மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

டி.எம்.கிருஷ்ணா நேர்காணல் 2: கலைகளின் எல்லைகள் நெகிழ வேண்டும்

டி.எம்.கிருஷ்ணா நேர்காணல் 2: கலைகளின் எல்லைகள் நெகிழ வேண்டும்

சந்திப்பு: அரவிந்தன்

(கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தனது கலைக்காகவும் சூழலில் எழுப்பும் கலகக் குரலுக்காகவும் கூர்ந்து கவனிக்கப்படுபவர். கர்னாடக இசை உலகில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் கலையை நாம் அணுகும் விதம் குறித்தும் பல்வேறு கூர்மையான கேள்விகளை எழுப்பிவரும் விமர்சகர். இவர் எழுதிய நூல், சங்கீதச் சூழல் குறித்த இவரது விமர்சனங்கள், பல்வேறு கலை வடிவங்களை ஒருங்கிணைத்து இவர் நடத்திவரும் கலை விழாக்கள், எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி எழுதிய கட்டுரை, அண்மையில் எம்.எஸ். பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் வெளியிட்ட கருத்துகள் என எல்லாமே விவாதப் பொருளாகின்றன. இந்த விவாதங்கள் குறித்தும் அவருடைய பரிசோதனைகள் குறித்தும் அவரிடம் நடத்திய உரையாடலிலிருந்து…)

நீங்கள் சென்ற ஆண்டில் ‘பொறம்போக்கு’ என்னும் பாடலைக் கர்னாடக இசை ராகத்தில் அமைத்துப் பாடினீர்கள். எண்ணூர் கழிமுகத்தில் இயற்கை வளம் சிதைக்கப்படுவதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் அந்தப் பாடலைக் கேட்டுவிட்டுத்தான் கமல்ஹாசன் எண்ணூருக்குச் சென்று பார்த்தார். இந்தப் பாடலை நீங்கள் பாடியதன் காரணம் என்ன?

கடந்த சில ஆண்டுகளாகவே நண்பர்கள் சிலருடன் இணைந்து சில பரிசோதனைகளைச் செய்துகொண்டிருக்கிறேன். கர்னாடக இசையை அதற்கென ஆகிவந்த ரசிகர்களின் வட்டத்தைத் தாண்டிக் கொண்டுசெல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறேன். கர்னாடக இசைக்கென்று சில எல்லைகள் உருவாகிவிட்டன. அதன் எல்லைகளை விரிவுபடுத்தும் முயற்சி இது. பலரும் பலவிதங்களில் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். சென்னை இசை விழாவின்போது எலியட்ஸ் கடற்கரை அருகில் உள்ள ஊரூர் ஆல்காட் குப்பம் என்னும் பகுதியில் நண்பர் நித்யானந்த் ஜெயராமன், சரவணன் போன்ற சிலருடன் இணைந்து இசைக் கச்சேரிகள், நடனக் கச்சேரிகளை நடத்திவருகிறோம். விஜய் சிவா, உன்னிகிருஷ்ணன், பரத் சுந்தர் போன்ற பாடகர்கள் அங்கே வந்து பாடியிருக்கிறார்கள். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

இதுபோன்ற பரிசோதனைகளின் ஒரு பகுதியாகத்தான் பொறம்போக்கு பாடலும் அமைந்தது. தமிழில் நிறைய வட்டார வழக்குகள் உள்ளன. குறிப்பாகச் சென்னையில் சாமானிய மக்கள் பலர் பேசும் சென்னைத் தமிழ். இத்தகைய வட்டார வழக்குகளில் கர்னாடக இசையைப் பாட முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன். அதிலும் சென்னைத் தமிழைக் கர்னாடக இசையில் கொண்டுவர முடியுமா என்று யோசித்தேன். அப்போதுதான் ஜெயராமன் இந்தப் பாடலைக் கொண்டுவந்தார். பொறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது, இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடல் இது. ஒருபக்கம் மொழி, இசை சார்ந்த பரிசோதனை. இன்னொருபக்கம் சமூக விழிப்புணர்வு. இவை இரண்டும் இருந்ததால் இதைப் பாடலாமே என்று நினைத்தேன். பாடினேன். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

கர்னாடக இசையின் ஆகிவந்த ரசிகர்கள் இதை எப்படி எதிர்கொண்டார்கள்?

