விபத்து இல்லாத பாதுகாப்பான ஆண்டு!

2017ஆம் ஆண்டில் பயணிகள் விமான விபத்து இல்லாத ஆண்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என டச்சு நாட்டு விமானப் போக்குவரத்து ஆலோசனை நிறுவனமான டூ 70யும் ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க் இணையதள ஆய்வு நிறுவனமும் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து டச்சு நாட்டு விமானப் போக்குவரத்து ஆலோசனை நிறுவனமான டூ 70யும் ஏவியேஷன் மற்றும் சேஃப்டி நெட்வொர்க் என்ற இணையதள ஆய்வு நிறுவனமும் ஆய்வுகளை மேற்கொண்டன. அதில், பயணிகள் விமான போக்குவரத்தில் 2017ஆம் ஆண்டு பாதுகாப்பான ஆண்டாக இருந்தது. கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 1 கோடியே 60 லட்சம் பயணிகள் விமான சேவையில் ஒரு விமானம் மட்டுமே விபத்துக்குள்ளானது என டூ 70 ஆய்வில் தெரிவித்துள்ளது.
ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க் ஆய்வில் கடந்த ஆண்டில் பயணிகள் விமான விபத்தில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு விமானம் உள்ளிட்ட மற்ற வகை விமான விபத்துகளில், விமானங்களில் பயணித்த 44 பேரும், தரையில் இருந்த 35 பேரும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக, 2016ஆம் ஆண்டில் 16 விபத்துகள் மற்றும் 303 பேர் உயிரிழந்தனர். விபத்துகள், இறப்பு எண்ணிக்கை ஆகிய இரண்டிலுமே 2017ஆம் ஆண்டு பாதுகாப்பான ஆண்டாக இருந்தது. கடந்த இரண்டு பத்தாண்டுகளாக விமான விபத்துகள் படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2005ஆம் ஆண்டில், உலக அளவில் பயணிகள் விமானங்களில் 1,015 பேர் இறந்துள்ளனர். 2009ஆம் ஆண்டில் 50 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.