மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

ரஜினி அரசியல்: கட்சிக் கோட்டையின் அஸ்திவாரம்!

ரஜினி அரசியல்: கட்சிக் கோட்டையின் அஸ்திவாரம்!

ரஜினியின் அரசியல் நகர்வைக் காட்டிலும், அவரைச் சுற்றியிருப்பவர்கள் எத்தனை வேகமாக அவரை நெருங்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதே தற்போது அதிகமாக கவனிக்கப்படுகிறது. பல வருடங்களாக அவரை சந்திக்கக் காத்துக் கிடந்த அவரது ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபத்துக்குச் சென்றதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அரசியல் தலைவர்கள் அவருக்கு வெளியிலிருந்து போயஸ் கார்டன் வரை கிடைக்கும் ஆதரவை எதிர்ப்பதே அதற்குச் சான்று.

இந்த நிலையில் நடைபெற்ற முக்கியமான மாற்றம், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய ராஜு மகாலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரஜினி தொடங்கப்போகும் கட்சியில் இணைவதாக அறிவித்திருப்பது.

லைகா குரூப்ஸ் தொடங்கி நடத்திய பல்வேறு தொழில்களிலும் ஆலோசகராகச் செயல்பட்டவர் ராஜு மகாலிங்கம். தமிழகத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் மூலம் லைகா குரூப்ஸ் களமிறங்கியபோது, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு உதவியவர்கள் என்ற குற்றச்சாட்டு அவர்கள் மீது வைக்கப்பட்டது. முக்கியமாக லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

எனவே, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. பதவியிலிருந்த ராஜு மகாலிங்கம் இந்தியாவில் தயாரிக்கப்படும் படங்களின் புரொடக்ஷனில் இருந்தார். அதன்படியே எந்திரன் 2.0 படத்தை லைகா தயாரித்தபோது ரஜினிக்கும், ராஜு மகாலிங்கத்துக்கும் நெருக்கம் ஏற்பட்டு, தற்போது ரஜினியின் கட்சியில் இணைந்ததற்கான காரணமாக ராஜு மகாலிங்கம் அதையே சொல்லும் நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

ராஜு மகாலிங்கத்தின் இந்த நகர்வு குறித்து ரஜினியின் கட்சிக்கு லைகா பின்னணியில் பண உதவி செய்கிறது என்றும், ரஜினி யானை பலத்துடன் அடுத்த தேர்தலில் களம்காண ஆள் திரட்டுகிறார் என்றும் பேசப்படுகிறது.

முதல் சந்தேகத்தில் உண்மையில்லை. லைகா நிறுவனம் தாங்கள் கொடுக்க நினைக்கும் பணத்தை நேரடியாகவே கொடுக்கலாம். உலகம் முழுவதும் பல தொழில்களை செய்யும் நிறுவனத்துக்குப் பணம் கொடுப்பது மிகப்பெரிய வேலையில்லை. ஆனால், ரஜினியின் அரசியல் கட்சிக்கு வெளிநாட்டிலிருந்து ரசிகர்கள் அனுப்பும் பணத்தைச் சரியாகக் கையாளவும், கட்சியை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கவும் தேவைப்பட்ட அனுபவமுள்ள நபரின் இடத்திலேயே ராஜு மகாலிங்கம் பொருத்தப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தகவலின் மூலம் ரஜினி விரைவில் ரசிகர்களிடத்தில் நிதி திரட்டக்கூடும் என்பது தெளிவாகிறது.

லைகா நினைத்தால் நேரடியாக பண உதவி செய்யலாம் எனும் நிலையில், ராஜு மகாலிங்கம் நினைத்திருந்தால் லைகாவில் இருந்துகொண்டே ரஜினிக்கு உதவியிருக்கலாமே என்று லைகாவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். சமீபத்தில் 2.0 படத்தின் மூலம் ஏற்பட்ட பிரச்னையில் ராஜு மகாலிங்கத்துக்கு ஏற்பட்ட பிரச்னையால்தான் அவர் வேலையை விட்டு நின்றதாகக் கூறுகிறார்கள்.

2.0 திரைப்படம், ஜனவரி ரிலீஸிலிருந்து ஏப்ரல் ரிலீஸுக்குத் தள்ளிப்போனதன் முக்கியக் காரணம், அதன் கிராஃபிக்ஸ் வேலைகளில் ஏற்பட்ட குளறுபடி. அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் படத்தின் காட்சிகளைக் கொடுத்து கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகளை ஒப்படைத்திருந்தது படக்குழு. ஆனால், அந்நிறுவனத்துக்கும் லைகா நிறுவனத்துக்கும் ஏற்பட்ட பணப் பரிவர்த்தனை தேக்கத்தின் காரணமாக வேலைகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இதை அறிந்ததும், வேறு நிறுவனத்திடம் இந்த வேலைகளை ஒப்படைத்துவிட்டது லைகா. ஆனால், இந்த மாற்றத்தினால் பல கோடிகள் நஷ்டமடைந்ததுடன், சொன்ன நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமலும் போனது. இந்த சம்பவத்தில் எங்கு பிரச்னை நடைபெற்றது என்று லைகா நிறுவனம் நடத்திய விசாரணையில் பலரும் ராஜு மகாலிங்கத்தைக் குற்றம் சொல்லியிருக்கின்றனர். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாகவே பதவி விலகும் முடிவுக்கு வந்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வியாழன் 4 ஜன 2018