நான் என் கச்சேரியிலும் இதைப் பாடியிருக்கிறேன். பலரும் வரவேற்றார்கள். ரசித்தார்கள்.

ஊரூர் ஆல்காட் பரிசோதனையின் அடுத்த கட்டம் என்ன?

மைய நீரோட்டம் என்று சொல்லப்படும் இசையை அதற்கு அறிமுகம் இல்லாதவர்கள் மத்தியில் கொண்டுசெல்வது இதன் ஒரு பகுதிதான். இதை மட்டும் செய்தால், என்னுடைய இசை உயர்ந்தது, அதை நான் உன்னிடம் வந்து பாடுகிறேன் என்று சொல்வதுபோல ஆகிவிடும். அதில் எனக்கு ஒப்புதல் இல்லை. கலைகளில் உயர்வு தாழ்வு என்று எதுவும் இல்லை. எனவே, அப்பகுதியில் உள்ள மக்களின் கலையைப் பிற இடங்களுக்குக் கொண்டுசெல்லும் முயற்சியையும் நாங்கள் மேற்கொள்கிறோம். சென்ற ஆண்டு மயிலாப்பூர் ராக சுதா ஹாலில் பறை இசை, கானா பாடல் முதலானவற்றை நிகழ்த்தும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தோம்.

மயிலாப்பூர் ரசிகர்கள் இந்தக் கச்சேரிக்கு வந்தார்களா?

வந்தார்கள். ரசித்தார்கள். இப்படி வெவ்வேறு கலை வடிவங்களுக்கிடையே இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம்.

எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய பாடல்களை நீங்கள் கர்னாடக இசையில் மெட்டமைத்துப் பாடிக் கச்சேரி செய்தீர்கள். இந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

பெருமாள்முருகன் மாதொருபாகன் பிரச்னைக்குப் பிறகு எழுதாமல் இருந்த காலங்களில் அவருக்குள் இருந்த வலியையும் வேதனையையும் சொல்லும் கவிதைகள் அவை. அந்தக் கவிதைகளை அவர் விருத்தங்களாகவே எழுதியிருக்கிறார். அந்த விருத்தங்களை என்னிடம் கொடுத்து, இவற்றை எனக்காகப் பாடிப் பதிவுசெய்து தர முடியுமா என்று கேட்டார். அந்தப் பாடல்களை நான் படித்துப் பார்த்தேன். புறக்கணிப்பின் வலியும் தனிமைப்படுத்தப்பட்டதன் வேதனையும் மௌனத்தின் அழுகையும் அந்தப் பாடல்களில் கேட்டன. உங்களுக்காக மட்டுமல்ல. பொது நிகழ்ச்சியிலேயே இவற்றைப் பாடுகிறேன் என்று சொல்லி அவற்றை வைத்து ஒரு கச்சேரி செய்தேன்.

அந்தக் கச்சேரி பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இசையமைத்துப் பாடுவதற்காகவென்றே சில கீர்த்தனைகளை எழுதித்தர முடியுமா என்று நான் பெருமாள்முருகனிடம் கேட்டேன். கர்னாடக இசையில் வழக்கமான உள்ளடக்கங்களைத் தவிர்த்துவிட்டு மாறுபட்ட விஷயங்களை வைத்துப் பாட வேண்டும் என்று விரும்பினேன். உங்களுக்குப் பிடித்தமான எந்த விஷயத்தை வேண்டுமானாலும் வைத்து எழுதுங்கள் என்று சொன்னேன். அவரும் சில கீர்த்தனைகளை எழுதிக்கொடுத்தார். அந்தக் கீர்த்தனைகளுக்கு மெட்டமைத்துக் கர்னாடக இசை முறைப்படி நாமக்கல்லில் ஒரு கச்சேரி நடத்தினேன். ரசிகர்கள் மத்தியில் இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அவருடைய கீர்த்தனைகளை என் கச்சேரிகளில் பாடிவருகிறேன்.

