டைம்பாம் வெடிக்கலாம்!

‘ஆர்.கே.நகர் விவகாரத்தில் நாளைகூட டைம்பாம் வெடிக்கலாம் என்று கூறப்படுகிறது’ என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவிததுள்ளார்.
ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆளுங்கட்சி வேட்பாளர் மதுசூதனனைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். தேர்தலில் பாஜக, நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை இழந்தது. ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடாவின் மூலமாகவே தினகரன் வெற்றி பெற்றுள்ளார் என்று பாஜக தலைவர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்தில் நேற்று (ஜனவரி 3) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “ஆர்.கே.நகரில் பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது. ஆர்.கே.நகர் போல 234 தொகுதிகளிலும் பணம் கொடுப்பது என்பது இயலாத காரியம். எனவே, ஆர்.கே.நகர் வெற்றி என்பது எரிநட்சத்திரம் போன்றது. ஆர்.கே.நகர் விவகாரத்தில் நாளை (இன்று) ஏதோ டைம்பாம் வெடிக்கும் என்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவரை கூறுகிறேன். நாளை பொறுத்திருந்து பாருங்கள்” என்று புதிர்வைத்துப் பேசினார்.