தொடர்கதையாகும் விலைச் சரிவு!

2018ஆம் ஆண்டிலும் பருப்பு விலை வீழ்ச்சிப் பாதையிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2017ஆம் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் பருப்பு விலை சரிவிலேயே இருந்தது. நடப்பாண்டில் சன்னா உள்ளிட்ட பருப்பு வகைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் எனவும், அதிக தேவை காரணமாகத் துவரம்பருப்பு சந்தைக்கு அதிகளவில் விற்பனைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த ஆண்டிலும் பருப்பு விலைச் சரிவு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் துவரம்பருப்பின் விலை அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையை விட மிகவும் குறைவாகவே இருந்தது.
அதாவது துவரம்பருப்பின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட 20 முதல் 40 சதவிகிதம் வரையில் குறைந்து குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,450 ஆக இருந்தது. அதேபோல, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் துவரம்பருப்பின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட 50 சதவிகிதம் குறைந்து குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,400 ஆக இருந்தது. அதேபோல, பாசிப்பருப்பின் விலையும் 10 முதல் 20 சதவிகிதம் குறைவாக ரூ.5,575க்கு விற்பனையானது. விலைச் சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு நிர்ணயித்த ஆதரவு விலையில் குவிண்டாலுக்கு ரூ.500 கூடுதலாக வழங்கி கொள்முதல் செய்யும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்திலும் கொள்முதல் பணிகள் விரைவில் தொடங்கிவிடும் என்று அம்மாநில வேளாண் மற்றும் விலைகள் ஆணையத் தலைவரான பாஷா படேல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிலும் பருப்புகளின் விலை சரிவிலேயே இருக்கும் எனவும், விலைச் சரிவு இருந்தாலும் இந்தியா பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிடும் எனவும் அவர் கூறுகிறார்.