மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

விஜய் 62: திரும்ப வரும் துப்பாக்கி ‘சிகரெட்’ சர்ச்சை!

விஜய் 62: திரும்ப வரும் துப்பாக்கி ‘சிகரெட்’ சர்ச்சை!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள அவரது 62ஆவது படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். 62ஆவது படம் குறித்த செய்தியைக் கொண்டாடுவதற்கான நாளாகத்தான் இது இருந்தது. ஆனால், விஜய் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி வேறு வழியில் பேச்சைத் திருப்பிவிட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் முதல் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் ஷூட் சமீபத்தில் நடைபெற்று, விஜய்யின் லுக் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் விஜய் கறுப்பு நிற உடையில், ரோல்ஸ் ராய்ஸ் காருக்குப் பக்கத்தில் நிற்பது போலவும், நடந்து வருவது போலவும் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க, படக்குழு அதன் வீடியோவையும் புகைப்படங்களையும் இணையத்தளத்தில் வெளியிட்டனர். ஃபோட்டோக்கள் ரிலீஸான வரை விஜய்யின் ஸ்டைலான லுக் பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர்கள், வீடியோவில் விஜய் சிகரெட் பிடிப்பது தெரிந்ததும் வேறு பக்கம் திரும்பிவிட்டார்கள்.

2012ஆம் ஆண்டு விஜய் முதன்முதலில் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த துப்பாக்கி திரைப்படத்தின் போஸ்டரில், அவர் சுருட்டு பிடிப்பது போன்ற ஃபோட்டோஷூட் நடத்தப்பட்டு வெளியானது. அப்போது, பசுமை தாயகம் அமைப்பைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் வி.ரவிச்சந்திரன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில் “பொது இடங்களில் புகைப்பிடிப்பதை மத்திய அரசு தடைசெய்துள்ளதுடன், புகையிலைப் பொருட்களுக்கான விளம்பரங்களையும் தடை செய்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில், துப்பாக்கி திரைப்படத்தின் இந்த போஸ்டர் புகைப்பிடிப்பதை ஊக்குவிக்கும் விதத்தில் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு விளக்கமளித்த முருகதாஸ் “நாங்கள் படத்தின் விளம்பரத்துக்காகத்தான் இந்த போஸ்டரைப் பயன்படுத்தினோமே தவிர, படத்தில் இந்தக் காட்சி இல்லை. இன்னொரு சிறு காட்சியில் விஜய் புகைபிடிப்பது போல இருக்கிறது. அதை நீக்கிவிடவும் நாங்கள் தயார்” என்று கூறி, அந்தக் காட்சியையும் படத்திலிருந்து எடுத்திருந்தார். அதற்குப் பிறகான விஜய்யின் திரைப்படங்களில், அவர் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை. விஜய்யின் இந்த மாற்றம், குழந்தை ரசிகர்களை அதிகளவில் கொண்ட நடிகர் என்பதால், நல்ல வரவேற்பைக் கொடுத்தது. ஆனால், மெர்சல் திரைப்படத்தில் மந்திரவாதியாக நடித்திருந்த கேரக்டரில் வரும் சில காட்சிகளில் விஜய் சிகரெட் பிடித்திருந்தார்.

ஆனால், துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றது போலவே, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான இந்த ஷூட்டிலும் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டிருப்பது தற்போதே சர்ச்சையை உருவாக்கி, படத்தின் மற்ற தகவல்களை மறைத்துவிட்டது.

இந்தப் படத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், நாயகியாகக் கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஜனவரி 3) வெளியிட்டுள்ளது. விஜய்யுடன் நடிக்கவுள்ள இதர நடிகர், நடிகைகள் குறித்த தேர்வு மும்முரமாக நடைபெற்றுவருகிறது. பொங்கல் பண்டிகை முடித்தவுடன், படப்பிடிப்பு தொடங்கப் படக் குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 3 ஜன 2018