மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 28: அருணாச்சலம் முருகானந்தம்

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 28: அருணாச்சலம் முருகானந்தம்

நித்யா ராமதாஸ்

வாழ்க்கையின் அடித்தட்டிலிருந்து மேலே உயர்ந்து, சாதனைகளைச் செய்த நபர்களின் கதைகளைச் சொல்வதே இந்தக் கட்டுரைகளின் நோக்கமாக இருந்துவருகிறது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன் வெளிவந்த 'பேட் மேன்' (Pad Man) என்ற இந்தித் திரைப்படத்தின் ட்ரெய்லர் அதிக லைக்ஸ் மற்றும் பாராட்டுகளைக் குவித்தது. உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் உண்மையான நாயகன்தான் அருணாச்சலம் முருகானந்தம். இந்தியா உள்ளிட்ட பல வளர்ந்துவரும் நாடுகளில் நிலவிவரும் சுகாதாரப் பிரச்னைக்கு கச்சிதமான தீர்வாக இவருடைய தொழில் விளங்குவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தொழில் தொடங்குவதில் சோதனைகள் ஒருபுறம், சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல்கள் மறுபுறம். அருணாச்சலம் முருகானந்தம் கடந்து வந்த கடினமான பாதையை இந்தக் கட்டுரையில் காண்போம்.

மனைவியின் சிக்கல்

அருணாச்சலம் முருகானந்தம் கோயம்புத்தூர் நகரில் 1962ஆம் ஆண்டு பிறந்தார். பஞ்சு மற்றும் நூலாலையில் பணிபுரிந்த இவரின் தந்தை இறந்துவிடவே குடும்பத்தின் மொத்த பொறுப்பும் அருணாச்சலத்தைச் சேர்ந்தது. இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் சராசரி மாணவர்களைப் போல ஆரம்பித்தது அருணாச்சலத்தின் வாழ்க்கை. தனது குடும்பத்தில் இருந்த ஏழ்மை காரணத்தினால் பள்ளிப்படிப்பை முடிக்க முடியாத நிலையினாலும் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பினாலும் பல்வேறு சிறு வேலைகளைச் செய்து வந்தார். இந்த நிலையில் அருணாச்சலத்திற்கு திருமணம் நடந்தது. திருமண வாழ்க்கை மூலம் இவருக்குக் குடும்ப பொறுப்பு கூடியது மட்டுமின்றி, பெண்களுக்கு ஏற்படும் சராசரி உடல் மாற்றங்களைப் பற்றியும் தெரியவந்தது.

மனைவி சாந்தி அவ்வப்போது ஏதோ ஒன்றை மறைத்து எடுத்துச் செல்வதை அருணாச்சலம் கவனித்துவந்தார். அவை என்னவென்று பார்க்கும்போது, அழுக்கான கந்தல் துணிகளை மட்டுமே சாந்தி மாதவிடாய் சமயத்தில் உபயோகித்து வந்ததாக அவருக்குத் தெரியவந்தது. “சானிட்டரி பேட்களை உபயோகிக்கலாமே என்று நான் அவளைக் கேட்டபோது, அவை எல்லாம் மிகவும் விலை உயர்ந்தவை. தவிர மாதத்துக்கு சானிட்டரி பேட்களை வாங்க வேண்டுமென்றால், பால் வாங்குவதில் சிக்கல் ஏற்படும் என்றும் என் மனைவி விளக்கினாள்” என்று பல பேட்டிகளில் அருணாச்சலம் விளக்குகிறார். மனைவியின் மூலம், கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் உடலளவிலான பிரச்னைகள் மட்டுமின்றி, சரியான சுகாதாரமின்றி கந்தல் துணிகளை நம்பி நாள்களைக் கழிக்கும் கசப்பான உண்மை அருணாச்சலத்துக்குத் தெரியவந்தது. பஞ்சு கொண்டு தயாரிக்கப்படும் பேட்களைத் தயாரிக்கத் தேவையான பொருட்செலவைவிட நாற்பது மடங்கு அதிகமாக கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது என்பதை தனது ஆரம்ப கால ஆய்வுகள் மூலம் அருணாச்சலம் தெரிந்துகொண்டார். மனைவியின் கஷ்டத்தைப் போக்கவேண்டி, தானாக சானிட்டரி பேட்களைத் தயாரிக்கும் முழு முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் அருணாச்சலம்.

