மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

யானைகள் நலவாழ்வு முகாம் தொடக்கம்!

யானைகள் நலவாழ்வு முகாம் தொடக்கம்!

கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டியில், இன்று (ஜனவரி 4) யானைகள் நலவாழ்வு முகாம் தொடங்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இதனைத் தொடங்கி வைத்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டியில் யானைகள் நலவாழ்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இந்த முகாம் நடைபெறக் காரணமாக இருந்தவர். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவில்கள் மற்றும் மடங்களில் வளரும் யானைகளுக்கு சத்தான உணவு, தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் இயற்கைச்சூழலுடன் சில நாட்களாவது ஒன்றியிருக்க வேண்டிய அவசியம் போன்றவற்றை அளிப்பதற்காகவும், யானைகள் புத்துணர்வு பெறவும் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமை மிகுந்த ஆர்வத்துடன் ஜெயலலிதா தொடங்கி வைப்பது வழக்கம். அவரது மறைவையொட்டி, கடந்த ஆண்டு இந்த முகாம் 30 நாட்கள் நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு 48 நாட்கள் நடக்கவிருக்கும் இந்த யானைகள் நலவாழ்வு முகாம், இன்று தொடங்கி பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10வது ஆண்டாக நடைபெறும் இந்த முகாமை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 33 யானைகள் இந்த முகாமில் பங்கேற்கின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த யானைகளுக்கு நடைப்பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது. அவற்றுக்கு மூலிகை மற்றும் கீரைகள் கலந்த உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகாமில் கால்நடை மருத்துவர்கள் சுழற்சி அடிப்படையில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து யானைகளின் உடல்நலம் கண்காணிக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. காட்டு யானைகளினால் பாதிப்புகள் ஏற்படாமலிருக்க, 24 மணி நேரமும் காவலர்கள் வனப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதோடு, முகாம் நடக்கும் பகுதியில் தொங்கும் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உடல்நலக்குறைவு மற்றும் வயோதிகத்தின் காரணமாக, சில யானைகள் இந்த முகாமுக்கு வர இயலவில்லை. அவற்றுக்கு இதே சிகிச்சையினை அந்தந்த இடங்களில் வைத்து அளிக்க இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 4 ஜன 2018