மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: உணவுத் திட்டத்தின் நிறை குறைகள்!

சிறப்புக் கட்டுரை: உணவுத் திட்டத்தின் நிறை குறைகள்!

நடிஷா மல்லிக்

(டெல்லியில் அண்மையில் 10 ரூபாய்க்கு உணவு என்ற ‘பொது உணவுத் திட்டம்’ தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் நிறைகுறைகள், சாதக பாதகங்கள் குறித்து கிரீன்பார்க்கில் உள்ள இதன் கடைக்குச் சென்று ‘தி குயின்ட்’ ஆங்கில ஊடகம் நடத்திய கள அறிக்கையின் பதிவுதான் இந்தக் கட்டுரை.)

“திங்கட்கிழமை (டிசம்பர் 25) பொது உணவுத் திட்டம் (ஜன் ஆஹார்) தொடங்கப்பட்டது. அப்போது இந்தத் தெருவில் உள்ள மற்ற உணவகங்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை” என்கிறார் ஷோகன் படேல். இவர் ரியல் சவுத் இந்தியன் உணவகத்தின் உரிமையாளர்.

“பூரி, அல்வா இரண்டையும் காணவில்லை. இன்று உணவின் அளவும் குறைந்துவிட்டது” என்கிறார் கிரீன்பார்க்கில் பாதுகாப்புக் காவலராகப் பணிபுரியும் ஆதேஷ்.

“என்னிடம் கையில் 10 ரூபாய் உள்ளது. ஆனால், எனக்கு உணவு கிடைக்கவில்லை” என்கிறார் புஜாரியைச் சேர்ந்த தினேஷ் மிஸ்ரா.

10 ரூபாய்க்கு உணவுத்திட்டம் தொடங்கும் முன்னர் முந்தைய ஆட்சிக் காலத்தில் 18 ரூபாய் உணவுத் திட்டம் இருந்தது. அது முந்தைய ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. தற்போது அதை நிறுத்திவிட்டு 10 ரூபாய் உணவுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தொடங்கிய முதல் நாளில் இந்தக் கடைகளில் வியாபாரம் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாகப் பூரி மற்றும் அல்வா இரண்டும் மக்களால் மிகவும் விரும்பி வாங்கப்பட்டது. ஆனால், மூன்றாவது நாளில் இந்த உணவை விரும்புபவர்களின் எண்ணிக்கை சுருங்கிவிட்டது. மற்றவர்கள் இந்த உணவில் தரம் இல்லை, அளவு குறைந்துவிட்டது என்று குற்றம் சுமத்தத் தொடங்கிவிட்டனர்.

இந்த உணவு சுல்தான்பூரின், மேஹ்ரவ்லி - கோர்கான் சாலையில் உள்ள ஓர் இடத்தில் பெரிய சமையலறை கொண்டு தயாரிக்கப்படுகிறது. முந்தைய பொது உணவுத் திட்டத்தில் அந்தந்தக் கடைகளில் தயாரித்து வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் தினசரி மதியம் 1.30 மணிக்கு உணவு விநியோகம் செய்யப்படுகிறது.

உணவு விலை மிகவும் மலிவாக இருப்பதால் இந்தக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், அவர்களின் பசிக்கு நிச்சயமாக ஒரு தட்டு போதுமானதாக இருப்பதில்லை. அவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை வாங்கி வயிற்றை நிரப்ப வேண்டியுள்ளது.

இந்தக் கடையில் பணம் வாங்குபவராகப் பணிபுரியும் டி.எஸ்.ராவத் கூறுகையில், “நாங்கள் தினசரி மூன்று கண்டெய்னர்களில் சோறு மற்றும் சென்னா கொண்டுவருகிறோம். ஒவ்வொன்றும் 27 கிலோ கொள்ளளவு கொண்டது. மொத்தமாக ஒரு நாளைக்கு 81 கிலோ சோறு மற்றும் சென்னா கொண்டுவருகிறோம். இந்த உணவு 250 பேருக்கு வழங்க போதுமானது. இதை இரண்டு மணி நேரத்தில் விநியோகம் செய்துவிடுவோம்” என்றார்.

10 ரூபாய் உணவுத் திட்டத்தில் கிரீன்பார்க்கில் உள்ள கடையில் அங்கு உணவு உண்பவர்களிடம் பேசினோம்.

சஞ்சீவ் குமார் யாதவ் என்பவர் பீகாரிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் புறநோயாளியாக வந்துள்ளார். அப்போது அவர் அங்கு ‘யூசுப் சராய்’ என்ற மருந்தகத்துக்கு மருந்து வாங்க வந்துள்ளார். அப்போது அவரிடம் இங்கு மலிவான விலைக்கு உணவு கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அவர் மத்திய உணவுக்கு இங்கு வந்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “இங்கு உணவு மிகவும் சுவையாக உள்ளது. நான் பூரி, அல்வா, சோறு, சென்னா வாங்கிச் சென்றேன். அதேபோல மறுநாளும் வந்தேன். ஆனால், பூரியும் அல்வாவும் கிடைக்கவில்லை. சோறும் சென்னாவும் மட்டும்தான் கிடைத்தன. ஆனாலும் நன்றாகத்தான் இருந்தது. இங்கு நான் ஒரு பிளேட்டுக்கு 10 ரூபாய் மட்டும்தான் செலவாகிறது. இதையே வெளியே வாங்கினால் 50 ரூபாய் செலவாகும். ஆனால், இந்தக் கடை கிரீன்பார்க்கில் இருப்பதை விட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முன்பாக இருந்தால் பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

