ப்ளூவேல் தற்கொலைக்கு ஆதாரமில்லை!

இணையதளப் பயனர்களை அச்சுறுத்திய ப்ளூவேல் விளையாட்டால் யாரும் தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரம் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ப்ளூவேல் விளையாட்டு தொடர்பாக மக்களவையில் நேற்று (ஜனவரி 3) எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த, மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர், "ப்ளூவேல் விளையாட்டில் ஈடுபட்ட குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டதாக பல்வேறு மாநிலங்களிலிருந்து தகவல்கள் வந்தன. இது தொடர்பாக உடனடி கண்காணிப்பு நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டோம்.
இதைத் தொடர்ந்து இந்திய`கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்' பிரதிநிதி தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, ப்ளூவேல் விளையாட்டு குழந்தைகளை தற்கொலைக்குத் தூண்டுவதாக கூறப்படுவது பற்றி பல விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட தடயவியல் சான்றுகள் ஆய்வின் முடிவில், தற்கொலை சம்பவங்களில் அதற்கு ப்ளூவேல் விளையாட்டுதான் காரணம் என்பதை உறுதி செய்ய முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.