தி சுரேஷ் பிரதர் என்று அழைத்ததற்குப் பதிலளிக்கும் வகையில், “கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர் , பிரதர் என்று அழுத்திக் கூறிவிட்டார். அதனால் நானும் அவரை சிஸ்டர் என்றே சொல்கிறேன்” என்று கூறிச் சிரித்த அவர், நீங்கள் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில்தான் இருக்கிறீர்கள் என்று சொன்னபோது அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி மகிழ்ந்தனர்.

ரம்யா கிருஷ்ணன் பற்றிப் பேசிய விக்னேஷ்சிவன் கமல்ஹாசனைப் போல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றவர் என்று பாராட்டினார். அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம் என்று குறிப்பிட்டார்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்லி பேசத் தொடங்கிய சூர்யா அரசியலில் நுழைந்திருக்கும் ரஜினி, கமல் மற்றும் விஷால் ஆகியோருக்கு வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்தார்.

“எனக்கு அறிமுகம் கிடைத்த சில இயக்குநர்கள் எடுத்த முடிவுகள் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமாக அமைந்துள்ளன. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் இந்தக் கூட்டணி இணைந்தது. விக்னேஷ் சிவனைச் சந்திக்கப் போவதாக ஹரி சாரிடம் கூறினேன் அதற்கு அவர் நிச்சயமாக அவருடன் படம் பண்ண வேண்டும் என்று கூறினார். 1987இல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்றாலும் முற்றிலும் வேறு ஒரு பாதையில் கதை செல்கின்றது. முதல் சந்திப்பில் இருந்து தானா சேர்ந்த கூட்டம் என்று படத்தின் பெயர் வைக்கும் வரை சிறப்பாக அமைந்தது. உடன் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச் சிறப்பாக பணிபுரிந்துள்ளார்கள். படத்தில் உள்ள அனைத்துப் பாடல்களும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. 7 வருடங்களுக்குப் பிறகு பண்டிகை தினத்தன்று படம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லாப் படங்களிலும் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் போன்ற டிஸ்க்லைமர் கார்டு எங்கள் படத்தில் வராது அப்படி ஒரு படத்தை எடுத்துள்ளார். அதற்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்” என்று தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் சூர்யா.

இறுதியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா, “தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு என்னுடைய பங்களிப்பை என்னால் சரியாக கொடுக்க முடியவில்லை. அனைத்தையும் பொறுத்துக்கொண்ட சூர்யா , விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நன்றி. இன்றைய சூழ்நிலையில் நல்லவனாக வாழ்வதை விட வல்லவனாக வாழ வேண்டியுள்ளது. இனிமேல் என்னோடு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் முடிவுகளை வாழ்க்கையில் நான் எப்போதும் எடுக்க மாட்டேன்” என்று உணர்சிகரமாக பேசினார்.

“தானா சேர்ந்த கூட்டம் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என்று நாங்கள் கூறிவருகிறோம். ஆனால் அந்தப் படத்தில் உள்ள ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு விக்கி இப்படத்துக்குப் புதுமையான ஒரு திரைக்கதையை அமைத்துள்ளார். ஒரு நேரடி தமிழ் படத்துக்கு என்ன உழைப்பு தேவையோ அதைவிடப் பல மடங்கு உழைப்பை விக்கி இந்தப் படத்துக்கு கொடுத்துள்ளார். கடின உழைப்பைப் போடாமல் சூர்யா ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும். அயன் படத்தில் வருவது போல் பிரெஷ் ஆன சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம்” என்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 5 ஜன 2018