இதில் விசேஷம் என்னவென்றால், மேத்தங்காடு, இத்தேரி என்பன போன்ற வட்டார வழக்குகள் இந்தப் பாடல்களில் இருந்தன. கர்னாடக இசையில் புதிய சொற்களை அறிமுகப்படுத்தவும் புதிய பொருள்களைக் கர்னாடக இசையில் பாடவும் இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டேன். பொறம்போக்கு பாடலில் இருந்துச்சி என்பன போன்ற சென்னையில் புழங்கும் இயல்பான சொற்கள் பல இருக்கும். சென்னைத் தமிழில் பாடியதுபோலவே கொங்கு வட்டாரத் தமிழிலும் பாடினேன். இசையின் இலக்கணங்களில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளாமல் இவற்றைச் செய்தேன்.

கலையின் வெவ்வேறு வகைகளில் நீங்கள் செய்துவரும் பரிசோதனைகள் வேறு என்ன?

அடையாறில் உள்ள அவ்வை ஹோம் என்னும் அமைப்பில் உள்ள பெண்களை வைத்து கடம், கஞ்சிரா, பறை ஆகிய மூன்றின் இணைப்பிசைக் கச்சேரியையும் ஊரூர் ஆல்காட் குப்பத்தில் நடத்தினோம். இதற்காக அந்த இல்லத்தின் பெண்களுக்குப் பயிற்சியும் கொடுக்கப்பட்டது. தற்போது அவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

ஊரூர் ஆல்காட் குப்பத்தில் ஆண்டுதோறும் இசை விழா நடத்துகிறோம். கர்னாடக இசை, பரதநாட்டியம், கானா பாடல், பறை இசை எனப் பலவிதமான கலைகளும் சங்கமிக்கும் விழா இது. குப்பத்தில் கடற்கரையில் மேடை அமைத்துக் கலைகள் நிகழ்த்தப்படுவதுடன் இந்த விழா முடிந்துவிடுவதில்லை. கலைஞர்கள் பேருந்தில் பயணம் செய்து பேருந்துக்குள் பாடவும் ஆடவும் செய்கிறார்கள். பயணிகள் இதை வெகுவாக ரசிக்கிறார்கள்.

எதற்காக இந்த மாதிரிப் பரிசோதனைகள்?

கலை என்பது ஒரு குறிப்பிட்ட இடம், சூழல், பிரிவினர் ஆகியவற்றுக்குள் முடங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான். கலையை மக்களிடம் கொண்டுசெல்லும் முயற்சி இது. செவ்வியல் கலைகள், நாட்டார் கலைகள், கானா போன்ற வெகுமக்கள் கலைகள் முதலான பல்வேறு கலை வடிவங்களை அவற்றுக்கென்று வரையறுக்கப்பட்டுவிட்ட எல்லைகளைத் தாண்டிக் கொண்டுசெல்வதே எங்கள் நோக்கம்.

இதுபோன்ற நிகழ்வுகளின் தாக்கம் என்ன?

எலியட்ஸ் கடற்கரை அருகே நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பலருக்கு அவர்கள் நடக்கும் இடத்துக்குப் பக்கத்திலேயே ஊரூர் ஆல்காட் குப்பம் என்னும் ஊர் இருப்பதே தெரியாது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சிகள் நடப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே பலரும் எட்டிப் பார்த்தார்கள். அந்த ஊரைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள். இப்போதெல்லாம் நடைப்பயிற்சி செய்யும் சிலர் குப்பத்தின் சாலைவரை நடை பயில்கிறார்கள். இந்தக் கச்சேரிகள் பற்றிப் பத்திரிகைகளில் படித்துவிட்டுச் சிலர் வருகிறார்கள். மற்ற பகுதிகளிலிருந்து இங்கே வரும் சிலர், அந்தப் பகுதியில் இருக்கும் சில பிரச்னைகளை அரசு அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். அதன் விளைவாக இங்கே புதிய கால்வாய் வசதி செய்யப்பட்டுள்ளது.

கட்டைக்கூத்து நிகழ்வுடன் நீங்கள் பாடியதாகச் செய்தி வந்ததே?

