மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: இந்திய அணியின் தொடர் வெற்றி(கள்)!

சிறப்புக் கட்டுரை: இந்திய அணியின் தொடர் வெற்றி(கள்)!

விக்னேஷ்

இந்திய அணி இதுவரை காணாத அளவுக்குப் பல்வேறு வெற்றிகளையும் புதிய சாதனைகளையும் 2017ஆம் ஆண்டு நிகழ்த்தியது. அது மட்டுமின்றி பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளும் 2017ஆம் ஆண்டு தொடக்கம் முதல் நடைபெற்றன. இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியது முதல் இலங்கை அணியுடனான போட்டியில் 112 ரன்களுக்குச் சுருண்டது வரை பெரும் அதிர்ச்சிகள் இந்திய ரசிகர்களுக்குக் கிடைத்தன. மற்றொருபுறம், தொடர்ச்சியாகத் தொடர்களைக் கைப்பற்றியது, டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றது என மகிழ்ச்சி தரும் செய்திகளும் உள்ளன.

இங்கிலாந்து அணியுடனான போட்டி 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமானது. அதில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மஹேந்திர சிங் தோனிக்குப் பதிலாக விராட் கோலி தலையில் இந்திய அணி விளையாடியது. 2014ஆம் ஆண்டு முதலே டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய தோனி ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம், அவரது தலைமையில் இந்திய அணி பல்வேறு கோப்பைகளைக் கைப்பற்றியது மட்டுமின்றி 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி தலைமை ஏற்று நடத்தினாலும், முழுப் பொறுப்பையும் தோனி மேற்கொண்டது அவரின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடரைக் கைப்பற்றிய பின்னர் இந்திய அணி வங்கதேச அணியுடன் எளிதாக வெற்றி பெற்றது.

அதன்பின்னரே மிக சுவாரஸ்யமான தொடர் ஆரம்பமானது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனால், பாகிஸ்தான் அணியுடனுடன் சமீபத்தில் இந்திய அணி விளையாட முடியாமல் போனதால் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற தொடரில் இந்த அணிகள் மோதின. முதல் டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்றது. இந்திய அணியை 333 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நிலைகுலையச் செய்தது ஆஸ்திரேலிய அணி.

அதன் பின்னர் விழித்துக்கொண்ட இந்திய அணி தொடர்ச்சியாக முன்னிலை பெறத் தொடங்கியது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா இருவரும் சிறப்பாகப் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியின் யுக்திகளைத் தகர்த்தெறிந்தனர். இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் இருவரும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றனர்.

இந்தப் போட்டிகளை அடுத்து ஐ.பி.எல். தொடர் தொடங்கியது. தோனியை இதிலாவது கேப்டனாகக் கண்டு மகிழலாம் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், புனே அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பொறுப்பேற்றது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்த வருடம் (2018) தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மீண்டும் களமிறங்க உள்ளது என்ற செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோப்பையைத் தவறவிட்ட இந்தியா

ஐ.பி.எல். தொடருக்குப் பின்னர் இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் பங்கேற்றது. இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பாகிஸ்தான் அணியுடனான போட்டியும் அதில் நடைபெற்றது. முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், அடுத்த போட்டியில் இலங்கை அணியுடன் படு தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை வழங்கியது. பின்னர் நடைபெற்ற லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே எதிர்பார்ப்பின் அளவு மிக அதிகமாக இருக்கும். இது கோப்பையைக் கைப்பற்றும் இறுதிப் போட்டி என்பதால் இந்திய, பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு தரப்பு ரசிகர்களையும் இந்தப் போட்டி கவர்ந்தது. ஆனால், இந்திய அணியால் ரசிகர்கள் எதிர்பார்பினை நிறைவேற்ற முடியவில்லை. தோல்வியைத் தழுவியதால், இந்திய வீரர்கள் மீதான எதிர்மறையான கருத்துகள் பரவ தொடங்கியது. ஆனால், இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா புதிய நட்சத்திரமாக அடையாளம் காணப்பட்டார். அவரை இந்திய ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர்.

பயிற்சியாளர் சர்ச்சை

கோப்பையைத் தவறவிட்ட சோகத்தில் இருந்த இந்திய அணிக்கு மேலும் ஒரு பிரச்னை, தலைமைப் பயிற்சியாளர் ரூபத்தில் வந்தது. அதுவரை இந்திய அணியில் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த அனில் கும்ப்ளே உடன் கேப்டன் விராட் கோலிக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார். இருப்பினும் தலைமைப் பயிற்சியாளர் இல்லாத நிலையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று தொடரைக் கைப்பற்றி வந்தது. அதன்பின்னர் ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இதற்கு முன்னரே பணியாற்றியதால் இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தேர்வுக் குழு காரணம் தெரிவித்தது.