வேதனைகளும் தோல்விகளும்

2000ஆம் ஆண்டில் தனது ஆய்வுகளை சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்களுடைய தயாரிப்பைக் கவனித்ததன் மூலம், சாதாரண பஞ்சை ஒரு வலை துணியில் சுற்றி முதலில் மனைவியிடம் உபயோகிக்க தந்தார் அருணாச்சலம். “ஆனால், நான் நினைத்ததைப் போல், பஞ்சு சரியாக உறிஞ்சும் தன்மை கொண்டதாக இல்லை. மேலும், அது அசெளகரியத்தைத் தந்தது” என்று தனது முதல் ஆராய்ச்சியின் தோல்விகளைப் பல நேர்காணல்களில் பகிர்ந்துகொண்டுள்ளார் அருணாச்சலம். ஆரம்பத்தில் சில சறுக்கல்களைச் சந்தித்திருந்தாலும், தொடர்ந்து வேறு சில பொருள்களையும், துணிகளையும் உபயோகித்து சிறந்த பேடைத் தயாரிக்க முனைப்புடன் செயல்பட்டார். தான் தயாரிக்கும் நாப்கின்கள் சரியாக செயல்படுகிறதா என்று தெரிந்துகொள்ள, மருத்துவக் கல்லூரி மாணவிகளிடம் அளித்து கருத்துகளை பதிவு செய்யும் தாள்களைத் தந்தார்.

“'உடல் கூறுகளைப் பற்றி நன்கு தெரிந்த மாணவர்கள் என்பதால், நான் தயாரித்த நாப்கின்களை அவர்களிடம் அளித்தேன். ஒரு நாள் தாள்களை திரும்பப் பெற்றுக்கொள்ளச் சென்றபோது, இரண்டு மாணவிகள் மட்டும் எல்லா தாள்களையும் நிரப்பிக்கொண்டிருந்தனர். எனக்கு இது போன்ற கருத்துகள் சரியாக இருக்காது என்பதால், அன்று முதல் நானே நாப்கின்களை அணியத் தொடங்கினேன்” என்று குறிப்பிடுகிறார்.

கால்பந்துக்குள் ஆட்டின் ரத்தத்தை நிரப்பி, வயிற்றுடன் கட்டி, அதன்பின் நாப்கின் அணிந்துகொள்வார் அருணாச்சலம். இது போல செயற்கையாக மாதவிடாய் ஏற்படுத்திக்கொண்டு தனது ஆய்வுகளுக்கு தானே பிரதிநிதியாக மாறினாலும், சில சமயம் வயிற்றுப்பகுதியிலுள்ள துணியிலிருந்து ரத்தம் கசிந்ததால், ஊரில் மற்றவர்கள் அருணாச்சலத்தை தப்பான நபர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினர். அக்கம் பக்கத்தினருடைய வார்த்தைகளால் அருணாச்சலத்தின் ஆய்வுகளை அவமானமாகக் கருதிய அவரது மனைவி சாந்தி அவரை விட்டு விலகி வாழத் தொடங்கினார். மனைவிக்காகத் தொடங்கிய செயலால், மனைவி விட்டு விலகினாலும், தனது செயல்களில் தொடர்ந்து சிரத்தையாக செயல்பட்டார் அருணாச்சலம். அடுத்த கட்டமாக, சில மருத்துவ மாணவர்களிடமிருந்து அவர்கள் உபயோகித்த நாப்கின் பேட்களைப் பெற்று, அதன் பொருள்களை ஆராய்ந்தார்.

