மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

ஆ.ராசாவுக்கு மன்மோகன் கடிதம்!

ஆ.ராசாவுக்கு மன்மோகன் கடிதம்!

2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

கடந்த 2009ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில், அப்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, அந்த அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பாட்டியாலாவில் உள்ள சிபிஐ சிறப்பு தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. கடந்த டிசம்பர் 21ஆம் தேதியன்று, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி ஓ.பி.சைனி.

அப்போது, சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவித்தார். அதோடு, வழக்கின் அடிப்படை சாராம்சம் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியான பிறகு, காங்கிரஸ் தலைவர் ராகுல் உட்பட அனைவரும் அது குறித்துத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

அந்த வழக்கு தொடரப்பட்ட காலத்தில் பிரதமர் பதவி வகித்த மன்மோகன்சிங்கும், 2ஜி வழக்கின் தீர்ப்பினை பொதுவாக வரவேற்றிருந்தார். ஆனால் தனது அமைச்சரவை சகாவான ஆ.ராசா பற்றி வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது பற்றிப் பொதுவெளியில் பரவலாக விவாதிக்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 26ஆம் தேதியன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆ.ராசா கடிதம் எழுதியிருந்தார்.

கடந்த பத்தாண்டுகளில் நமது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் 2ஜி வழக்கு பல திருப்பங்களை ஏற்படுத்தியதாக, அந்தக் கடிதத்தில் ராசா குறிப்பிட்டிருந்தார். ”பொய்யாகப் பரப்பப்பட்ட, ஆயிரம் மடங்கு ஊதிப் பெரிதாக்கப்பட்ட பிரச்சாரங்களால் நாடாளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் அவப்பெயர் உண்டானது. இதனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை இழந்தது; சிறையில் இருந்த 15 மாதங்கள் உட்பட, எனது அரசியல் வாழ்க்கையில் 7 ஆண்டுகள் பறிபோனது.

தேச நலனையொட்டி எனது செயல்பாடுகள் இருந்ததைத் தவிர, வேறெந்தத் தவறும் செய்யவில்லை என்று பலமுறை நான் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும். அப்போது சில நிர்ப்பந்தங்களால், நீங்கள் என்னை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. மற்ற சில அமைச்சர்களைப் போலில்லாமல், நான் உங்களுக்கு உண்மையாகவும் நாணயமாகவும் நடந்துகொண்டேன்; இதனால் விசாரணையின்போது, நீங்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படவில்லை என்று நம்புகிறேன். இப்போது 2ஜி பற்றிய உண்மை வெளிவந்துவிட்டது. இப்போதாவது முன்பு போல இல்லாமல், தாங்களாக முன்வந்து என்னை ஆதரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வாரம் நீலகிரியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், மன்மோகன் சிங்கை ராசா விமர்சித்ததாகச் செய்திகள் வெளியானது. ஆட்சியில் இருந்தபோது, தனது தரப்பு வாதத்தை பிரதமர் கேட்கவில்லையென்று ராசா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று ஆ.ராசாவுக்கு மன்மோகன்சிங் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் அவரது கடிதம் கிடைக்கப்பெற்றது என்றும், 2ஜி வழக்கிலிருந்து ஆ.ராசா விடுவிக்கப்பட்டதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “இந்த வழக்கு உங்களையும் உங்களது குடும்பத்தினரையும் பல்வேறு இன்னல்களுக்கு உட்படுத்தியது. தற்போது உண்மை வெளியாகியிருப்பதால், உங்களது நண்பர்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள். உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள். இனிய புத்தாண்டு அமையட்டும்” என்று தனது கடிதத்தில் சொல்லியிருக்கிறார் மன்மோகன் சிங்

2ஜி வழக்கில் முன்னாள் பிரதமரின் நிலை என்னவாக இருந்தது என்பது பற்றி ஆ.ராசா தொடர்ந்து கூறிவந்தார். அதற்கு பதிலேதும் அளிக்காத மன்மோகன் சிங், முதன்முறையாக ஆ.ராசாவுக்கு எழுதிய கடிதத்தில் அதனை வெளிப்படுத்தியிருக்கிறார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வியாழன் 4 ஜன 2018