மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

டிஜிட்டல் திண்ணை!

டிஜிட்டல் திண்ணை!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

“நாம் நேற்று முன் தினம் மாலையே சொன்னபடி, திமுக தலைவர் கருணாநிதியை நேற்று இரவு கோபாலபுரம் இல்லத்தில் சென்று சந்தித்துவிட்டார் ரஜினி. கருணாநிதியைச் சந்திப்பதற்கு ரஜினி வீட்டிலிருந்து சுதாகர் மூலமாக ஸ்டாலின் வீட்டுக்குப் பேசி இருக்கிறார்கள். ஸ்டாலின், ‘வந்து பார்க்கட்டும். எங்களுக்கு எதுவும் பிரச்னை இல்லை..’ என சொல்லிவிட்டாராம்.

கருணாநிதியைப் பார்க்க ரஜினி போகப் போகிறார் என்ற தகவல் பரவியதுமே, ஸ்டாலினுடன் பேசியிருக்கிறார் முரசொலி செல்வம். ‘இப்போ இருக்கும் அரசியல் சூழ்நிலையில் அவரை எதுக்கு தலைவரை சந்திக்க அப்பாயின்மெண்ட் கொடுத்தீங்க. அவரு தமிழ்நாட்டுல சிஸ்டம் சரியில்லைன்னு கட்சி தொடங்கப் போறதாக அறிவிச்சிருக்காரு. அவரு நமக்குதான் போட்டியா இருப்பாருன்னு எல்லோரும் பேசிட்டு இருக்காங்க. இந்த நேரத்துல அவரு தலைவரைப் பார்க்கிறது சரியா இருக்குமா? அப்பாயின்மெண்ட் கொடுக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கலாமே...’ என கேட்டாராம் செல்வம்.

அதற்கு ஸ்டாலின், ‘அதைப் பற்றி நான் யோசிக்கவே இல்ல. ரஜினி வீட்டுல இருந்து கேட்டாங்க. பார்க்கிறதால என்ன ஆகிடப் போகுது விடுங்க.. அதான் வரச் சொல்லிட்டேன். இனி வேண்டாம்னு சொன்னால் நல்லா இருக்காது...’ என்று சொன்னாராம்.

முரசொலி செல்வம் அவ்வப்போது ஸ்டாலினுக்கு அரசியல் ரீதியாக சில ஆலோசனைகளையும் சொல்லி வருகிறார். ஆளுநர் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது திமுக சார்பில் கறுப்புக் கொடி காட்ட வேண்டுமா என்று ஸ்டாலின் யோசித்துள்ளார். அப்போது, ‘நாளைக்கு அவர்தான் ஆட்சி பற்றி முடிவெடுக்கணும் என்பதற்காக ஆளுநர் நடத்தும் ஆய்வுகளை எல்லாம் நாம கண்டுகொள்ளாம இருந்துட முடியாது. அதனால் கறுப்புக் கொடி காட்டலாம்’ என்று ஸ்டாலினை அந்த முடிவெடுக்க தூண்டியது முரசொலி செல்வம்தான் என்கிறார்கள். அந்த வகையில்தான் ரஜினி வருகை பற்றியும் ஸ்டாலினிடம் தன் கருத்தைச் சொல்லியிருக்கிறார் முரசொலி செல்வம்.

இந்த நிலையில்தான், நேற்று ரஜினி வீட்டில் இருந்து கிளம்பும்போது கோபாலபுரத்துக்குத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. ‘ரஜினி கோபாலபுரம் வீட்டுக்குள் நுழைஞ்சு கருணாநிதி இருக்கும் அறைக்குள் போனார். அவர் உள்ளே நுழைந்ததுமே கருணாநிதி அவரைப் பார்த்து சிரித்தார். ரஜினியைப் பார்த்ததும் கருணாநிதிக்கு அவ்வளவு சந்தோஷம். சைகையால் ரஜினியை நலம் விசாரிச்சாரு. ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போகும் தகவலை ஒரு குழந்தை போல கருணாநிதியிடம் சொன்னாரு. அதைக் கேட்டதும் கருணாநிதி, ஆசிர்வாதம் செய்வது போல கையை சைகை செய்து காட்டினார். அதன் பிறகு கை ஜாடையிலேயே ரஜினியின் குடும்பத்தைப் பற்றியும் விசாரித்தார்.

உள்ளே போனதும் ரஜினி சில நிமிடம் நின்றபடியே கருணாநிதியிடம் குனிந்தபடி பேசினார். பிறகு கருணாநிதியே கையால் சைகை செய்து அவரை உட்காரச் சொல்லிவிட்டார். ரஜினி பேசப் பேச அதை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் கருணாநிதி. ரஜினியின் உடல்நிலை பற்றியும் கேட்டார். எல்லாவற்றும் ரஜினியும் சிரித்தபடியே பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் ஸ்டாலின் அருகே இருந்தாலும் அவர் எதையும் பெரிதாக ரசிக்கவில்லை. ரஜினியும் கருணாநிதியும் உட்கார்ந்தபடி பேசிய படங்கள் எவ்வளவோ இருந்தும், ரஜினி குனிந்தபடி ஆசிர்வாதம் வாங்குவது போன்ற படத்தைத்தான் மீடியாவுக்கு கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை எதுக்கு கொடுத்தாங்க. இதைவிட அதைக் கொடுத்து இருக்கலாமே என ரஜினியே சொல்லி வருத்தப்பட்டார். ரஜினியை வேண்டாத விருந்தாளியாகத்தான் ஸ்டாலின் அழைத்திருப்பார் போல இருக்கு. அதை ரஜினியும் உணர்ந்துகொண்டார்...’ என்று சொல்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமான நண்பர்கள்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

அதற்கு லைக் போட்டதுடன், அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது

வாட்ஸ் அப்.

தொடர்ந்து மெசேஜ் ஒன்றையும் டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.

“திமுக சார்பில் பிரம்மாண்ட மண்டல மாநாடு ஒன்றை நடத்த ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார். அந்த மாநாட்டை ஈரோட்டில் நடத்த விரும்புகிறாராம் ஸ்டாலின். அதற்காக ஈரோடு முத்துசாமியை அழைத்துப் பேசியவர், மாநாட்டுக்கான பணிகளைத் தொடங்கச் சொல்லிவிட்டாரம். ஆன்மிக அரசியல், திராவிடம் இல்லாத அரசியல் என பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு பெரியார் பிறந்த மண்ணில் இருந்து பதில் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் ஸ்டாலின். அதற்காகத்தான் மாநாட்டுக்கு ஈரோட்டை தேர்வு செய்திருக்கிறார். மாநாட்டுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 4 ஜன 2018