“ஒருமுறை நான் எனது வீட்டின் பின்பக்கம் இவ்வாறு செய்கையில், எனது தாயார் பார்த்துவிட்டார். ஊரே திரும்பும்படி அலறியது மட்டுமல்லாது, எனது சகோதரிகளிடம் சென்று வசிக்கலானார். மனைவி, தாயார் துணையில்லாமல் ஊர் மக்களின் தப்பான பார்வைக்கும் ஆளானேன். அந்தக் காலங்கள் சற்று கடினமானதாகவே எனக்கு அப்போது இருந்தது” என்று தனது ஆரம்பக் கால சிக்கல்களைப் பற்றி சில இடங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார் அருணாச்சலம்.

தொடர் ஆய்வுகளும் ஐஐடியின் உந்துதலும்

உடனிருந்த உறவுகள் அனைவரும் விலகிச்சென்றாலும், ஆரம்பித்த காரியத்திலிருந்து பின்வாங்காது அருணாச்சலம் தொடர்ந்து உழைத்தார். இரும்பு ஆலைகளில் வேலை செய்து குறைவான பணம் இருந்தமையால், பேராசிரியர் ஒருவருக்கு வீட்டுவேலை செய்து, அவருடைய உதவியுடன் பல அயல்நாட்டு நிறுவனங்களிடமிருந்து அவர்கள் உபயோகிக்கும் பொருள்களின் மாதிரிகளை வாங்கினார். “செல்லுலோஸ் எனப்படும் ஒரு வகையான நார் பொருளே அந்த நிறுவனத்தின் நாப்கின்களில் உபயோகிக்கப்படுவதை அறிந்துகொண்டேன். அதன்பின், நானே அந்தப் பொருளைக் கொண்டு, நாப்கின் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து, நாப்கின் தயாரிக்கத் தேவையான முதற் பொருள் என்ன என்பதைத் தெளிவாக நான் தெரிந்துகொண்டேன்.”

பன்னாட்டு நிறுவனங்களைப் போல இல்லாமல், மிகவும் எளிதான முறையில் செயல்படும், மலிவான எந்திரம் ஒன்றை முருகானந்தம் முதலில் வடிவமைத்தார். ஆரம்பத்தில் மரத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த எந்திரத்தை சென்னை ஐஐடியில் உள்ள ஆய்வாளர்களிடம் காண்பித்தார். இவ்வளவு சின்ன எந்திரத்தைக் கொண்டு, பல கோடியில் லாபம் பார்க்கும் நிறுவனங்களுடன் எவ்வாறு போட்டியிட முடியும் என்ற சந்தேகமும், கவலையும் அங்கிருந்த ஆய்வாளர்களுக்கு எழுந்தாலும், இந்தியா அளவில் நடைபெற்ற ஒரு போட்டிக்கு, இவரது எந்திர வடிவத்தை அனுப்பி வைத்தனர். மிகச் சிறிய முதலீட்டில் செய்யக்கூடிய வெற்றிகரமான தொழில்களுக்கான அந்தப் போட்டியில், அருணாச்சலத்தின் எந்திரத்துக்கு முதற்பரிசு அப்போதைய ஜனாதிபதியான பிரதிபா பாட்டீலிடமிருந்து கிடைத்தது. “அந்தப் பரிசு எனக்கு இழந்த எனது உறவுகளை மீண்டும் தந்தது” என்கிறார் அருணாச்சலம்.

உலகெங்கும் விரிவடைந்த பெயர்

பணம் மற்றும் லாபத்துக்காக மற்றவர்கள் தொழில் தொடங்கிய காலத்தில் அருணாச்சலத்தின் எண்ணம் வேறாக இருந்தது. பூக்களிலிருந்து பாதிப்பின்றி தேனை எடுக்கும் பட்டாம்பூச்சியைப் போலவே தனது தொழில் திட்டத்தை அருணாச்சலம் வகுத்திருந்தார். மாதவிடாய் மற்றும் பெண்களுடைய உடலளவு பிரச்னைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது மற்றும் தெரிந்துகொள்வதை இன்றும் இந்தியாவில் பலர் சங்கடமாக எடுத்துக்கொள்வது நிதர்சமான உண்மை. இதுபோன்ற மக்களிடமும், குறிப்பாக பெண்களிடம் தனது எந்திரம் சேர வேண்டும் என்பதே இவருடைய குறிக்கோளாக இருந்தது.

