மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: எங்களுக்கான ராணுவம் உருவாகிறது - 2

சிறப்புக் கட்டுரை: எங்களுக்கான ராணுவம் உருவாகிறது - 2

பார்வதி

பெண்கள் மீதான வெறுப்பு எல்லா இடங்களிலும் இருக்கிறது. ஆனால், அது கவலைப்படும் அளவுக்குப் பெரிய விஷயம் அல்ல என நினைக்கும் அளவுக்கு நாம் சமாதானம் செய்யப்பட்டிருக்கிறோம். ஒரு பார்ட்டி அல்லது குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளும்போது, குறிப்பாக மூத்தவர்கள் ‘அதெல்லாம் ஆண்கள் செய்ய வேண்டிய வேலை. உனக்கெதற்கு?’ என்று கேட்பார்கள்.

இதுபோன்ற பேச்சு உருவாகும்போது, அந்தப் பெண்ணே குலுங்கிச் சிரிப்பார். யாரும் யாரிடமும் அப்படி சொல்லக் கூடாது என்று சொல்வதே இல்லை.

இது பெண்களுக்கான பிரச்னை மட்டுமல்ல. ஆண்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்கள் அழக் கூடாது, உணர்ச்சிவசப்படக் கூடாது என்று ஓர் இயல்பு மனிதனாக ஆணை இருக்கவிடாமல் கட்டுப்படுத்தி வைக்கிறார்கள்.

சிலர் குழுவாக இணைந்து மற்றவரின் பாலினத்தைப் பற்றி ஜோக் அடிப்பது சிறியதாகத் தெரியலாம். ஆனால், பெரிய திரையில் பெரியளவில் அது பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் கலை இன்னும் பெரிய அளவில். அந்த ஹாலில் யாரோ ஒருவர், இது தவறு இதற்கு சிரிக்கக் கூடாது என்று நினைக்கலாம். ஆனால், எல்லோரும் சிரிக்கும்போது அவரும் சிரிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதன்பின் இது ஓர் இயல்பாகவே மாறி, மீண்டும் இதுபோல எங்கு கேட்டாலும் சிரிக்கத் தோன்றும்.

பெண்களும் உணர்ந்துகொள்ள வேண்டுமா?

நம் பெண்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது. குறிப்பாக, தங்கள் மீதான வெறுப்பைக் கண்டு அச்சுறுத்தல் அடையாதவர்கள். அவர்கள் பல காலமாக பேசாமல் இருப்பதிலும், அடி வாங்குவதிலும், பாதிக்கப்படுவதிலும் தவறில்லை என்று ஏற்றுக்கொள்ளும்படி தயார்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இதுவரையிலும் சுதந்திரத்திலிருந்து பிரித்துவைக்கப்பட்டவர்கள்.

உதாரணமாகச் சொல்வதென்றால், அவர்கள் சொல்லும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குள் அடங்காத நான் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் எனப் பல பெண்கள் நினைக்கிறார்கள். நான் முழுமையடையாத பெண் என்பது அவர்களது நினைப்பு.

என்னை விமர்சித்துப் பேசும் பெண்களைப் பற்றி மட்டும் நான் பேசவில்லை. நான் படங்களில் அணிந்துகொள்ளும் உடை, நான் நடித்த ‘லிப்லாக்’ காட்சியைப் பற்றி எல்லாம் பேசுகிறார்கள். இருவர் மனதும் ஏற்றுக்கொண்ட பின் காதலனுடன் நெருக்கமாக இருப்பதையும், பாலியல் ரீதியாக ஒரு பெண்ணை மிரட்டுவதையும் எப்படி ஒரே மாதிரியானதாக எடுத்துக்கொள்ள முடியும்?

அந்த மாதிரியான காட்சிகளில் நடித்துவிட்டதால், நான் எதையும் விமர்சிக்கத் தகுதியற்றவள் என நிறுவ முயற்சிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பழைய பஞ்சாங்கத்துக்குச் சென்று பெண்ணின் தூய்மையைப் பற்றிப் பேசுகிறார்கள். ஓர் ஆண் தொட்டுவிட்டாலோ அல்லது கன்னித்தன்மையை இழந்துவிட்டாலோ அந்தப் பெண் தூய்மையானவர் அல்ல. எனவே, அவர்களது கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருதப்படுகிறது.

என்னுடைய குணம் நான் நடிக்கும் கேரக்டர்களைப் பொறுத்துக் கணக்கிடப்படுகிறது. இன்று நான் மிகவும் பாதுகாப்பாகச் சொல்வேன், என்னுடைய படங்கள் அல்லது குறைந்தபட்சம் என் கேரக்டர் எந்த விதத்திலும் தவறான செயல்களைப் பெருமையான ஒன்றாகக் காட்சிப்படுத்தியது இல்லை. அத்துடன், என் கேரக்டர் உணர்த்திய பாலியல் உணர்வுகளைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். ஏனென்றால், தற்போதைய சமூகத்தில் அது தேவையான அளவுக்கு இல்லை. பெண்கள் உணர்வுபூர்வமான, அறிவார்ந்த உயிர்களாக இருக்கலாம் என சொல்லப்பட்டிருப்பது போலவே, சமயங்களில் அவர்கள் பாலியல் உயிர்களாகவும் இருக்கலாம்.

பெண்களுக்கு எதிரான தாக்குதல் தொடங்கியதும் கொலை அல்லது பாலியல் ரீதியான மிரட்டல்களையே எதிர்கொள்கின்றனர்.

