மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

செயல் தலைவரும் ஒரு வருடமும்!

செயல் தலைவரும் ஒரு வருடமும்!

ஒரு வருடத்துக்கு முன் இதே நாள், அதாவது ஜனவரி 4, 2017 அன்று, திமுகவின் அரை நூற்றாண்டு கால வரலாற்றில் கருணாநிதி கலந்துகொள்ளாமல் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் அறிவாலயத்தில் நடந்தது. இந்தப் பொதுக் குழுவில்தான் திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொதுக் குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மு.க.ஸ்டாலினை திமுக செயல் தலைவராக்கும் வகையில் கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யும் தீர்மானத்தை அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வாசித்தார்.

‘‘திமுக சட்ட விதி 18இல் ஏற்கெனவே 3 பிரிவுகள் உள்ளன. 4ஆவது பிரிவாகச் சட்ட திட்டத்தில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி தலைவர் பதவி விலகினாலோ, நீண்ட நாட்களுக்குப் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டாலோ செயல் தலைவர் ஒருவரைப் பொதுக் குழு நியமிக்கலாம். தலைவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவருக்கு உண்டு. தலைவரது அனைத்துப் பணிகளையும் செயல் தலைவர் ஆற்றுவார்’’ என்றார்.

இதனை அனைத்துப் பொதுக் குழு உறுப்பினர்களும் கைகளைத் தட்டி வரவேற்றனர். தொடர்ந்து பேசிய திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், ‘‘திமுக சட்ட விதி 18 பிரிவு 4-ன்படி திமுக செயல் தலைவர் பதவிக்குப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பெயரை முன்மொழிகிறேன். பொருளாளர் பொறுப்புடன் செயல் தலைவர் பொறுப்பையும் அவர் கவனிப்பார்’’ என்றார். அதனை முதன்மைச் செயலாளர் துரைமுருகன் வழி மொழிந்தார்.

தம்பி வா தலைமை ஏற்க வா என்று துரைமுருகன் தேம்பி அழைக்க, மு.க.ஸ்டாலினும் கண்ணீர் சிந்திப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

சரி இந்த ஒரு வருடத்தில் செயல் தலைவராக ஸ்டாலின் சாதித்தது என்ன என்ற கேள்வி மு.க. ஸ்டாலினைச் சூழ்ந்து நிற்கிறது.

அதிமுகவின் பாதாள நிலை!

ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவர் ஆன நேரம் அதிமுக என்ற கப்பல் தனது மாலுமியான ஜெயலலிதாவை இழந்து தத்தளித்துக்கொண்டிருந்தது. பிப்ரவரியில் ஓ.பன்னீர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து சசிகலாவுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்க, அதிமுக இரண்டானது. பின் ஏப்ரல் வாக்கில் பன்னீர், எடப்பாடி, தினகரன் என்று மூன்றானது. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வித்தியாசம் வெறும் பதினைந்து முதல் இருபது எம்.,எல்.ஏ.க்கள்தான் என்ற நிலையில், ‘இந்நேரம் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால் அதிமுக அரசைக் கவிழ்த்திருப்பார். ஆனால் தளபதிக்கு அது கை வரவில்லை’ என்ற விமர்சனங்கள் திமுகவுக்குள்ளிருந்தே எழுந்தன,

ஆனால் செயல் தலைவர் மு.க,ஸ்டாலின், இந்த குதிரை பேரங்கள் மூலம் ஆட்சி அமைப்பது என்பது திமுகவின் வரலாற்றில் களங்கமாகும் என்றே கருதினார். எப்படியாவது மீண்டும் தேர்தலை வரவழைத்து மக்களின் ஆதரவுடன் அமோகமாக ஆட்சிக் கட்டிலில் ஏறுவது என்பதே அவரது கருத்தாக இருந்தது, இருக்கிறது. ஆனால் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி அவர் நீதிமன்றத்துக்குச் சென்றதை வைத்தே எடப்பாடி தன் ஆட்சிக்கான நீட்டிப்பை ஏற்படுத்திக் கொண்டார் என்பதையும் அதிமுகவினரே நமுட்டுச் சிரிப்போடு சொல்கிறார்கள்.

கங்காருக் குட்டியல்ல, கன்றுக் குட்டி!

ஸ்டாலினை கருணாநிதியின் கங்காருக்குட்டி என்று கேலி பேசியவர்கள் நிறைய உண்டு. கங்காரு எப்படித் தன் குட்டியைத் தன்னுடனே சுமந்துகொண்டிருக்குமோ அதுபோல கருணாநிதியின் நிழலில்தான் ஸ்டாலின் செயல்பாடுகள் இருக்கின்றன என்பது அவர்களின் விமர்சனம். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே தான் கங்காருக்குட்டி அல்ல கன்றுக்குட்டிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் ‘நமக்கு நாமே’ களமாடி, திமுகவை வலுவான எதிர்க்கட்சியாக்கினார் ஸ்டாலின். ஆனால், அதிலும் கூட்டணிக் கட்சிகளை அவர் கலைஞர் போலக் கையாளாமல் கைவிட்டுவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில், அவரது செயல் தலைவர் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்று கூறலாம்.

முரசொலி பவள விழா, கருணாநிதியின் வைரவிழா போன்றவற்றுக்காக தேசியத் தலைவர்களைச் சென்னைக்கு வரவழைத்து தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஓர் அணியைத் திரட்டும் முயற்சியில் தமிழ்நாடு தலைமை வகிக்கும் என்று எடுத்துக்காட்டியது ஸ்டாலினுக்கு இந்த ஒருவருடத்தில் கிடைத்த முக்கியமான மகுடம்!

