மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

வாழ்க்கைச் சித்திரங்கள்: மனதில் ஊடுருவிப் பாய வேண்டும்!

வாழ்க்கைச் சித்திரங்கள்: மனதில் ஊடுருவிப் பாய வேண்டும்!

சரவணன் சந்திரன்

“ஊருக்குள்ள வந்து கொழந்தன்னு கேட்டுப் பாருங்க. சின்னப் புள்ளைககூட வீட்டுக்கு வழிகாட்டும். எப்பயும் பிஸ்கெட் பாக்கெட்ட கையில் வச்சுக்கிட்டே திரிவேன்” என்று மூன்று ஓட்டைகள் தெரிகிற முன்னம்பற்களைக் காட்டிச் சிரித்துக்கொண்டே சொல்வார் குழந்தை என்கிற குழந்தைசாமி. அவருக்கு அறுபத்து ஐந்து வயதாகிறது. அவர் சொல்வது உண்மைதானா என அறிய விளையாட்டுக்காக அவர் ஊரில் போய்க் கேட்டேன். எல்லோரும் சிரித்துக்கொண்டே அவர் வீட்டுக்கு வழிகாட்டினார்கள்.

அவர் குறித்துக் கேட்கிறோம் என்பதே அப்படி ஒரு மகிழ்ச்சி அவர்களுக்கு. குழந்தை எந்த அளவுக்கு நல்லவரென்றால், முன்னாள் மாமனாருக்கு இன்னமும் தெவசம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய முதல் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இரண்டாவது மனைவி அப்பாவி. அந்தம்மாவும் பயபக்தியோடு தெவசம் கொடுக்கப் போயிருந்தது.

மாமனாரைக்கூட மறக்காம இருக்கீங்களேண்ணே எனக் கேட்டபோது, “என்ன சாமி இப்பிடி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க. எங்குருராயர் அவரு. மருந்தடிக்கிறதுக்கு தண்ணி அள்ளி ஊத்தப்போன எனக்கு, தொழிலயும் கத்துக்கொடுத்து பொண்ணையும் கட்டிக் கொடுத்தவரு. ஜென்மம் இருக்கற வரைக்கும் பண்ணுவேன். நான் போய்ட்டாலும் இவளையும் பண்ணச் சொல்லிருக்கேன்” என இரண்டாவது மனைவியைச் சுட்டிக்காட்டிச் சொன்னார். அந்தம்மாவும் தலையைச் சொறிந்துகொண்டு முன்னம்பல் ஓட்டை தெரியச் சிரித்தது.

கால் படாத காடுகளே இல்லை

மருந்தடிக்கிறதற்குத் தண்ணீர் ஊற்றுகிறவராக வாழ்வைத் தொடங்கிய குழந்தையண்ணன் கால் படாத காடுகளே இல்லை. “ஒரு நாளைக்கு நூறு டேங்க் அடிப்பேன். அன்னிக்கெல்லாம் ஒரு டேங்குக்கு ஒண்ணாரூவா. அப்ப அதுவே பெரிய சம்பாத்தியம். சாப்பிட்ட ஊட்டமும் அப்பிடி” என்று சொல்லும் அவர் விவரிக்கும் உணவுப் பழக்கங்கள் எச்சில் ஊற வைப்பவை. “எங்க முன்னாள் மாமனார் மொசக்கறிய ஆப்பையில் அள்ளித் தட்டில் போடுவார்” என்பார்.

குழந்தையண்ணனால் இப்போது கறியைக் கடிக்க முடியாது. கறியைப் பற்றியே தொடர்ந்து பேசுவதன் வழியாக அந்த ஆசையைத் தணித்துக்கொள்வார். கறி குறித்துப் பேசும்போதெல்லாம் அவருடைய கண்கள் ஒளிகொண்டு மிளிர்வதைப் பார்த்திருக்கிறேன்.

“வெடக் கோழியா பிடிச்சு வறுத்துக்கொண்டு வர்றேன். ரெண்டு பேரும் உக்காருவோம்” எனக் கடந்த பத்து நாள்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். கறியைச் சப்பிவிட்டு சக்கையை எடுத்து நாய்க்குப் போட மட்டுமே முடியும் அவரால்.

உடம்பு தாட்டியமாக இருந்தபோது மருந்தடிக்கப் போய் பிள்ளைகளை வளர்த்தெடுத்துவிட்டார். இப்போது பிள்ளைகள் அவரைக் கைவிட்டுவிட்டனர். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் இவர்தான் ஒதுங்கிக்கொண்டார். அக்குருவமா பேசினா யாரா இருந்தாலும் பக்கத்தில போக மாட்டேன் என்பார்.

உடல் தளர்ந்த பிறகு கொய்யாக் காடுகளுக்குப் போய் கழிவுக் காய்களை வாங்கிக்கொண்டு வந்து விற்கிற சிறு வியாபாரி ஆகிவிட்டார். ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாய் கிடைக்கலாம். இத்துப்போன டிவிஎஸ் 50 வண்டியில் கஷ்டப்பட்டுத் தூக்கிக்கொண்டு போவார். அந்த வண்டி அவருடைய சொல் பேச்சைத்தான் கேட்கும். ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் போகும் அந்த வண்டியைத் தள்ளி ஸ்டார்ட் செய்கிற வித்தையை என்னால் கற்றுக்கொள்ள இயலவில்லை.

நிற்காத ஓட்டம்

இத்தனைக்கும் அவருடைய பையன்கள் கொய்யாக் காடுகளைக் குத்தகைக்கு எடுத்துப் பெரிய அளவுக்கு வியாபாரம் செய்கிறார்கள். இவர் போய் நின்றதில்லை. இரண்டாம் மனைவியின் வழியாகப் பிறந்த இரண்டு குழந்தைகளுக்காக இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறார். அவர் முகத்தில் படரும் சிரிப்புக்காகவே கழிவுக் காய்கள் அவருடைய பெட்டியில் வந்து விழுகின்றன.

“மார்கெட்ல நல்ல விலை போகுதாம்ல. பெட்டிக்கு அம்பது ரூவா சேத்துக் கொடுங்க குழந்தைண்ணே” என்று கேட்டபோது அவர் சொன்ன பதிலையும் சொன்ன விதத்தையும் நினைத்தால் எனக்கே இப்போது சிரிப்பு வருகிறது.

“குழந்தையால அவ்வளவுதாம் கொடுக்க முடியும் சாமி. குழந்தைட்ட திருட்டுத்தனம் இருக்காது. மத்தவங்க மாதிரி எடையில அடிக்க மாட்டேன். அப்பறம் குழந்தைய கைவிட்டுட்டோம்னு நீங்க வருத்தப்படுவீங்க” என்றார்.

இடையில் சில நாள்களுக்கு முன்பு அடிக்கடி அவர் வந்து நிற்கவில்லை. அதற்கு முன்பெல்லாம் ஒருநாளைக்கு மூன்று தடவையாவது வந்து சந்தித்துவிட்டுப் போய்விடுவார்.

என்னண்ணே தம்பியக் கைவிட்டுட்டீங்களா எனக் கேட்ட போதுதான் அந்த விஷயத்தைச் சொன்னார். பத்தாயிரம் ரூபாய் கொடுத்து முந்நூறு கொய்யாச் செடிகள் கொண்ட காடொன்றைக் குத்தகைக்குப் பிடித்திருக்கிறார். பராமரிப்பில்லாத காட்டை அவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து சீர்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கடவுள் புண்ணியத்தில் இவர் போன நேரம் அந்தச் செடிகளில் அரும்பும் கட்டியிருக்கிறது. பங்குனி உத்திரத்துக்குக் காயெடுத்திடலாம் தம்பி என்றார் உற்சாகமாக. புத்தாண்டு தினத்தில் அந்தக் காட்டைப் பார்வையிட என்னை அழைக்கவும் செய்தார்.

ஒரு தடவை அவரை அமரவைத்து, இந்த வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றேன். “நுவான் நுவாக்கிராம் மருந்து மாதிரி மனுஷங்க மனசில ஊடுருவிப் பாயணும். நின்னு நிதானமா ஊடுருவிப் பாயணும் தம்பி” என்றார்.

கொய்யாச் செடிகளுக்கு அடிக்கப்படும் மருந்து நுவான் நுவாக்கிராம். அந்த மருந்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், குழந்தையண்ணன் சொல்கிற ஊடுருவிப் பாய்தல் என்னும் உதாரணம் மனதில் வந்து வலுவாக ஒட்டிக்கொண்டுவிட்டது.

நுவான் நுவாக்ராம் மாதிரி உடன் இருப்பவர்களின் மனதில் ஊடுருவிப் பாய நினைக்கும் என் அத்தனை நண்பர்களுக்கும் நல்வாழ்த்துகள்!

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சரவணன் சந்திரன், ஊடகவியலாளர், எழுத்தாளர். மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். பயணமும் வேளாண்மையும் இவரது செயல்பாடுகளின் மையம். தொடர்புக்கு: [email protected])

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வெள்ளி 5 ஜன 2018