என் வயதும் இதற்கு ஒரு காரணம். வயதான ஒரு பெண் நான் சொன்னதைச் சொல்லியிருந்தால் அந்தப் பேச்சு அறிவுரையாகத் தெரிந்திருக்கும். ‘சின்ன வயதிலேயே நீ இப்படிப் பேசலாமா?’ என்பது இன்னொரு பக்கம். அடுத்து ‘ஆன்ட்டி’ என்று சொல்வதை அவமானப்படுத்திவிட்டதாக நினைக்கிறார்கள். ஒருவரது பாலினத்தை வைத்து இப்படியெல்லாம் அவமானப்படுத்தலாம் என சில கணக்கீடுகளை வைத்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் உங்களை பாலியல் ரீதியாகவோ, உடலமைப்பு மூலமாகவோ, எந்தளவுக்கு சம்பாதித்திருக்கிறீர்கள் என்பதையோ அடிப்படையாக வைத்து அவமானப்படுத்துவார்கள்.

என் நண்பர்கள் திரைக்கதை எழுத்தாளர்கள் பாபி-சஞ்சய் ஆகியோர் சமீபத்தில் கிண்டலாக ஒன்றை எழுதியிருந்தார்கள். இந்தத் தாக்குதல்கள் பல நிலைகளில் நடைபெறும் என்றும், தாக்கப்படும் பெண் பின்வாங்கவில்லை என்றால் பயங்கரமான அளவுக்குச் செல்லும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். இயக்குநர் ஆஷிக் அபு இதைப் பற்றி விளக்கமாகவே பேசிவிட்டார். எல்லாவற்றுக்கும் பின்னால், ‘பேசாதே. நீ என்னை சங்கட நிலைக்குக் கொண்டு செல்கிறாய்’ என்ற எண்ணம்தான் தெரிகிறது.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டும் என்பதுதான் எனக்குச் சொல்லப்படுவது. அமைதியாக இருந்தால் சில நாள்களில் மறந்துவிட்டு, அடுத்த விஷயத்துக்கு சென்றுவிடுவார்கள் எனச் சொல்கிறார்கள். உண்மைதான். இந்நாள்களில் ஒவ்வொரு பிரச்னைக்கும் குரல் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். ஆனால், இப்போது நான் அமைதியாக இருந்தால் அடுத்த முறையும் அமைதியாக இருக்க வேண்டுமல்லவா? எனவே, ஒவ்வொரு முறை நான் பேசும்போதும் பயப்பட வேண்டியிருக்கும். நானும் சட்டத்துக்குட்பட்டு, வரி செலுத்தும் குடிமகள்தான். அதுபோன்ற எல்லா குடிமக்களுக்கும் பேசுவதற்கான உரிமை இருக்கிறது. நான் மரியாதையான வகையில்தான் பேசினேன்.

எண்ணிக்கையில் நம்பிக்கை

இன்று, கேரள சினிமாவில் Women in Cinema Collective நம்மிடம் இருக்கிறது. சினிமாவிலிருக்கும் பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஒன்றுகூடி சினிமா இருக்கும் நிலைகுறித்து கலந்தாலோசிக்கவும், வேலை செய்யும் இடத்தை மேலும் சிறப்பானதாக மாற்றுவதற்கான வழிகளையும் இது ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. எங்களுடைய சக ஊழியர் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் கடத்தப்பட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டபோது எங்களுக்குள் பேசி சில சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்கான இடம் இல்லை என்பதை உணர்ந்தோம். அதற்கு முன்பு எங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளை அனுபவத்தின் மூலமாகத் தனித்தனியாகத் தீர்த்துக்கொண்டிருந்தோம். சமயத்தில், ஒருவரையே பலர் தனித்தனியாகச் சமாளித்தார்கள். அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தோம். ஆனால், இனி அப்படி இருக்கப் போவதில்லை. நாங்கள் பணிபுரியும் இடத்தில் எங்களுக்கான உரிமை எதுவென்பதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருந்ததால், எங்களுக்குள் விவாதித்து WCC-Women in Cinema Collective தொடங்கப்பட்டது.

ஆண்களை நாங்கள் எதிர்ப்பதாக ஒரு பிம்பம் இருக்கிறது. பிறகு சிலர் எங்களை ‘பெண்ணியவாதிகள்’ என்பது கெட்ட வார்த்தை போல நினைத்து அதன்மூலம் தாக்குகிறார்கள். அதற்குக் காரணம், பெண்ணியம் என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டதுதான். யாரெல்லாம் திறந்த மனதுடன் கேட்டுக்கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கு நாங்கள் இணைந்து பணியாற்றி வளர்வதற்காகத்தான் ஒன்றுசேர்ந்திருக்கிறோம் என்பது புரியும்.

அதற்குச் சில காலம் எடுக்கும். ஆனால், அந்தக் காலம் நல்ல முறையில் பயன்படுத்தப்படும். பல தலைமுறைகளுக்குப் பொறுத்துக்கொண்டு இருந்தவற்றையெல்லாம் சட்டம் – அன்பு - மரியாதை ஆகியவற்றின் மூலம் சரிசெய்ய ஒரு ராணுவம் உருவாகிறது.

இன்று மேற்குலகில் யாருமே இன வெறியைக் காட்டும் அந்த 'n' வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. அதுபோலவே பத்து வருடங்கள் கழித்து, யாராவது உணவு மேசையில் ஒருவரது பாலினம் குறித்து ஜோக் அடித்தால், அதைக் கேட்டு யாரும் சிரிக்க மாட்டார்கள்.

அந்த நாள் வரும்.

நன்றி: Scroll.in

தமிழில்: சிவா

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

புதன் 3 ஜன 2018