மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

வயலில் உழுதுகொண்டிருந்தார் அந்த விவசாயி. காளைக்குக் கஷ்டம் தெரியக் கூடாது என்பதற்காக அதனுடன் பேசிக்கொண்டே உழுதார்.

“மாடு நீ, முன்னால போற. மனுஷன் நான், பின்னால வர்றேன். பார்த்தியா... இதான் என் தலையெழுத்து. விவசாயத் தொழில்ல நீதான் முன்னாடி, நான் பின்னாடிதான்” என்று முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டு சொன்னார்.

‘அடடா... இந்த மனித சாதிதான் எவ்வளவு மேலானது’ என்று நினைத்து சிலிர்த்துப்போனது காளை.

விவசாயி தொடர்ந்தார்... “நீயும் நானும் இந்த விவசாயத்தில் கூட்டாளி. அதனால வர்ற விளைச்சல்ல உனக்கு பாதி; எனக்கு பாதி.”

காளைக்குத் தலைச்சுற்றியது. ‘எவ்வளவு நேர்மை? பாதிக்குப் பாதி பங்குதர யாருக்கு மனசு வரும்?’

“பாதிக்குப் பாதின்னா எப்படி பங்கு வைக்கலாம்? நீ முன்னால போறதால முன்னால கிடைக்கறது உனக்கு. பின்னால கிடைக்கறது எனக்கு. சரியா?” என்றார் விவசாயி.

‘முன்னால வர்றது எல்லாமே எனக்கா?’ - பெருமிதமாய் பார்த்தது காளை.

விதை விதைத்து நாற்று நட்டு சில காலத்தில் பச்சைப் பசேலென்று மாறியிருந்தது வயல். மாட்டுக்கு வாயெல்லாம் எச்சில். விவசாயியைப் பார்த்தது.

“முதல்ல வந்த இதெல்லாம் உனக்கு. இதுல அப்புறமா ஒண்ணு வரும். அதுமட்டும் எனக்கு.”

‘சரி’ என்று தலையாட்டியது காளை.

கொஞ்ச நாள்களில் நெற்கதிர்கள் குதிரைவால்போல விளைந்து தரை பார்த்துக் கிடந்தன.

அறுவடை நாள் வந்தது.

முதலில் வந்த வைக்கோல் காளைக்கு. பின்னர் வந்த நெல் விவசாயிக்கு.

மாடு கோர்ட்டுக்கா போக முடியும்?

பாகப்பிரிவினையில் அநீதியுள்ளதென்று பரிதாபமாகப் பார்த்தது காளை.

“கவலைப்படாதே... நெல்லிலும் பங்கு தர்றேன். அதிலும் நமக்கு பாதிப் பாதி.?

சோகத்துடன் தலையாட்டியது காளை.

நெல்லை உலர வைத்து அரைத்துப் புடைத்ததும் உமியும் தவிடும் முன்னால் வந்தது. அது காளைக்கு.

பின்னால்வந்த முத்து முத்தான அரிசி முழுமையும் மனிதனுக்கு.

இந்தப் பங்கீட்டிலும் நியாயமில்லையென்று கண்ணீர்விட்டது காளை.

“அழுவாதே. இந்த அரிசியிலும் உனக்கு பாதி, எனக்கு பாதி... சரியா?” என்றார் விவசாயி.

அதற்கும் ‘சரி’ என்று தலையாட்டிய அந்த வாயில்லா ஜீவன், அரிசியை நோக்கிச் சென்றது.

“பொறு... அரிசியைச் சோறாக்கி, அதில் முதலில் வருவது உனக்குதான். அடுத்து வருவதுதான் எனக்கு.”

சோகத்துடன் தலையாட்டியது காளை.

அரிசியைச் சோறாக்கி வடித்தபோது முதலில் வந்த சோற்றுக்கஞ்சி காளைக்கு. அடுத்துவந்த சோறு மனிதனுக்கு.

காளை முரண்டு பிடித்தது.

இந்தமுறை, ‘முன்னால மனிதனுக்கு, பின்னால மாட்டுக்கு’ என்று ஒப்பந்தத்தை மாற்றும்படி கெஞ்சி அழுதது.

‘சரி’ என்று ஏற்றுக்கொண்ட விவசாயி அப்படியே செய்தார்.

பொங்கல் திருவிழா வந்தது.

முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு. அடுத்து வந்த பொங்கல் மாட்டுப் பொங்கல்.

அடேய் இருங்கடா... இன்னும் பத்து நாள்கள் இருக்கு. அதுக்குள்ள மாட்டுப் பொங்கல் கதையா? போ... போயி... தாமரைய ஏன் லோகோவுல இருந்து நீக்குனாருன்னு, ‘இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம், இதுதான் காரணம் என ஊகிக்கிறேன்’ அப்படின்னு 14 பக்கக் கட்டுரை எழுதிகொண்டுவா... போ...

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

வெள்ளி 5 ஜன 2018