அட்மின் தலைவர்!

திமுக எப்போதுமே தொழில்நுட்பங்களைக் கைக் கொண்டு அதை தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்வதில் மற்றக் கட்சிகளைவிட முன்னணியில் இருக்கும். மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் போன்றவை எல்லாம் அவ்வப்போதுதான் நடத்த முடியும். அனைவரையும் அறிவாலயத்துக்கு வரச் சொல்லி கூட்டம் ஒழுங்கு செய்து ஆலோசிப்பது என்பது பாரம்பரியமான முறை. ஆனால், இந்தக் கூட்டங்களை அவ்வப்போது தனது வாட்ஸ் அப் குரூப்பிலேயே நடத்திவிடுகிறார் ஸ்டாலின்.

மாவட்டச் செயலாளர்களுக்கு என்று ஒரு வாட்ஸ் அப் குரூப், எம்.எல்.ஏ.க்களுக்கு என்று ஒரு வாட்ஸ் அப் குரூப் என்று இரண்டு குரூப்புகளுக்கு அட்மின் ஆக இருக்கிறார் ஸ்டாலின். காலையோ, மாலையோ, மதியமோ எப்போது வேண்டுமானாலும் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் குரூப் மூலமாகச் செய்திகளை அனுப்பிவிடுகிறார். அதிலேயே மா.செ.க்களின் கருத்துகளும் கேட்கப்படுகின்றன. அதிலேயே சில முடிவுகளும் தெரிவிக்கப்படுகின்றன. இந்த வகையில் அறிவாலயத்தில் நடக்க வேண்டிய சில பல கூட்டங்களை அட்மின் ஆக இருந்து வாட்ஸ் அப்பிலேயே விவாதித்துவிடுகிறார்.

கருணாநிதி அதிகாலை செய்தித்தாளைப் படித்துவிட்டு கட்சிக்கோ, ஆட்சிக்கோ நெருடலான செய்தி வெளிவந்தால் உடனடியாக, தொடர்புடைய மாவட்டச் செயலாளரை போனில் பிடித்து விசாரிப்பார். அதுபோல இப்போது ஸ்டாலின் வாட்ஸ் அப்பில் விசாரிக்கிறார்.

குடும்ப ஆதிக்கம்?

பாராட்டத் தக்க அம்சங்கள் இருந்தாலும் ஸ்டாலின் செயல்பாடுகளுக்குக் கடுமையான விமர்சனங்களையும் திமுகவுக்கு உள்ளிருந்தே கேட்க முடிகிறது. கருணாநிதியின் வாரிசு அரசியல்தான் ஸ்டாலின் என்ற வாதமெல்லாம் உளுத்துப் போய் வெகு காலம் ஆகிவிட்டது. அதேநேரம் இப்போது ஸ்டாலின் குடும்பத்தின் ஆதிக்கம் கட்சிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவிவருவதாகக் கட்சிக்குள் பலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக, கட்சி விஷயங்களில் அவரது மாப்பிள்ளை சபரீசன் தலையீடு இருப்பதாக திமுகவுக்குள் எழுந்த குரல்தான் அண்மையில் அழகிரி மூலம் வெளிப்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் தேர்தலுக்கு முன்பே இந்த விவகாரம் அரசல் புரசலாக பேசப்பட்டது. சபரீசனுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றி வெளிப்படையாக இதுவரை திமுகவுக்குள் வெடிக்கவில்லை என்றாலும் வெடிப்பதற்குள் அதை கவனிப்பது செயல் தலைவருக்கு நல்லது!

ரஜினி-தினகரன்!

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது பற்றி ஸ்டாலினுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால் பணம் கொடுத்து வாங்காத ஓட்டுகள் இவை என்று அதற்கு பதிலளித்து ஜனநாயக முறையில் தேர்தலைச் சந்தித்தோம் என்று வெளிப்படையாக அறிவித்தார் ஸ்டாலின். தேர்தல் களத்தில் டெபாசிட் இழப்பது என்பது பெரிய அரசியல் கட்சிகளுக்கு ஒன்றும் புதிததல்ல.

அதேநேரம் ஸ்டாலின் என்ற ஆளுமைக்குப் போட்டியாக இப்போது தினகரன், ரஜினி என்ற இரு ஆளுமைகள் அரசியல் களத்துக்கு வந்திருப்பது உண்மை. இந்த இரு ஆளுமைகளையும் மீறி, ஆன்மிக அரசியல் என்ற புது முழக்கத்தை மீறி, ஸ்டாலின் அடுத்து வரும் தேர்தல்களில் தன் தலைமையில் திமுகவின் வெற்றியை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. திமுக தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கட்சியை வெற்றிகரமாக வழி நடத்தியதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்ற தலைவர் கருணாநிதி.

கருணாநிதியின் சொத்து வாரிசாக, குடும்ப வாரிசாக இருந்துவிடுவது எளிது. அவரது வரலாற்றுச் சாதனைகளைத் தொடரும் வகையில் அவரது அரசியல் வாரிசாக இருப்பது மிகக் கடினம். அந்தப் பயணத்தைத்தான் கடந்த ஒரு வருடமாக மேற்கொண்டிருக்கிறார் செயல் தலைவர் ஸ்டாலின். கருணாநிதி காலத்தில் திமுகவுக்கு நேர்ந்த நெருக்கடிகளை விட அதிக நெருக்கடிகளுடன் பயணிக்க வேண்டிய பொறுப்பு இப்போது ஸ்டாலின் தோள்களில் விழுந்திருக்கிறது. தொடரட்டும் அவரது பயணம்!

-ஆரா

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 4 ஜன 2018