கட்டைக்கூத்தும் செவ்வியல் இசையும் என்னும் தலைப்பில் மும்பையில் ஒரு நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. அதில் சங்கீதா சிவகுமார், பி.ராஜகோபால் (கட்டைக் கூத்துக் கலைஞர்), நான் ஆகியோர் பாடினோம். கட்டைக்கூத்துடன் இணைந்து பாடினோம். சில பாடல்கள் பொதுவானவை. ஓரிரு காட்சிகளில் அவற்றுக்குப் பொருத்தமான கர்னாடக இசைப் பாடல்களைப் பாடினோம். கூத்துக்குப் பின்னணி இசை இருக்கும் அல்லவா, அதுபோலவே எங்கள் பாடல் அமைந்தது.

இந்த நிகழ்ச்சிக்காக நான் மும்பைக்குச் சென்றதும் மும்பையில் வேறொரு நிகழ்ச்சிக்காக நண்பர் பெருமாள்முருகனும் மும்பையில் இருந்தார் என்பது தெரியவந்தது. நான் இந்த நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லி, கட்டைக்கூத்தில் அரங்கேற்றப்படும் கதை பற்றியும் சொன்னேன். திரௌபதி துகிலுரிதல், 18ஆம் நாள் போர் ஆகிய காட்சிகளை அவர்கள் அன்று நிகழ்த்தினார்கள். சபையில் திரௌபதி கேட்கும் கேள்வியை மையமாக வைத்து பெருமாள்முருகன் ஒரு கீர்த்தனையை இயற்றினார். அதற்கு மெட்டமைத்து நான் பாடினேன்.

இவையெல்லாம் கலைகளின் ஆகிவந்த எல்லையை விரிவுபடுத்துவதுடன், கலைகளுக்கிடையேயான உறவையும் வளர்க்கின்றன என்று நம்புகிறேன்.

இசையைத் தவிர உங்களுக்குப் பிடித்த மற்ற அம்சங்கள் எவை?

நிறைய படிப்பேன். புனைவுகளைக் காட்டிலும் மற்ற வகை எழுத்துகளில்தான் ஆர்வம் அதிகம்.

தமிழில் வாசிப்புப் பழக்கம் உண்டா?

அதிகம் இல்லை. இப்போதுதான் தொடங்கியிருக்கிறேன்.

வாசிப்பைத் தாண்டி மற்ற ஆர்வங்கள்?

மலையேற்றம். ட்ரெக்கிங் என்று சொல்லப்படும் மலையேற்றம் என்பது வேறு. இது Mauntain Claimbing. கயிற்றைப் பிடித்துக்கொண்டு உயரமான மலைகளில் ஏறுவது. இது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆண்டுக்கு ஒருமுறை கிளம்பிவிடுவேன்.

மலையேற்றத்துக்கு எங்கெல்லாம் போயிருக்கிறீர்கள்?

இமயமலை, ஸ்டூக் காங்க்ரி (லடாக்), எல் புரூஸ் (ரஷ்யா), பெகீனோ ஆல்பமேயோ (பொலிவியா), கயம்பே (ஈக்விடார்) ஆகிய மலைகளில் ஏறியிருக்கிறேன்.

யுனெஸ்கோ நிறுவனம் சென்னையைப் படைப்பாக்க நகரங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இப்படி அறிவித்ததற்கு, இந்த நகரத்தில் இருக்கும் கர்னாடக இசைச் சூழல்தான் முக்கியக் காரணமா?

நிச்சயமாக மகிழ்ச்சிதான். சென்னை கலை சார்ந்த நகரம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது ஒற்றைக் கலை சார்ந்தது அல்ல. பல்வேறு கலைகளின் சங்கமம். கர்னாடக இசை மட்டுமே சென்னையின் அடையாளம் அல்ல. கானா பாடலும் பறை இசையும் தெருக்கூத்தும்கூடச் சென்னையின் அடையாளங்கள்தாம். அவற்றையும் நாம் மதித்து அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை. இப்படிப்பட்ட சென்னையில் பல்வேறு இசை வடிவங்களையும் உள்ளடக்கும் இசை விழாக்கள் நடக்க வேண்டும். அதுதான் சென்னையின் கலை முகத்தைச் சரியான விதத்தில் வெளிப்படுத்தும்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வெள்ளி 5 ஜன 2018