மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

டி.எம்.கிருஷ்ணா நேர்காணல்: சாதி இல்லை என்று சொல்வது வெற்று பாவனை!

டி.எம்.கிருஷ்ணா நேர்காணல்: சாதி இல்லை என்று சொல்வது வெற்று பாவனை!

சந்திப்பு: அரவிந்தன்

(கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தனது கலைக்காகவும் சூழலில் எழுப்பும் கலகக் குரலுக்காகவும் கூர்ந்து கவனிக்கப்படுபவர். கர்னாடக இசை உலகில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் கலையை நாம் அணுகும் விதம் குறித்தும் பல்வேறு கூர்மையான கேள்விகளை எழுப்பிவரும் விமர்சகர். இவர் எழுதிய நூல், சங்கீதச் சூழல் குறித்த இவரது விமர்சனங்கள், பல்வேறு கலை வடிவங்களை ஒருங்கிணைத்து இவர் நடத்திவரும் கலை விழாக்கள், எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி எழுதிய கட்டுரை, அண்மையில் எம்.எஸ். பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் வெளியிட்ட கருத்துகள் என எல்லாமே விவாதப் பொருளாகின்றன. இந்த விவாதங்கள் குறித்தும் அவருடைய பரிசோதனைகள் குறித்தும் அவரிடம் நடத்திய உரையாடலிலிருந்து...)

கேள்வி: அண்மையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி நீங்கள் தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறதே? அவருடைய நிறம், பிராமணத்தன்மையுடன் அவர் இருந்தது ஆகியவைதான் அவர் பிராமணச் சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்குக் காரணம் என நீங்கள் சொன்னதாகக் குறிப்பிட்டுப் பலரும் கண்டனம் தெரிவிக்கிறார்களே?

பதில்: ஹைதராபாதில் எம்.எஸ். வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் நான் பேசியதை வைத்து இந்தச் சர்ச்சை உருவாகியுள்ளது. சர்ச்சையைக் கிளப்புபவர்கள் அநேகமாக யாரும் அந்தப் பேச்சைக் கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அந்தப் பேச்சு யூடியூபில் உள்ளது. அதைக் கேட்டுப்பாருங்கள். நான் எதையும் தவறாகச் சொல்லவில்லை என்பதும் புதிதாக எதையும் சொல்லவில்லை என்பதும் தெரியும்.

அப்படி என்னதான் சொன்னீர்கள்?

கடந்த நூற்றாண்டில், குறிப்பிட்ட சாதி வட்டத்துக்கு வெளியே இருப்பவர்கள் கர்னாடக இசையுலகில் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுவது அரிதாகவே இருந்தது. அதிலும் பெரிய அளவில் ஆராதிக்கப்படுவது அரிதினும் அரிது. அப்படிப்பட்ட பெருமையைப் பெற்றவர் எம்.எஸ். அம்மா. கர்னாடக இசை உலகின் அதிகார மையம் அவரை அப்படி ஏற்றுக்கொண்டதற்குப் பின்னால் இசையைத் தாண்டிய காரணங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும் என்று பேசினேன். அவருடைய நிறம், அவருடைய நடை, உடை பாவனைகளில் இருந்த பிராமணத்தன்மை ஆகிய காரணிகள் நமது மனங்களில் செல்வாக்கு செலுத்தினவா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் என்று சொன்னேன்.

