காலிறுதியில் மரியா ஷரபோவா

சீனாவில் நடைபெற்றுவரும் சென்சென் ஓபன் தொடரின் லீக் சுற்றுப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா வெற்றிபெற்றுக் காலிறுதியில் நுழைந்தார்.
பெண்களுக்காக நடத்தப்படும் சென்சென் டென்னிஸ் தொடர் தொடரில் நேற்று (ஜனவரி 2) நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா, அமெரிக்காவின் அலிசான் ரிஸ்கியுடன் மோதினார்.
முதல் செட்டில் 3-6 என்ற கணக்கில் ஷரபோவா தோல்வியைத் தழுவினாலும், இரண்டாவது செட்டில் 6-3 என வென்று போட்டியை சமன் செய்தார். எனவே வெற்றியைத் தீர்மானிக்கும் 3ஆவது செட் மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்றது. அதனை 6-2 என ஷரபோவா கைப்பற்றினார். இதன்மூலம் 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்ற ஷரபோவா காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
இந்த ஆட்டம் சுமார் இரண்டரை மணிநேரம் நீடித்தது. நாளை (ஜனவரி 4) நடைபெறவிருக்கும் காலிறுதி ஆட்டத்தில் ஷரபோவா துருக்கி வீராங்கனை ஜரீனா டியாஸ் உடன் மோத உள்ளார்.