மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் விவசாயிகளின் வாழ்க்கை!

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் விவசாயிகளின் வாழ்க்கை!

எம்.எஸ். ரவுனாக், சிரேஷ்ட சரஸ்வத்

யதார்த்த உலகிலிருந்து சில சித்திரங்கள்

விவசாயிகள் தங்களின் உரிமைகளுக்காகக் கடுமையாகப் போராடிய எழுச்சியை 2017ஆம் ஆண்டு சந்தித்தது. தமிழக விவசாயிகள் இரண்டு கட்டங்களாக பல நாள்கள் நடத்திய டெல்லி போராட்டம், மத்தியப்பிரதேசத்தில் போராடிய விவசாயிகள் மீது அம்மாநில காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியான சம்பவங்கள் ஆகியவை சட்டென்று நினைவுக்கு வருகின்றன. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் விவசாயிகள் தங்களையும், தங்களின் உரிமைகளையும் தற்காத்துக்கொள்வதற்கான போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கான பிரச்னைதான் என்ன என்பதை அறிய, இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து சமூகப் பொருளாதார ஆராய்ச்சி சங்கத்தின் வழிகாட்டுதலுடன் டெல்லி ஆராய்ச்சி மாணவர்கள் பலரைச் சந்தித்துப் பேசிப் பதிவு செய்திருக்கிறார்கள்.

கடந்த மாதம் 21-23 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கலந்துகொண்டனர். நாடாளுமன்றத்தில் பேச முடியாத தங்களின் பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் இந்த மூன்று நாள்கள் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாயப் பிரதிநிதிகளும் முன்வைத்தனர். இதில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த விவசாயி ஆண்டவர் என்பவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் வறட்சியால் அவருக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்துக் காண்போம்.

தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான அரியலூர் மாவட்டம் கரைவெட்டியைச் சேர்ந்தவர் ஆண்டவர். 46 வயதாகும் இவர் ஊரில் நெல் விவசாயம் செய்துவருகிறார். வறட்சியால் அவரது குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்களைக் கேட்டறிய நாம் அவரிடம் பேசினோம்.

டிப்ளோமா இன் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படித்துள்ள ஆண்டவர், அந்தத் துறைக்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. சொந்தமாக 5 ஏக்கரில் விவசாயம் செய்தும், கால்நடைகள் வளர்த்தும் வருகிறார். இவரது குடும்பம் 9 பேரைக் கொண்ட கூட்டுக் குடும்பம். இரண்டு சகோதரர்கள். ஒருவர் மணிவண்ணன், கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வனக் காப்பாளராகப் பணிபுரிகிறார். மற்றொரு சகோதரர் சுந்தரம் எப்போதாவது சமையல் வேலைக்குச் செல்வார். ஆண்டவரின் மனைவி இறந்துவிட்டார். இரு மகன்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கின்றனர். வயல் வேலைகளில் ஆண்டவர், அவரது தாய் கோவிந்தம்மாள், மைத்துனி பூமாலா ஆகியோர் ஈடுபடுவர். சகோதரர்களும் அவ்வப்போது வயலில் வேலை செய்வார்கள்.

காவிரி டெல்டா பாசனப் பரப்பில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயத்திலும், அது சார்ந்த பிற தொழில்களிலுமே ஈடுபட்டுவருகின்றனர். 2014-15 புள்ளிவிவரத்தின்படி மாவட்டத்தின் 20 சதவிகித இடங்களில் நெல் பயிரிடப்பட்டுவருகிறது. முந்திரி, கரும்பு, மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை மற்றும் பயிர் வகைகள் மற்ற முக்கியப் பயிர்களாக உள்ளன. பாசனத்தைப் பொறுத்தவரை ஆறு, ஏரி மற்றும் போர்வெல் பாசனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஆண்டவரின் சொந்த ஊர் மாவட்டத் தலைநகரத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி கரைவெட்டி கிராமத்தில் 793 வீடுகள் உள்ளன. மொத்த மக்கள்தொகை 3,051. இதில் 1,248 பேர் விவசாயிகள். 496 பேர் விவசாயத் தொழிலாளர்கள்.

கரைவெட்டி கிராமம் தனது பாசனத்துக்குப் பெரிதும் நம்பியிருப்பது கரைவெட்டி ஏரியையே. தமிழ்நாட்டின் பெரிய ஏரிகளில் ஒன்றான கரைவெட்டி ஏரிக்கு வடகிழக்குப் பருவமழையை ஒட்டிய பருவமான அக்டோபர்-டிசம்பர் மாதத்தில் நீர்வரத்து அதிகரிக்கும். மேட்டூர் அணையிலிருந்தும் கொள்ளிடம் வழியாகவும் ஏரிக்குத் தண்ணீர் வருகிறது.

கரைவெட்டி கிராமத்தின் முக்கிய வேளாண் பருவம் நவரைப் பருவம் (ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை). இப்பருவத்தில் 120 நாள்கள் கால அளவுள்ள நெல்லைப் பயிரிடுகின்றனர்.

நவரையில் நிலத்தைச் சமன்படுத்த டிராக்டர் மூலம் உழவு செய்தல், விதை விதைத்தல் ஆகிய பணிகளை வாடகை டிராக்டர் வைத்து செய்கிறார் ஆண்டவர். அதையடுத்து அறுவடை செய்து நெல்லைக் கொள்முதல் நிலையம் கொண்டுசெல்வது வரை அனைத்துப் பணிகளையும் வேலையாட்களை வைத்தே செய்ய வேண்டியுள்ளதாகக் கூறுகிறார். மற்ற சில பணிகளை ஆண்டவரின் குடும்ப உறுப்பினர்களே கவனித்துக்கொள்கின்றனர். கடந்த நவரை பருவத்தில் ஆண் வேலையாட்களுக்கு தினக் கூலியாகத் தலா 600 ரூபாயும், பெண் வேலையாட்களுக்குத் தலா 300 ரூபாயும் கொடுத்துள்ளார்.