இந்தக் கேள்வியை என்னை நோக்கி நான் எழுப்பிக்கொள்கிறேன். என் மனதில் இப்படிப்பட்ட எண்ணங்கள் இன்னமும் இருக்கின்றனவா என்று ஆராய்கிறேன். எவ்வளவுதான் சமத்துவம் பேசினாலும் நான் பிராமணன் என்பது என் மண்டைக்குள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. இத்தகைய முன் தீர்மானங்கள், விருப்பு வெறுப்புகள் குறித்து நாம் தொடர்ந்து சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று சொன்னேன். இந்தப் பேச்சைச் செய்தியாக வெளியிட்டவர்கள் ஒரு பகுதியை மட்டும் மேற்கோள் காட்டியிருந்தார்கள். அதைப் படித்துவிட்டுத்தான் சமூக ஊடகங்களில் எல்லோரும் பொங்குகிறார்கள். நான் சொன்னது எம்.எஸ். அம்மாவைப் பற்றிய விஷயமே அல்ல. என் கேள்வி, நம்மைப் பற்றி. அதிகார மையங்களில் இருப்பவர்களின் உளவியல் பற்றி.

பொதுவாகவே சமூகத்தின் மேலடுக்குகளில் இருப்பவர்களைப் போலவே நடந்துகொள்ள வேண்டும் என்னும் வேட்கை கீழடுக்குகளில் உள்ளவர்களுக்கு ஏற்படும். அப்படி நடந்துகொண்டால்தான் அங்கீகாரம் கிடைக்கும் என்னும் சூழலில் அத்தகைய பாவனைகள் அதிகமாகும். இப்படிப்பட்ட நிர்பந்தத்தை ஏற்படுத்தும் சூழலைப் பற்றித்தான் நான் கேள்வி எழுப்புகிறேன்.

மேல்நிலையாக்கம் (Sanskritisation) என்று சொல்லப்படும் விழைவைப் பற்றிச் சொல்கிறீர்களா?

அதேதான். இந்த ஆவல் இருப்பது இயல்புதான். ஆனால், நீ இப்படியெல்லாம் நடந்துகொண்டால், பேசினால், பழகினால்தான் உனக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்னும் நெருக்கடி சூழலில் இருக்கக் கூடாது. அது திறமைசாலிகளை, அவர்களுடைய பின்னணியோடு, இயல்புகளோடு ஏற்றுக்கொள்ளும் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். எல்லோரையும் பண்பாட்டு ரீதியாக சிங்குலர் கேரக்டர் (ஒற்றைப்படைத்தன்மை) கொண்டவர்களாக ஆக்கிவிட முனையக் கூடாது. இதைப் பற்றித்தான் நான் பேசினேன்.

தொடர்ந்து நீங்கள் சாதியைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது ஏன்? சர்ச்சையைக் கிளப்பிவிட்டு, அதன்மூலம் கிடைக்கும் புகழில் திளைக்க விரும்புவதாக உங்களைப் பற்றி ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?

(சிரிக்கிறார்) எனக்குத் தோன்றுவதை நான் பேசுகிறேன். எழுதுகிறேன். இதை என் கடமையாக நினைக்கிறேன். பல சமயம் நான் பேசியதை ஒட்டிச் சமூக ஊடகங்களில் என்ன பேசப்படுகிறது என்பதே எனக்குத் தெரியாது. யாராவது சொன்னால்தான் தெரியும். என்னைக் கூப்பிட்டுப் பேசச் சொல்லும்போது நான் என் மனதுக்குப் பட்டதைப் பேசுகிறேன். என்னைக் கூப்பிட்டுக் கேள்வி கேட்கும்போது எனக்குத் தோன்றும் பதிலைச் சொல்கிறேன். சர்ச்சை வரும், வராது என்பதையெல்லாம் யோசித்துப் பேசுவதில்லை. எனக்குள் நான் எழுப்பிக்கொள்ளும் கேள்விகளையே நான் பொது வெளியில் பகிர்ந்துகொள்கிறேன். அது குறித்து ஆரோக்கியமான விவாதம் நடந்தால் சந்தோஷம்தான்.

