மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

நிறைவேறுமா முத்தலாக் மசோதா?

நிறைவேறுமா முத்தலாக் மசோதா?

தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த மசோதாவை மாநிலங்களவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டுமென்ற எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை, மத்திய பாஜக அரசு இதுவரை ஏற்கவில்லை. இதனால், இந்த கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (ஜனவரி 5) இதுபற்றிய விவாதம் எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது.

முத்தலாக் நடைமுறைக்கு தடை விதித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. அதோடு, இதற்கு எதிரான சட்டத்தை ஆறு மாதங்களுக்குள் அமல்படுத்துமாறு மத்திய அரசைப் பணித்தது. இதையடுத்து, தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றும் ஏற்பாடுகளைச் செய்தது மத்திய அரசு. கடந்த வாரம் இந்த மசோதா மக்களவையில் உடனடியாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதற்கு மாறான சூழல் மாநிலங்களவையில் நிலவுகிறது.

ஜனவரி 3ஆம் தேதியன்று இந்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். ஆனால், தேவையான மாற்றங்களைச் செய்வதற்காக, இந்த மசோதாவைத் தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டுமென்று தீர்மானம் கொண்டுவந்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் சர்மா.

இதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்கவில்லை. “இந்தச் சட்டத்தை உடனடியாகக் கொண்டுவருமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதேவேளையில், ஆனந்த் சர்மா தீர்மானம் கொண்டுவருவது சம்பந்தமாக முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்கவில்லை. அதனால், இதை ஏற்கத் தேவையில்லை” என்றார் ஜேட்லி. மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யும்போது தீர்மானம் கொண்டுவரலாம் என்று அவைத்தலைவர் வெங்கையா நாயுடு குறிப்பிட்டதாகச் சொன்னார் ஆனந்த் சர்மா.

இந்த விவாதம் நடந்துகொண்டிருக்கும்போதே, மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார் காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத். இதை திமுக, அதிமுக, திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரித்தன.

மாநிலங்களவை மீண்டும் கூடியபோதும், முத்தலாக் விவகாரத்தை எழுப்பினார் ஆசாத். அப்போது, “இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இருப்பதுபோன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. முத்தலாக் முறையை கிரிமினல் குற்றமாகக் கருதுவதை நாங்கள் எதிர்க்கிறோம். முத்தலாக் கொடுத்த கணவனைச் சிறைக்கு அனுப்பினால், அந்த மனைவிக்கும் குழந்தைகளுக்கும் மத்திய அரசு இழப்பீடு தருமென்று உறுதியளிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். இதை ஏற்க முடியாது என்று ஜேட்லி சொன்னதால், மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. இந்த நிலையே, நேற்றும் தொடர்ந்தது.

நேற்றும் இந்த மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இது தொடர்பான விவாதம் நேற்று மாலை 6 மணிக்கு மாநிலங்களவையில் நடந்தது. காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது என்றும் அதனால் இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் குறை கூறியது பாஜக. இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சிகள், பாஜகதான் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது என்று குற்றம்சாட்டின.

“பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதில் எதிர்க்கட்சிகள் தெளிவாக உள்ளன. ஆனால், ஆளும் பாஜகவின் எண்ணம் இந்த மசோதாவில் தெளிவாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ பிரையன்.

இதற்குப் பதிலளித்த மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி, “பெண்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்க விரும்பினால், இப்போதே முடிவெடுங்கள்” என்றார். இவர்களது ஆவேசப் பேச்சினால், முத்தலாக் மசோதா நேற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை.

மாநிலங்களவை தேர்வுக்குழுவினால் முத்தலாக் மசோதா பரிசீலிக்கப்பட வேண்டுமென்றும், அதில் சில மாற்றங்களை செய்த பிறகே சட்டமாக்கப்பட வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றன. தேர்வுக்குழுவில் அனைத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் இடம்பெற வேண்டுமென்றும் கோரிக்கை எழுப்பியிருக்கின்றன. இது உடனடியாக நடைபெறாது என்பதால், இந்த மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர் அதிகளவில் நிரம்பிய தேர்வுக்குழுவை நியமிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார் அருண் ஜேட்லி. இன்று (ஜனவரி 5) நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசி நாள். இன்று நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் தனிநபர் மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், அடுத்துவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில்தான் முத்தலாக் தடை மசோதா பற்றிய விவாதம் தொடரும் என்பதால், இப்போதைக்கு இது நிறைவேறாது என்றே கூறப்படுகிறது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 5 ஜன 2018