ஆனால், நடப்பு ஆண்டில் இவரது நிலம் 200 நாள்கள் வரை தரிசாகவே கிடந்துள்ளது. சில சமயங்களில் தண்ணீரின் இருப்பைப் பொறுத்து, நெல் அறுவடைக்குப் பிறகு சோளம் விதைத்துள்ளனர். ஆனால், தண்ணீர் இல்லாத காரணத்தால், கடந்த இரண்டு வருடங்களாக நவரை பருவத்துக்குப் பிறகு தங்களது நிலத்தை தரிசாகவே ஆண்டவரின் குடும்பத்தினர் விட்டுவிடுகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாகவே தமிழகத்தில் மழையின் அளவு மிகவும் குறைந்ததாகவே உள்ளது. கடந்த 140 ஆண்டுகளில் ஆகக் குறைவான மழைப் பொழிவு 2016ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாய சங்கமான தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைமையில் டெல்லியில் திரண்ட விவசாயிகள், ‘தமிழகத்துக்கு ரூ.40,000 கோடி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், தங்கள் பொருள்களுக்கான விலையை தாங்களே முடிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு கட்டங்களாகப் போராட்டம் நடத்தினர்.

2015ஆம் ஆண்டு 120 குவிண்டால் நெல் விளைச்சலை எடுத்த ஆண்டவரின் குடும்பத்தினர், அதில் 30 குவிண்டாலை வீட்டு உபயோகத்துக்கு வைத்துக்கொண்டனர். அதுபோக தமிழக அரசின் நுகர்பொருள் வழங்கல் துறைக்கு குவிண்டால் ரூ.1,420 ரூபாய் வீதம் விற்பனை செய்துள்ளனர். அறுவடைக்குப் பிறகு கிடைத்த 175 குவிண்டால் வைக்கோல் போரை கால்நடை தீவனமாக குவிண்டால் ஒன்றுக்கு 143 ரூபாய் விலையில் விற்பனை செய்துள்ளனர். இவற்றின் மூலமாக அந்த ஆண்டில் ஆண்டவரின் குடும்பத்தினர் ஈட்டிய மொத்த வருமானம் 1.25 லட்சம் ரூபாய்.

ஆண்டவரின் இல்லத்தில் ஐந்து பசு மாடுகளும், மூன்று எருமை மாடுகளும் இருந்துள்ளன. மாட்டிலிருந்து பெறப்படும் பாலின் மூலம் வரும் வருமானம் அவசர காலங்களில் அவர்களுக்கு உதவிகரமாக இருந்திருக்கிறது. ஆனால், வறட்சியால் கால்நடைகளுக்குத் தீவனங்கள் கிடைக்கவில்லை என்பதால், கால்நடைகளைப் பராமரிப்பதில் பொருளாதாரச் சிக்கல்களும் வந்தன. எனவே அவற்றைக் கிடைத்த விலைக்கு விற்றுவிட்டார்கள்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் ஆண்டவரின் குடும்பத்துக்குக் கடன் சுமை அதிகமாகி மோசமான நிலையைச் சந்தித்துள்ளனர். 2015ஆம் ஆண்டில் வீட்டிலுள்ள நகைகளை அடமானம் வைத்துக் கூட்டுறவு வங்கியின் மூலம் 1 சதவிகித வட்டியில் 1.35 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். 2010ஆம் ஆண்டில் வருடத்தில் 7 சதவிகிதம் வட்டியுடன் தமிழக அரசு வழங்கிய வேளாண் கடனையும் பெற்றுள்ளனர். மேலும் தங்கள் அன்றாடச் செலவினங்களுக்காக 1.25 லட்சம் ரூபாய் கடனைத் தனியாக வாங்கியுள்ளனர்.

கடந்த ஏழு வருடங்களில் தங்களுடைய கடனை அடைப்பதற்காக 2 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டனர். இது மட்டுமல்லாது, தினமும் ஆகும் செலவுகள், குடும்பத்திலிருந்து பள்ளிக்குச் செல்லும் நான்கு பிள்ளைகளின் கல்விச் செலவு வேறு உள்ளன. இந்த நிலையில் கடன்களைத் திருப்பிச் செலுத்துவது இவர்களுக்கு இயலாத காரியமாகவே உள்ளது.

வறட்சிக்காகத் தமிழக அரசிடமிருந்து ஏதேனும் நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், மீதமுள்ள நிலத்தையும் விற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அஞ்சுகிறார் ஆண்டவர். காவிரி நதிநீர் பிரச்னைகளைத் தீர்த்து டெல்டாவின் கடைமடைப் பாசனத்துக்குத் தேவையான நியாயமான நீரை வழங்கினால் எங்களுக்கான விவசாய பாசனம் சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

“மத்திய, மாநில அரசுகள் பயிர்களுக்கு உரிய கொள்முதல் விலையையும் உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில் பயிர்க் காப்பீடும் வழங்காவிட்டால் என்னுடைய கிராமத்தில் பல விவசாயிகள் தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்படுவார்கள்” என்று அவர் கூறினார்

கட்டுரையாளர்கள்: எம்.எஸ். ரவுனாக், ஆராய்ச்சி மாணவர், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்; சிரேஷ்டா சரஸ்வத், சமூக, பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு மாணவர்.

நன்றி: https://newsclick.in/lives-peasants-india-4

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 3 ஜன 2018