பணி நீக்கம் செய்யப்பட்ட காவலருக்கு மீண்டும் பணி!

திருச்சியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசி, பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் பெல்சனுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மெரினா கடற்கரையில் பீட்டா அமைப்புக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் போராட்டம் நடந்தது. இதில் சிறியோர், பெரியோர், முதியவர், திருநங்கை, பெண்கள் என அனைவரும் பங்கேற்றனர். இந்தப் போராட்டம் பல்வேறு நாடுகளைத் திரும்பி பார்க்க வைத்தது. அதில், காவலுக்கு நின்ற போலீஸார் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
அதுபோன்று, திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் ஊர்காவல் படை வீரர் பெல்சன், “ஜல்லிக்கட்டு நடக்காமல் இருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. போராட்டத்துக்கு போலீஸார் எதிரி கிடையாது. அதனால், அவர்களை மதித்து நடந்து கொள்ளுங்கள். தொடர்ந்து உங்களுக்கு உதவி செய்வோம். இதுபோன்று, விவசாயிகளுக்காகவும் போராட்டம் நடத்த வேண்டும்” எனப் பேசினார்.