மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

தியாகத்தின் மறுபெயர் லட்சுமண அய்யர்

தியாகத்தின் மறுபெயர் லட்சுமண அய்யர்

ஈரோட்டில் அன்றொரு நாள் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், அயன் செய்த வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டியுடன், கைத்தடியின் உதவியோடு கூட்ட நெரிசலான பேருந்து ஒன்றில் அடித்துப் பிடித்து ஏறினார். பேருந்தில் ஒரு சிலர் அவர் மீது இரக்கப்பட்டு தங்கள் இருக்கையை அவருக்கு அளித்து, உட்காருமாறு கூறினர். ஆனால் அவர் அதை ஏற்காமல் தனது பயணத்தைத் தொடர்ந்தார். இந்த தள்ளாடும் வயதில் தனி ஆளாக, அவர் நடத்தி வந்த சிறுவர் விடுதியின் மதிய உணவுத் திட்டத்திற்காக அரசு தரும் உதவித்தொகையை வாங்க கலெக்டர் அலுவலகம் வரை சென்றுகொண்டிருந்தார்.

கோவை மாவட்டம் கோபிசெட்டிப் பாளையத்தின் கோடீஸ்வரர்களுள் ஒருவரான ஜி.எஸ். லட்சுமண அய்யர்தான் அந்த முதியவர். தன் சொத்துக்கள் அனைத்தையும் கிராமத்தின் முன்னேற்றத்திற்கும், தலித் சமூகத்து மக்களுக்கும், பள்ளிகள், கல்லூரிகளுக்கு அளித்த மாமனிதர். தமிழ்நாட்டில் முதல் நகராட்சித் தலைவரான இவர், மனிதனின் கழிவுகளை மனிதனே அகற்றுவது தவறு என்ற கருத்தைப் பல முறை வலியுறுத்தி, அதில் வெற்றியும் கண்டார். இப்படி அவர் சமுதாயத்திற்காக செய்த தொண்டு நடவடிக்கைகளைப் பேசிக்கொண்டே போகலாம்.

லட்சுமண அய்யர் தீவிர காந்தியவாதி. காந்தி மீது உள்ள தீராத பற்றால் ஒருமுறை காந்தியைப் பார்க்க நேரில் சென்றுள்ளார். சந்திப்பின்போது காந்தி இவரிடம், தலித் சமூக மக்களுக்காக, மக்களுடன் இணைந்து பணியாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளார். காந்தி சொன்னதைச் சிரமேற்கொண்ட இவர், அதன் பிறகு தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவே அர்ப்பணித்து, உண்மையான காந்தியவாதிக்கு ஒரு முன்மாதிரியாக வாழ்ந்தார். குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பல உதவிகளைச் செய்திருக்கிறார்.

அவரது வீடு ஒருமுறை ஏலத்திற்கு வந்தபோது, இவரால் பயனடைந்த சில முகம்தெரியா நபர்கள் வந்து, அந்த வீட்டை வாங்கி, அவருடைய மனைவியின் பெயரில் பதிவு செய்து அவரிடமே ஒப்படைத்தனர். அதே வீட்டிலேயே அவர் காலமானார்.

இந்தத் தகவல்களை முகநூலில் விஷ்ணு பிரியா என்பவர் பதிவுசெய்திருக்கிறார். லட்சுமண அய்யர் இறந்தபோது நடந்த ஒரு சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்திருக்கிறார்.

ஊருக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இவர் இறந்தபோது 20 முதல் 25 பேர் மட்டுமே இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். அவரின் இறுதிச் சடங்கில் ஒரே ஒரு பெண் மட்டும் கடைசி வரை அழுதுகொண்டே மிகுந்த வருத்ததுடன் சென்றார். விசாரித்ததில் தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்த பெண், லட்சுமண ஐயரால் கல்வி பயின்று, இன்று ஒரு டாக்டராக இருப்பது தெரியவந்தது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 4 ஜன 2018