ஸ்டிரைக்குக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முன் அறிவிப்பின்றி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கே. ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “வேலை நிறுத்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து ஊழியர்களை பணிக்குத் திரும்ப உத்தரவிட வேண்டும் “என்று கூறியிருந்தார்.
இந்த மனு இன்று (ஜனவரி 5) நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுபோன்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளதால் வழக்கை ஏற்க நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.