சூப்பர் டீலக்ஸ்: சமந்தா கேரக்டர்?

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பில் கவனம் செலுத்திவரும் நடிகை சமந்தா, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகிவரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது சமந்தாவின் கேரக்டர் டீசர் வெளியாகி உள்ளது.
ஆரண்ய காண்டம் என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய இயக்குநர்கள் வரிசையில் இடம்பிடித்தவர் தியாகராஜன் குமாரராஜா. தனது அடுத்த படைப்பான சூப்பர் டீலக்ஸில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சமந்தா, காயத்ரி, நதியா, மிஸ்கின் ஆகிய முன்னணி நட்சத்திரங்களோடு களம் இறங்கியுள்ளார். விஜய் சேதுபதியின் ஷில்பா கேரக்டர் புகைப்படங்கள் வெளியாகி படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தன. தற்போது சமந்தாவின் வேம்பு கேரக்டர் டீசர் வெளியாகி உள்ளது.
இந்த டீசரில் நடுங்கும் கைகளுடன் கத்தி ஒன்றை கையில் வைத்து ஒருவரின் கழுத்தை சமந்தா வெட்டும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. அந்தக் காட்சியின் மூலம் கொலை செய்யும் கும்பலுடன் சேர்ந்திருக்கும் ஒருவர் புதிதாக ஒரு கொலையைச் செய்வதற்கு எப்படி பயப்படுவாரோ அந்த மனநிலை வெளிப்படுகிறது. எனவே சமந்தா கொலை செய்யும் கும்பலைச் சேர்ந்தவராக நடித்திருப்பார் என்கிற யூகம் எழுகிறது.
யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, பி.எஸ்.வினோத் மற்றும் நீராவ் ஷா ஒளிப்பதிவு செய்கின்றனர். இயக்குநர்கள் நலன் குமாரசாமி, மிஷ்கின், நீலன் ஷங்கர் ஆகியோர் துணை எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். டைலர் சடன் & கினோ ஃபிஸ்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன.