மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு!

‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு!

அமெரிக்கத் தமிழ் இலக்கிய அமைப்பான விளக்கு நிறுவனத்தின் 2016ஆம் ஆண்டிற்கான புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட இருக்கின்றன.

1996இல் தொடங்கி இதுவரை சி.சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், பூமணி, சி. மணி, ராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், எஸ். வைதீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார், தேவதச்சன், எம்.ஏ. நுஃமான், பெருமாள்முருகன், கோணங்கி, சி.மோகன், என். கல்யாண ராமன் ஆகிய படைப்பாளிகள் விளக்கு அமைப்பால் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாண்டில் இருவருக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டு எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவரையும் எழுத்தாளர் அம்பை, கவிஞர் தமிழச்சி, கவிஞர் பெருந்தேவி ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்துள்ளது.

ராஜ் கௌதமன்

1950இல் விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டியில் பிறந்த ராஜ் கௌதமன் (எஸ்.புஷ்பராஜ்) புதுச்சேரியின் காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் தமிழ்த்துறைத் தலைவராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எழுத்தாளரும் பேராசிரியருமான ராஜ் கௌதமன் தமிழ் மற்றும் இந்திய நவீன இலக்கியத்திற்கும் ஆய்வுப் புலத்துக்கும் சிறந்த பங்களிப்பை செய்து வருகிறார்.

க.அயோத்திதாசர் ஆய்வுகள், பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, அறம் அதிகாரம், அ.மாதவையா, தலித்திய விமர்சனக் கட்டுரைகள், கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக, கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு போன்ற நூல்கள் வழி அவர் சங்ககாலம் தொட்டு நவீனகாலம் வரை பரந்துபட்ட பார்வையை மேற்கொண்டுள்ளதை அறியலாம்.

மேலும், பிரக்ஞை, பரிமாணம், படிகள் போன்ற சிறு பத்திரிகைகளோடு செயல்பட்டவர், 1990-களின் தொடக்கத்தில் வெளிவந்த நிறப்பிரிகை இதழின் கருத்துவெளியைக் கட்டியமைத்ததிலும் பங்காற்றியுள்ளார். சமூக வரலாற்றெழுத்துக்கும் திறனாய்வுக்கும் நவீனத்துவத்துக்கும் அளப்பரிய பங்காற்றியிருக்கும் எழுத்தாளர் ராஜ் கௌதமனைக் கௌரவித்துப் போற்றும் வகையில் 2016ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருது வழஙக்ப்பட இருக்கிறது.

சமயவேல்

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகிலுள்ள வெம்பூர் கிராமத்தில் 1957இல் பிறந்த கவிஞர் சமயவேல் அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்று மதுரையில் வசிக்கிறார். சமகாலத் தமிழ்க் கவிதையின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். எண்பதுகளின் இறுதிப்பகுதியில் ஒரு முக்கியமான கவிஞராக உருவாகிய இவர் தமிழில் Plain Poetryயை முதலில் அறிமுகப்படுத்தியவர் ஆவார். வாழ்வியல் நெருக்கடிகளை, இந்திய கிராமிய சிதைவுகளின் வழியாக தமிழ் அழகியலோடு கவிதைகளாக மாற்றியவர் சமயவேல்.

காற்றின் பாடல், அகாலம், தெற்கிலிருந்து சில கவிதைகள் (தொகை நூல்), அரைக்கணத்தின் புத்தகம், மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும், இனி நான் டைகர் இல்லை(சிறுகதைகள்), பறவைகள் நிரம்பிய முன்னிரவு, ஆண்பிரதியும் பெண் பிரதியும் (கட்டுரைகள்) என்பன போன்று ஆறு கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும், கட்டுரைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்புப் பணி எனத் தமிழ் இலக்கியப் பரப்பில் இயங்கிவரும் அவரின் ஆழமான பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக 2016ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருது வழங்கப்பட இருக்கிறது.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

புதன் 3 ஜன 2018