“என்னைப் பொறுத்தவரையில், பல மரணங்கள் ஏழ்மை காரணமாக மட்டுமல்லாமல், அறியாமை காரணமாகவும் ஏற்படுகிறது. எனவே, அந்த அறியாமையைப் போக்க என்னுடைய இந்தத் திட்டத்தை நமது நாட்டிலுள்ள பெண்களுக்குக் கொண்டு சேர்க்கலானேன்.” கிராமப்புறப் பெண்களுக்கு, இந்த எந்திரத்தை உபயோகிக்க கற்றுக்கொடுத்து, அதன் மூலம் அவர்களுக்கான வேலைவாய்ப்பாகவும் அருணாச்சலம் அமைத்துத் தந்தார். முதலில் 250 எந்திரங்களைத் தயாரித்து பல என்ஜிஓ மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ராஜஸ்தான், பீகார், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்த பெண்களுக்கு அறிமுகப்படுத்தினார். சிறு சிறு அடிகளாக எடுத்து வைத்து இன்று கிட்டத்தட்ட 23 மாநிலங்களில் தனது எந்திரத்தை அறிமுகப்படுத்தி, வேலைவாய்ப்பை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டுமல்லாது, கென்யா, நைஜீரியா, பங்களாதேஷ் போன்ற உலகெங்கும் உள்ள நாடுகளில் தனது எளிமையான எந்திரத்தைக் கொண்டுசேர்த்திருப்பது இங்கு கூடுதல் தகவல்.

அருணாச்சலத்தின் இந்த எளிமையான மற்றும் மலிவான எந்திரம் மூலம் பல புகழையும் பெற்றுள்ளார். தனியொரு ஆணாக நின்று பெண்களுடைய சுகாதாரத்திலும், அவர்களுடைய சுய நன்மைக்காகவும் பாடுபடும் இவருடைய இந்த முயற்சி பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ் போன்ற பிரபலமானவர்களுடன் இவருக்கு பழக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், புகழ்பெற்ற டைம்ஸ் பத்திரிகையில் சிறந்த 100 நபர்கள் என்ற பட்டியலிலும் இவர் இடம்பெற்றுள்ளார். தவிர 2016ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது.

பள்ளிப்படிப்பை முடிக்காத இவர், இன்று இந்தியாவில் பல ஐஐடி மற்றும் ஐஐஎம் மாணவர்களுக்கு கெஸ்ட் லெக்ச்சர் எனப்படும் குறுநேர வகுப்புகள் எடுத்து வருகிறார். இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் இவர் உரை மற்றும் வகுப்புகள் எடுத்துள்ளார். நாம் எடுக்கும் முயற்சியில் யாருடைய உந்துதல் இல்லையென்றாலும், தன்னம்பிக்கையும், எடுத்த காரியத்தை முடித்தே தீர வேண்டும் என்ற உத்வேகமும் இருந்தால் போதும், நமது முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும் என்பதற்கு இவருடைய வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டு.

படங்கள்: கூகுள்

கட்டுரையாளர்: நித்யா ராமதாஸ்

இவர் குமுதம் சிநேகிதி மாதமிருமுறை இதழில் முழு நேர நிருபராகப் பணியாற்றியவர். புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழில் பயிற்சி நிருபராக இருந்தவர். லைஃப் ஸ்டைல், ஃபேஷன், கலை மற்றும் மியூசிக் சார்ந்த கட்டுரைகளை எழுதிவதில் தேர்ந்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். தற்போது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வெள்ளி 5 ஜன 2018