மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

முதல்வர் ஆலோசனை!

முதல்வர் ஆலோசனை!

தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், நேற்று (ஜனவரி 4) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அத்துறை சார்ந்த தொழிலாளர்கள். எனவே, இப்பிரச்சினைக்குத் தமிழக அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர் தமிழக கட்சித் தலைவர்கள்.

போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு 13ஆவது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 23ஆவது சுற்று பேச்சுவார்த்தை நேற்று (ஜனவரி 4) நடந்தது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தொழிலாளர் சங்கங்கள் மற்றும் அத்துறையைச் சார்ந்த அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும், அதனால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதனையடுத்து, நேற்று மாலை முதல் தமிழகமெங்கும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த திடீர் அறிவிப்பால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

போக்குவரத்து ஊழியர் தொழிலாளர் சங்கங்கள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகின்றன. இந்தப் பிரச்சனையில் இனிமேல் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படாது என்று நேற்று உறுதிபடத் தெரிவித்திருந்தார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற போராட்டத்தினால் தமிழகமெங்கும் முற்றிலுமாகப் போக்குவரத்து செயலிழந்துள்ளது. விரைவில் தைப்பொங்கல் வரவிருப்பதால், இந்தப் பிரச்சனை நீடிப்பது குறித்து அதிருப்தி பரவியது. இந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு உடனடியாகத் தீர்வு காண தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடந்து வருகிறது. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழகத்திலுள்ள கட்சித்தலைவர்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலின், திமுக:

முன்கூட்டியே தொழிலாளர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை, போக்குவரத்துத் துறை அமைச்சர் உரிய காலத்தில் அக்கறையுடனும் பரிவுடனும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண முன்வரவில்லை. இதனால் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்று, இன்றைக்குப் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அமைச்சர் அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் உடனடியாக சுமுகமான தீர்வை காண வேண்டும். அதை விடுத்து, ஆளுங்கட்சியின் அண்ணா தொழிற்சங்கத்தைக் கொண்டு பேருந்துகளை ஓட்டுவோம் என்று அறிவித்து, அதற்கான முயற்சிகளை எடுப்பது, அதிமுகவின் வீண் ஜம்பத்தையும், ஆணவப் போக்கையும் வெளிப்படுத்தி, கொழுந்துவிட்டு எரியும் நெருப்புக்குள்ளே விரலை விட்ட குழந்தையின் கதைபோல ஆகிவிடும்.

ராமதாஸ், பாமக:

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நட்டத்தில் இயங்குவதால்தான் ஊழியர்களுக்கு போதிய அளவு ஊதிய உயர்வு வழங்க முடியவில்லை என்ற போக்குவரத்து அமைச்சரின் விளக்கத்தை ஏற்க முடியாது. போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகளும் ஊழலும்தான் நட்டம் ஏற்படக் காரணம். தமிழகத்தில் இயக்கப்படும் 22,000 பேருந்துகளில் கிட்டத்தட்ட 70% பேருந்துகள் காலாவதியானவை.

இயக்குவதற்குத் தகுதியற்ற பேருந்துகளைத்தான் போக்குவரத்துத் தொழிலாளர்கள் உயிரைப் பணயம் வைத்து இயக்குகின்றனர். அவ்வாறு இருக்கும்போது அவர்களுக்கு உரிய ஊதிய உயர்வை 22 சுற்று பேச்சுக்களுக்குப் பிறகும் வழங்க அரசு மறுப்பதை ஏற்க முடியாது. தமிழக அரசின் இப்பிடிவாதத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழக அரசு உடனடியாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசித் தீர்வு காண வேண்டும்.

வைகோ, மதிமுக:

தமிழக அரசு அடக்குமுறையைக் கையாளாமல்,பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்.

ஆர். முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட்:

போக்குவரத்துத் துறை ஊழியர்களின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவைத் தெரிவிக்கிறது. பேச்சுவார்த்தை நட்த்தத் தயார் என்று தொழிற்சங்க்ங்கள் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக முதல்வர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:

ஊதியப் பேச்சுவார்த்தையில் உள்ள சங்கங்கள் நியாயமான ஒப்பந்தத்திற்காக தொடர்ந்து பேசிவந்தனர். ஆனால், தமிழக அரசோ பிரதானமான சங்கங்களைப் புறக்கணித்துவிட்டு பெரும்பான்மைத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாத ஆளும்கட்சியின் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, தொழிலாளர்கள் ஏற்காத ஒப்பந்தத்தை அவர்கள் மீது திணிக்க முயற்சிக்கிறது. அரசு மேற்கொண்டுள்ள தொழிலாளர் நலன்களுக்கு முரணான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசின் தவறான அணுகுமுறையினால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு அரசே பொறுப்பாகும். தொழிலாளர்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கான முயற்சியைக் கைவிட்டு, பிரதானமான சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி சுமுகத் தீர்வு காண வேண்டும்.

கமல்ஹாசன், நடிகர்:

மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தமிழக முதலமைச்சர் தயவாய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுவே, பொங்கலுக்கு அரசு தரும் விலைமதிப்பிலாப் பரிசாகும்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை செய்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த விவகாரத்தில் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்று கருதப்படுகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 5 ஜன 2018