மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

மோடிக்கு அழைப்பு விடுத்த நாராயணசாமி

மோடிக்கு அழைப்பு விடுத்த நாராயணசாமி

பிரதமர் நரேந்திர மோடியை, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று (ஜனவரி 3) சந்தித்துப் பேசினார். அப்போது, மோடியை புதுச்சேரிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

புதுச்சேரி அரசில் நிலவிவரும் நிதி நெருக்கடி குறித்தும், அங்குள்ள அரசியல் சூழல் குறித்தும் விவாதிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் கேட்டு வந்தார் அம்மாநில முதல்வர் நாராயணசாமி. ஆனால், அவரால் மோடியைச் சந்திக்க இயலவில்லை. இதனால், அவர் மத்திய அமைச்சர்கள் பலரைச் சந்தித்துவந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, புதுச்சேரியை பிரதமர் மோடி புறக்கணிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், நேற்று அவருக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து திடீரென்று அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, டெல்லி சென்ற நாராயணசாமி பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, புதுச்சேரி மாநில வளர்ச்சித்திட்டங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாகக் கூறிய நாராயணசாமி, ஒரு இனிய சந்திப்பு நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தின் திட்டமிடப்படாத செலவுகளுக்காக ரூ.1,250 கோடி ஒதுக்க வேண்டுமென்றும், 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும், இந்த சந்திப்பின்போது அவர் கோரிக்கை வைத்தார். புதுச்சேரி மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமையை கருத்தில்கொண்டு, அதன் சுற்றுலா திட்டங்களில் மத்திய அரசு உதவ வேண்டுமென்று மோடியிடம் தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இந்தியா வர திட்டமிட்டிருக்கிறார். அப்போது, அவருடன் பிரதமர் மோடியும் இணைந்து புதுவைக்கு வர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்ததாகவும் நாராயணசாமி தெரிவித்தார். ”என்னுடைய பேச்சை பொறுமையுடன் கேட்ட மோடி, எல்லா வேண்டுகோள்களையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்” என்று கூறியுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாராயணசாமி அமைச்சரவையுடன் மோதல் போக்கைக் கடைபிடித்துவருகிறார். இருதரப்பும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிவரும் நிலையில், மோடியுடனான சந்திப்பில் அதுபற்றிப் பேசியதாக அவர் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், மோடி – நாராயணசாமி சந்திப்பு நிகழ்ந்தபோது, டெல்லியில் கிரண்பேடி தங்கி இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 4 ஜன 2018