துப்பாக்கி முனையில் திருமணம்!

பீகார் மாநிலத்தில் 28 வயதான வாலிபரை கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள போகாரோ நிறுவனத்தில் சீனியர் மேனஜராக வேலைப்பார்த்து வருபவர் வினோத் குமார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஹதியா-பாட்னா விரைவு ரெயிலில் சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்து வெகு நேரமாகியும் வினோத் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் வினோத்தின் சகோதரர் சஞ்சய் குமாருக்கு அடையாளம் தெரியாத நபம் போன் செய்து வினோத்திற்கு கட்டாய திருமணம் நடந்ததாகக் கூறினார். இதனால் சந்தேகமடைந்த சஞ்சய் குமார் போலீசில் புகார் அளித்தார்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் வினோத்தை பண்டாரக் பகுதியைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்று ஒரு பெண்ணிற்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளது தெரியவந்தது. வினோத் திருமணத்திற்கு மறுத்த போது அவரை அடித்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பெண்ணிற்கு தாலி கட்ட வைத்துள்ளனர். வினோத் கண்ணீர் மல்க தாலி கட்டிய புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன. இது குறித்து தெரிந்ததும் சஞ்சய் குமார் உள்ளூர் போலீசின் உதவியுடன் வினோத்தை மீட்டு அழைத்து வந்தார்.