ஆதேஷ் என்பவர் கிரீன்பார்க்கில் பாதுகாப்புக் காவலராகப் பணிபுரிகிறார். இவர் தினமும் வீட்டிலிருந்து உணவு எடுத்து வருபவர். இவர் கூறுகையில், “நான் திங்கட்கிழமை இந்தக் கடையில் பூரியும், அல்வாவும் வாங்கிச் சாப்பிட்டேன். மிகவும் சுவையாக இருந்தது. ஆனால், இன்றைக்கு எனக்குப் பூரியும், அல்வாவும் கிடைக்கவில்லை. இன்றைக்கு உணவின் அளவும் மிகவும் குறைந்துவிட்டது. நான் இப்போது இரண்டாவது தட்டு சோறும், சென்னாவும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். முந்தைய உணவுத் திட்டத்தில் சோறு மற்றும் சென்னாவுடன் சேர்த்து இரண்டு ரொட்டிகள் கொடுத்தார்கள். இப்போது தருவதில்லை” என்றார்.

ஜெய்குமார் யாதவ் கடைசியாக நின்ற சிலரில் ஒருவர். இவருடன் பேசுகையில், “இங்கு உணவு எளிமையாகவும் விலை மலிவாகவும் உள்ளது. வெளியில் சாப்பிட்டால் 50 ரூபாய் செலவாகும். அதுவும் அதிக எண்ணெய் கலப்புடன் இருக்கும்” என்றார்.

தினேஷ் மிஸ்ரா புஷ்ப் விகாரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவர் செய்தித்தாளில் இந்த உணவுத் திட்டம் பற்றிப் படித்துள்ளார். அதன்பிறகு இங்கு வந்து உண்ண வேண்டுமென்று முடிவு செய்துள்ளார். முன்னதாக இந்தப் பகுதியில் உள்ள வங்கிக்கு வந்தபோது, இங்கு உணவு கிடைக்காமல் திரும்பிச் சென்றுள்ளார். தாமதமாக வந்ததால் இங்கு உணவு கிடைக்கவில்லை.

இதுபற்றி தினேஷ் கூறுகையில், “நான் செய்தித்தாளில் இந்த விளம்பரத்தைக் கண்டேன். இந்தத் திட்டம் வாஜ்பாய் பிறந்த நாளில் தொடங்கப்பட்டது. என்னிடம் 10 ரூபாய் இருந்தது. ஆனால், தாமதமாக வந்ததால் உணவு கிடைக்கவில்லை. அதன்பிறகு வெளியில் 30-40 ரூபாய் கொடுத்து சாப்பிட நேர்ந்தது” என்றார்.

அதன்பிறகு அந்தப் பகுதியில் உள்ள சில உணவக உரிமையாளர்களிடமும் பேசினோம்.

ரியல் சவுத் இந்தியன் டேஸ்ட் உணவகத்தின் உரிமையாளர் ஷோகன் படேலிடம் பேசும்போது, “இந்தத் திட்டம் திங்கட்கிழமை தொடங்கப்பட்டபோது இந்தத் தெருவில் யாரையும் கடை வைக்க அனுமதிக்கவில்லை. அதிகாரிகள் முந்தைய நாளே வந்து கடையை திறக்கக் கூடாது என்று கூறிவிட்டனர். எங்களுக்குத் தினசரி ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. மதிய உணவுக்காகக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. எங்களுடைய தினசரி வாடிக்கையாளர்கள் சிலரும் மதிய உணவுக்கு அங்குச் செல்கின்றனர்” என்றார்.

ரோஹித் என்பவர் ‘மாமா சூர் சூர் நாண்’ என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த உணவகம் கிரீன்பார்க் மெட்ரோ நிலையத்துக்கு அருகில் உள்ளது. இந்தக் கடையை இவருடைய தந்தை தொடங்கினார். 10 ரூபாய் உணவுத் திட்டம் தொடங்கிய பின்னர் விற்பனை குறைந்துவிட்டதாக இவர் கூறுகிறார். இவர் மேலும் கூறுகையில், “மக்கள் மலிவான விலையில் உணவு உண்ண வேண்டுமென்று விரும்புகிறார்கள். இதுதான் 10 ரூபாய் உணவுக் கடைக்கு மக்கள் அதிகம் செல்வதற்கு முக்கிய காரணமாகும்” என்றார்.

கல்லு கஷ்யூப் என்பவர் ரொட்டி சப்ஜி கடை வைத்துள்ளார். ஜன் ஆஹார் கடை திறந்தபின்னர் இப்போதுதான் இவர் மீண்டும் கடை வைத்துள்ளார். இவர் கூறுகையில், “கடந்த மூன்றாண்டுகளாக எனக்குக் குறிப்பிடும்படியான வருவாய் இல்லை. ஒரு நாளைக்கு 500 ரூபாய் வருவாய் இல்லாமல் தடுமாறினேன்” என்றார்.

முந்தைய ஜன் ஆஹார் திட்டம் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அப்போது சோறு, 2 ரொட்டிகள், சப்ஜி ஆகியவை 18 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. இது 10 ரூபாய் திட்டம் தொடங்கப்படுவதால் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர்தான் நிறுத்தப்பட்டது.

நன்றி: தி குயின்ட்

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

புதன் 3 ஜன 2018