பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் ஆய்வில்லை?

பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் அங்கு ஆளுநர் ஆய்வு செய்யவில்லை என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி, புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுநர்களை வைத்து மாநில அரசுகளை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சி செய்கிறது என்று பல்வேறு கட்சிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் தமிழகத்தில் ஆளுநரின் ஆய்வு என்பது தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவினர், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடிக் காட்டி வருகின்றனர். நேற்றும் தஞ்சையில் நடைபெற்ற ஆய்வுக்கு எதிராக திமுக உள்பட பல்வேறு கட்சியினர் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
இந்த சூழ்நிலையில் இன்று (ஜனவரி 3) புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசையிடம், மற்ற மாநிலங்களில் ஆய்வு செய்யும் ஆளுநர்கள் ஏன் பாஜக ஆளும் மாநிலங்களில் ஆய்வு செய்யவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு, பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் அங்கு ஆளுநர் ஆய்வு செய்யவில்லை, ஆய்வு நடைபெறுவதால் ஆளுநர் ஆட்சி நடக்கிறது என்று சொல்லக் கூடாது என்று விளக்கம் அளித்துள்ளார் தமிழிசை.