மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

தீவிரமடையும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!

தீவிரமடையும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!

இரண்டாம் நாளாகப் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடர்வதால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நேற்று (ஜனவரி 4) நடைபெற்றது. சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து தொழிற்சங்கங்கள் நேற்று இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

முதலில் 10 தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், பின்னர் 17ஆக உயர்ந்ததையடுத்து போராட்டம் வழுவடைந்தது. இது குறித்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தர்ராஜன் கூறுகையில், "ஆளுங்கட்சியினர் சிலரை வைத்துக்கொண்டு ஒரு சில பேருந்துகளை பல்வேறு வழித் தடங்களில் இயக்கி அரசு கணக்கு காட்டி வருகிறது. 95 சதவிகிதம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது, அரசு மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியையும் ஆபத்தையும் ஏற்படுத்தும். முன்னதாக 10 சங்கங்கள் கூட்டுக்குழுவாக போராட்டத்தை தொடங்கினோம். தற்போது 7 குழுக்கள் புதிதாக இணைந்துள்ளது. அறவழியில் இந்த போராட்டம் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் தமிழகம் முழுவதிலும் 90 சதவிகிதம் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் இன்று காலை சென்னை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

சென்னை:

சென்னை திருவான்மியூர் பணிமனையிலிருந்து தினசரி 110 பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் இன்று 20 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அதேபோல் தாம்பரம் பேருந்து பணிமனையிலிருந்து தினமும் 133 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இன்று 33 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, பணிக்குச் செல்வோர் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்ஸியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் பல மடங்கு கட்டணம் வசூலித்து வருகின்றனர். பேருந்துகள் இயக்கப்படாததால் மின்சார ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கமான அளவை விட அதிகரித்துள்ளது.

விழுப்புரம்:

விழுப்புரத்தில் அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களும் பணிக்கு வராததால் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் இயங்கும் சுமார் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் பணிமனையில் நிறுத்தப்பட்டன. இதனால் எப்போதும் பரப்பரப்பாக காணப்படும் விழுப்புரம் பேருந்து நிலையம் வெறிச்சோடி கிடந்தது.

கோவை:

கோவையைப் பொருத்தவரை சிங்காநல்லூர், உக்கடம், மேட்டுப்பாளையம், காந்திபுரம் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மட்டுமே பணிக்குத் திரும்பியுள்ளனர். இதனால் வெறும் 20% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. வெளியூர் பேருந்துகளும் இயங்காததால் மக்கள், செல்ல வேண்டிய இடங்களுக்கு போக முடியாமல் தவித்து வருகின்றனர்.

திருச்சி:

திருச்சியைப் பொருத்தவரை பேருந்துகள் அனைத்தும் ஆங்காங்கே போக்குவரத்து பணிமனைகளுக்குக் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளன. இயக்கப்படும் ஒரு சில பேருந்துகளையும் தொழிற்சங்கத்தினர் தடுத்து நிறுத்தி அவற்றை மீண்டும் பணிமனைக்கு கொண்டு வருகின்றனர். இதனால், பயணிகள் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டு செய்வதறியாது தவித்து வருகின்றனர். அரசு பேருந்துகளை இயக்க, தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை என திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

மதுரை:

மதுரை மாவட்டத்தில் காலை 9 மணி வரை நகரத்துக்குள் ஒரு பேருந்துகூட இயங்கவில்லை. இதனையடுத்து எல்லீஸ் நகரில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மட்டும் பேருந்துகளை இயக்கத் தொடங்கினர். தற்போது அங்கு குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயங்குகின்றன.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 5 ஜன 2018