நான் ஏன் சாதியைப் பற்றிப் பேசுகிறேன் என்று கேட்கிறீர்கள். ஏனென்றால் சாதி இங்கே அவ்வளவு வலுவான பங்கை வகிக்கிறது. சாதி இல்லை, சாதி வேற்றுமை இல்லை என்று சாதியின் மேல் அடுக்கில் இருப்பவர்களால்தான் பேச முடியும். ஆனால், சாதி அமைப்பின் கீழ் அடுக்குகளில் இருப்பவர்களுக்குத்தான் சாதி என்றால் என்னவென்று தெரியும். அதன் வீரியம், பயங்கரம் புரியும். சாதி விஷயத்தில் நான் மோசமான அனுபவத்துக்கு ஆளானதில்லை என்பதால் சாதி இல்லை என்று நான் சொன்னால் அது எவ்வளவு அபத்தம்.

இந்தச் சர்ச்சையையே எடுத்துக்கொள்ளுங்களேன். இதற்கு எதிர்வினை புரிந்த பெரும்பாலான மேல்சாதிக்கார்கள் சாதி வேற்றுமை எல்லாம் கிடையாது என்றார்கள். சாதியின் மோசமான பரிமாணம் என்னவென்பதை இவர்கள் ஒருநாளும் அனுபவித்திருக்க மாட்டார்கள். அதைப் பற்றியெல்லாம் நாம் யோசிக்க வேண்டாமா? சாதியால் ஏற்படும் அநீதிகளைக் களைய நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?

இன்னும்கூடப் பலருக்கு சாதிப் பெருமிதம் இருக்கிறது. “I am proud to be a brahmin” என்று ஹேஷ்டேக்கைப் போட்டுப் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். நாம் எத்தகைய சமுதாயத்தில் இருக்கிறோம், இங்கே சாதியின் பெயரால் என்ன நடக்கிறது என்பதையெல்லாம் அறிந்த ஒருவரால் இப்படிச் சொல்ல முடியுமா?

இட ஒதுக்கீடு பற்றியும், தகுதி, தரம் பற்றியும் பலரும் பேசுகிறார்கள். தகுதி, தரம் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள். தகுதி உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பேசுகிறார்கள். தரம் என்பதே குழப்பமான விஷயம். இதை எப்படி அளப்பீர்கள்? முற்றிலும் வெவ்வேறான பின்புலங்களிலிருந்து வரும் இருவரை எதை வைத்து ஒப்பிடுவீர்கள்? வாய்ப்புகள், உரிமைகள் ஆகியவற்றில் சமத்துவமே இல்லாத சூழலில், திறமையை மதிப்பிடுவதில் ஒரே மாதிரியான அளவுகோலை எப்படிப் பயன்படுத்த முடியும்? இதைப் பற்றி எல்லாம் நாம் யோசிக்க வேண்டாமா?

நீங்கள் ஒரு பாடகர். இசைக் கலைஞர். உங்களுக்கு எங்கிருந்து இந்தக் கேள்விகள் வருகின்றன?

கலையிலிருந்துதான் வருகின்றன. நான் ஒரு ராகம் பாடும்போது, அதில் ஆழமாக லயித்துப் பாடும்போது நான் என்னை இழக்கிறேன். கலை எனக்குள் ஒரு சமநிலையைக் கொண்டுவருகிறது. நானும் என் கலையும் ஒன்றாகும் அனுபவம் ஏற்படுகிறது. நானும் இந்தப் புற உலகும் வேறு வேறல்ல என்னும் உணர்வு ஏற்படுகிறது. ஆனால், இந்த நிலையை என்னால் நீட்டித்துக்கொள்ள முடியவில்லை. இதே தளத்தில் தொடர்ந்து இருக்க முடியவில்லை. இதிலிருந்து என்னைப் பிரிக்கும் அம்சங்கள் என்னவென்று யோசிக்கிறேன். பல காரணிகள் எனக்குள்ளும் என் சூழலிலும் செயல்படுவதை உணர்கிறேன். இவை எல்லாமே அந்தச் சமநிலையைக் குலைக்கின்றன என்பதை உணர்கிறேன். இவை ஏன் இப்படி இருக்கின்றன என்று யோசிக்கிறேன். அவற்றைப் பற்றி எனக்குள் கேள்வி எழுப்பிக்கொள்கிறேன். அந்தக் கேள்விகளை மற்றவர்களுடன் எழுத்தின் மூலமாகவும் பேச்சின் மூலமாகவும் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவுதான். கலை என்பதை ஆன்மிக அனுபவமாகப் பார்க்கிறீர்கள் என்று சொல்லலாமா?

ஆன்மிகம் என்று சொல்லலாமா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குள் ஏற்படும் மாற்றங்களை, என் அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

கலையும் கலைஞனும் என்னும் வேறுபாடின்றி இரண்டறக் கலப்பது என்பது ஒருவித அத்வைத நிலை. அதைப் பற்றித்தானே நீங்கள் பேசுகிறீர்கள்?

நான் பொதுவாக, இதுபோன்ற ஆகிவந்த சொற்களைத் தவிர்த்துவிடுவேன். இந்தச் சொற்களை நான் மறுக்கிறேன் என்று இதற்கு அர்த்தமல்ல. இதுபோன்ற சொற்கள் நமது சமூக, பண்பாட்டு வரலாறு, பலவிதமான போக்குகள் ஆகியவற்றால் சுமை கூடிய சொற்களாகிவிட்டன. இந்தச் சொற்களுடன் வேறு சில பாவனைகளும் உரிமைகோரல்களும் வந்துவிடுகின்றன. அவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப் பொறியில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்று நினைக்கிறேன்.

கலையில் தன்னைக் கரைத்துக்கொள்ளும் அனுபவம் பற்றிப் பேசினீர்கள். இந்த அனுபவத்துக்கும் சமூக யதார்த்தங்களுக்கும் என்ன சம்பந்தம்?

எந்தச் சமூக யதார்த்தங்கள் இந்த அனுபவத்தைச் சிலரிடமிருந்து ஒதுக்கிவைக்கின்றன என்று யோசிக்க வேண்டும். எந்தச் சமூக யதார்த்தங்கள் இத்தகைய உயரத்திலிருந்து நம்மைக் கீழே இழுக்கின்றன என்று பார்க்க வேண்டும். இந்தக் காரணிகள் செயற்கையாக நம்மால் உருவாக்கப்பட்டவை என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே, அவற்றைக் கேள்விக்கு உட்படுத்துகிறேன். விமர்சிக்கிறேன்.

எந்தக் கலையை எடுத்துக்கொண்டாலும் கலை அனுபவத்தில் கரைந்து நிற்கும் நிலை நிரந்தரமாகக் கிடைப்பது சாத்தியமே இல்லாத விஷயமாயிற்றே?

இருக்கலாம். ஆனால், அது ஏன் என்பதை நாம் யோசிக்க வேண்டும் அல்லவா?

சமூக ஏற்றத்தாழ்வுகள், வாய்ப்புகளில் உள்ள சமத்துவமின்மை ஆகியவைதான் இதற்குக் காரணம் என்கிறீர்களா?

இல்லை. இவையும் காரணங்கள் என்கிறேன். இவற்றைப் போக்குவதற்கு என்னளவில் என்ன செய்ய முடியும் என்று யோசிக்கிறேன். அவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.

நீங்கள் சென்ற ஆண்டில் ‘பொறம்போக்கு’ என்னும் பாடலைக் கர்னாடக இசை ராகத்தில் அமைத்துப் பாடினீர்கள். எண்ணூர் கழிமுகத்தில் இயற்கை வளம் சிதைக்கப்படுவதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் அந்தப் பாடலைக் கேட்டுவிட்டுத்தான் கமல்ஹாசன் எண்ணூருக்குச் சென்று பார்த்தார். இந்தப் பாடலை நீங்கள் பாடியதன் காரணம் என்ன?

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 4 ஜன 2018