ரஜினியை எதிர்த்தவர் ஆதரிக்கிறார்!

“தமிழகத்தில் உள்ள அனைவருமே ரஜினிக்குத் தான் வாக்களிப்பார்கள்” என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா ரஜினிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களைச் சந்தித்து அவர்களோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த், ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளான டிசம்பர் 31ஆம் தேதி, “அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்” என்று தனது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
ரஜினி தனது அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்தபோது அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வெளிவந்தன. இந்த நிலையில் ரஜினியின் படங்கள் குறித்தும் ரஜினி குறித்தும் இதுவரை விமர்சித்து வந்த இயக்குநர் ராம் கோபால் வர்மா அவருக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
“ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை அறிவித்தபோது அவரிடம் தென்பட்ட சக்தியை இதுவரை நான் கண்டதில்லை. என் கணிப்பின்படி, தமிழகத்தில் உள்ள அனைவருமே ரஜினிகாந்த்துக்குத்தான் வாக்களிப்பார்கள். அவரை எதிர்த்து போட்டியிடும் அனைத்து கட்சிகளுமே வாயடைத்துப் போகும். ‘தமிழகம் ஒரு சிலரால் அதன் கவுரவத்தை இழந்திருக்கிறது, அதை நான் மீட்டெடுப்பேன்’ என ரஜினிகாந்த் கூறியது மிகப் பெரிய விஷயம்” என்று தனது முதல் ட்விட்டில் கருத்து தெரிவித்தார்.
அடுத்த ட்விட்டில், “ரஜினிகாந்த் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்திருப்பதுபோல், பவன் கல்யாணும் ஆந்திராவில் எல்லா தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால் ரஜினி அளவுக்கு பவனுக்குத் துணிச்சல் இல்லை என ரசிகர்கள் எண்ணிவிடுவர். மேலும், தமிழ் சூப்பர் ஸ்டாரைவிட தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்குத் துணிச்சல் குறைந்தால் அது தெலுங்கு மக்களுக்குக் கௌரவ குறைச்சலாகிவிடும்” என்று ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்தும், தெலுங்கு ஸ்டார் பவன் கல்யாணின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.