மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: மறுபிறப்பெடுக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்!

சிறப்புக் கட்டுரை: மறுபிறப்பெடுக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்!

தன்வி பட்டேல்

மினரல் வாட்டர், சோடா, பழச்சாறு உள்ளிட்ட பானங்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் பாட்டில்களிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தியவுடன், பிளாஸ்டிக் பாட்டில்களைக் குப்பைக் கூளங்களில் தூக்கி எறிந்து விடுகின்றனர். அவ்வாறு எறியப்படும் பாட்டில்கள் மக்குவதற்கு நீண்ட காலம் ஆகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்படுவதோடு மண்வளமும் கெடுகிறது.

அப்படிப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து உபயோகிக்கும் சில மறுசுழற்சி ஆலைகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இந்தப் பாட்டில்கள் இங்குப் பிரித்தெடுக்கப்பட்டு, துண்டாக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு வண்ணம் பூசப்பட்டு, மறுசுழற்சி செய்யப்பட்டு பிளாஸ்டிக் நார்களாக (ஃபைபர்) மாற்றப்படுகின்றன. பின்னர் இவை உள்ளாடைக் கழிவுகள் மற்றும் நூலுடன் சேர்த்துப் பின்னப்பட்டுப் புதிய உருவில் ஆடைகளாக இந்தியா முழுவதும் சுற்றி வருகின்றன.

பிளாஸ்டிக் பாட்டில்களைக்கொண்டு உருவாக்கப்படும் இந்த நூலிழைகள் ஆடைகளாகவும், துடைக்கும் துணியாகவும் (துண்டு) உருவாக்கப்பட்டு சந்தைகளில் விற்பனைக்குத் தயாராகின்றன. இதில் போதிய வருவாயும் ஈட்ட முடிகிறது. இவ்வாறு பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து ஆடை தயாரிக்கும் பாணியை 1996ஆம் ஆண்டில் பி.பி.சுல்தானியா கையிலெடுத்தார்.

அனைத்திந்திய மறுசுழற்சி நார் மற்றும் நூல் சங்கத்தின் தலைவரான சுல்தானியா, இந்த நடைமுறை 2006ஆம் ஆண்டில் விரிவடையத் தொடங்கியதாகக் கூறுகிறார். “இதுபற்றிய விழிப்புணர்வு அதிகளவில் ஏற்பட்டதாலும், இவற்றின் பயன்பாடு விரிவடைந்ததாலும் இந்த நடைமுறை மேலோங்கத் தொடங்கியது. இந்தியாவில் சுமார் 35 நிறுவனங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. மாதத்துக்குச் சராசரியாக 50,000 டன் அளவிலான மறுசுழற்சி நார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன” என்கிறார் சுல்தானியா.

சுல்தானியா கூறுவது சரியாக இருந்தால் இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த பாலியெஸ்டரில் இந்த மறுசுழற்சி நார்களின் பங்கு மட்டுமே 50 சதவிகிதமாக இருக்கும்.

கோயம்புத்தூரில் பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் கழிவுத் துணிகளிலிருந்து நூல் நூற்கும் ஆலை ஒன்றின் உரிமையாளரான ஜி.அருள்மொழி கடந்த நான்காண்டுகளில் இந்த மறுசுழற்சி நடைமுறை உயர்ந்தோங்கியுள்ளதாகக் கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் வழக்கமாக ஜவுளி ஆலைகளிடமிருந்து கழிவுத் துணிகளை வாங்கி அவற்றை உதிரிப் பாகங்களாகப் பயன்படுத்துவோம். அதன்பிறகு அவற்றைக் கொண்டு நூற்கப்படும் நூலானது பவர்லூம் தறி ஆலைகளில் பயன்படுத்தப்படும். ஆனால், பஞ்சு விலை உயர்ந்தாலோ அல்லது கழிவுப் பஞ்சு இருப்பில் ஏற்ற இறக்கம் காணப்பட்டாலோ நிலைமை மோசமாகிவிடும். ஆனால், கழிவுப் பஞ்சுக்குப் பதிலாக பிளாஸ்டிக் நார்களைப் பயன்படுத்தும்போது செலவுகள் பெருமளவில் குறைக்கப்படுகின்றன. உற்பத்தியும் அதிகரிக்கிறது” என்று விளக்குகிறார்.

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் நார்களின் திறன் அளப்பரியது. துடைக்கும் துண்டுகள் உற்பத்தி செய்வதற்கு இவை சிறந்த மூலப்பொருளாக இருக்கின்றன. மேலும், குறைந்த விலை கொண்ட ஆடைகள் தயாரிப்பிலும் இந்த பிளாஸ்டிக் நார்கள் பயன்படுத்தப்படுகின்றன. நெசவாளர்களின் நூல் சாயமிடுதலுக்கான செலவும் இவற்றால் குறைகின்றன.

செலவுகள் குறைந்துள்ளது பற்றி சென்னிமலையைச் சேர்ந்த செல்வம் என்ற நெசவாளி தி இந்து ஊடகத்திடம் கூறுகையில், “முன்பெல்லாம் நாங்கள் வணிகர்களிடமிருந்து நூலை விலைக்கு வாங்கி அவற்றைச் சாயமிடுவதற்காக அனுப்புவோம். இதற்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகும். ஆனால், நாங்கள் இப்போது சாயமிடப்பட்ட நூலை வாங்குகிறோம். இதில் கிலோவுக்கு 10 ரூபாய் எங்களுக்கு மிச்சமாகிறது. 16 முதல் 18 வண்ணங்களில் எங்களுக்கு இந்த நூல் கிடைக்கிறது. இதை நேரடியாக அப்படியே நெசவுக்கு அனுப்பிவிடலாம். இந்த வகை நூல்களில் எவ்வித முடிச்சுகளும் இருப்பதில்லை. மேலும், பெட்ஷீட் தயாரிப்பில் இவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன” என்றார்.

எனினும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்குச் சில பிரச்னைகளும் இருக்கின்றன. விநியோகத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்தான் அவை. “குளிர்காலப் பருவத்தில் போதுமான பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடைப்பதில்லை. பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை இறக்குமதி செய்வதற்கு அரசு அனுமதிக்க மறுக்கிறது” என்கிறார் திருப்பூரில் பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலை ஒன்றை நடத்திவரும் கிருஷ்ண குமார்.

இருந்தாலும், தமிழகத்தில் இந்த பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களைக்கொண்டு ஆடை தயாரிக்கும் தொழில் வேகமெடுத்துள்ளது. மறுசுழற்சி ஆலைகள், கழிவுத் துணிகளிலிருந்து நூல் நூற்கும் ஆலைகள் ஆகியவை திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகரித்துள்ளதால் பிளாஸ்டிக் நார்களுக்கான தட்டுப்பாடு என்பது இல்லாத ஒன்றுதான். குறைந்த செலவில் அதிகத் தரத்துடன் இருக்கும் இந்த ஆடைகளுக்கும் அதிக மவுசு இருக்கத்தான் செய்கிறது.

நன்றி: தி பெட்டர் இந்தியா

தமிழில்: செந்தில் குமரன்

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 4 ஜன 2018