அதன் தொடர்ச்சியாகப் புதிய தலைமைப் பயிற்சியாளருடன் இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடியது. இந்திய அணியின் தற்போதைய முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களாகத் திகழ்ந்துவரும் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருக்கும் ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் ஓய்வு வழங்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர் சாஹல் மற்றும் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று, இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வாஷ்-அவுட் செய்தது.

ஆஸ்திரேலியாவை வென்ற சாதனை

அந்தத் தொடருக்குப் பின்னர் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் பங்கேற்று விளையாடியது. அதில் ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது, டி-20 தொடர் 1-1 (ஒரு போட்டி மழையால் நடைபெறவில்லை) என சமனில் முடிந்தது. அதன்பின்னர் நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடியது. ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இந்திய அணிக்கு அதிர்ச்சிதரும் வகையில் இருந்தது. இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை நியூசிலாந்து அணி பதிவு செய்தது. ஆனால், அதன் பின்னர் தொடர்ச்சியாக இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி இரண்டு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்தார்.

அதன்பின்னர் தொடங்கிய டி-20 தொடர்களில் முதல் போட்டியை இந்திய அணியும், இரண்டாவது போட்டியை நியூசிலாந்து அணியும் கைப்பற்றினர். எனவே, மூன்றாவது போட்டியைக் கைப்பற்றும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் மிகுந்த ஆவலுடன் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், மழை குறுக்கிட்டதால் போட்டி 8 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. 20 ஓவர் போட்டியின் சுவாரஸ்யத்தையும் மிஞ்சியது இந்தப் போட்டி என்றுதான் கூற வேண்டும். இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணியின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்களைச் சேர்த்தது.

தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று வந்த இந்திய அணிக்கு மேலும் ஒரு வெற்றியைப் பெறும் வாய்ப்பு இலங்கை அணியின் மூலம் வந்தது. அந்த அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மூன்று போட்டிகளைக்கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்த முடியாது என்ற காரணத்தால் இலங்கை அணி பல்வேறு காரணங்களைக் கூறி போட்டியின் நேரத்தை வீணடித்து சமன் செய்ய முயற்சி செய்தது. இந்திய அணி வெற்றி பெற வேண்டிய முதல் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகள் சமனில் முடிந்தன. இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியைக் கைப்பற்றியதால் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து இரண்டு இரட்டைச் சதங்களை அடித்து கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேன் ஆகவும் பல சாதனைகளை முறியடித்தார். இலங்கை அணியுடன் டிசம்பர் 10இல் தொடங்கிய ஒருநாள் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டு, ரோஹித் ஷர்மா தலைமையில் போட்டி நடத்தப்பட்டது. முதல் போட்டியில் இந்திய அணி 121 ரன்களை மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் அந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 65 ரன்களைச் சேர்த்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்னர் தோனியின் பேட்டிங் குறித்து பல முன்னணி வீரர்களும் எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்து அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். ஆனால், முதல் போட்டியில் அவரது சிறப்பான ஆட்டம் எதிர்மறையான கருத்து தெரிவித்தவர்களுக்குப் பதிலாக அமைந்தது.

முதல் போட்டியில் மோசமான தோல்வியைத் தழுவிய இந்திய அணி, இலங்கை அணியுடனான இரண்டாவது போட்டியில் 141 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியது. இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி தன்னுடைய மூன்றாவது இரட்டைச் சதத்தை அடித்தார். மூன்றாவது போட்டியில் இந்திய அணி முதலில் தடுமாறினாலும் தோனியின் யுக்தியினாலும், இந்திய அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தினாலும் வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றியது.

இதன் மூலம் 8 ஒருநாள் தொடர்களைத் தொடர்ச்சியாக கைப்பற்றிய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற டி-20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றியதால் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்து தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றிச் சாதனை படைத்தது.

சாதனைப் பயணம் தொடருமா?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரைக் கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வெற்றி பெற்று, தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியுடன் முதலிடத்தில் சேர்ந்து கொண்டது. தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கும் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றினால், தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைக்கும்.

2017 இந்திய அணிக்கு வெற்றிப் பயணமாக, விறுவிறுப்பான காலகட்டமாக அமைந்தது. இந்த 2018ஆம் ஆண்டில் இந்திய அணி முழுக்க முழுக்க வெளிநாடுகளில் ஆடவிருக்கிறது. இந்தப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இந்தியா உலகின் சிறந்த அணி என்னும் பெயரைப் பெறும். இல்லையேல் உள்ளூரில் மட்டுமே வீரப்புலி என்னும் விமர்சனம் மீண்டும் அதன்மீது வைக்கப்படும். புத்தெழுச்சியுடன் களம் காணும் இந்தப் படை தன் வெற்றிப் பயணத்தைத் தொடருமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வியாழன் 4 ஜன 2018