மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

டிஜிட்டல் திண்ணை!

டிஜிட்டல் திண்ணை!

மொபைல் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“இன்று காலை 11 மணி அளவில் எல்லா மீடியா ஆட்களுக்கும் என் மூலமாக ஒரு மெசேஜ் வந்தது. மெசேஜை அனுப்பியது ரஜினியின் செய்தி தொடர்பாளரான ரியாஸ் அகமது. ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஊடக நண்பர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க விரும்புகிறார். நீங்கள் அவசியம் இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும்.’ என அந்த மெசேஜில் சொல்லப்பட்டு இருந்தது. இடம் எக்மோரில் உள்ள ராடிஸன் ப்ளூ ஹோட்டல்... நேரம் மாலை 3.30 மணி எனவும் திட்டமிடப்பட்டு இருந்தது. அழைப்பு விடுத்தவர்கள், விடுக்காதவர்கள் என மீடியா ஆட்கள் எல்லோருமே அந்த ஹோட்டலில் குவிய ஆரம்பித்தனர். கேமரா எல்லாவற்றையும் வெளியே வைத்துவிட்டுத்தான் உள்ளே செல்ல அனுமதித்தார்கள். அதேபோல உள்ளே செல்வதற்கு முன்பாக பெயர், எந்த மீடியா, செல்போன் எண் என எல்லாவற்றையும் ஒரு ரிஜிஸ்டரில் பதிவும் செய்து கொண்டார்கள். சரியாக 4.30 மணிக்கு ஹோட்டலுக்குள் வந்தார் ரஜினி.

வந்த வேகத்தில் மைக் பிடித்தவர், ‘உங்க எல்லோரயும் இங்கே ஒரே இடத்துல பார்க்கிறது சந்தோஷமா இருக்கு. ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை உலகமெல்லாம் கொண்டு போய் சேர்த்தது நீங்கதான். உங்களுக்கு நன்றி சொல்லத்தான் இங்கே கூப்பிட்டேன். இது ப்ரஸ் மீட் கிடையாது. சீக்கிரமே உங்க எல்லோரையும் ப்ரஸ் மீட்டுக்கும் கூப்பிடுறேன். நாம இனி அடிக்கடி சந்திச்சுதானே ஆகணும். எனக்கும் பத்திரிகைக்கும் சில தொடர்புகள் இருக்கு. நான் பத்தாம் வகுப்பு பெயில் ஆகிட்டு வீட்டுல இருந்த சமயத்துல என் நண்பன் ஒருத்தன் கன்னட பத்திரிகை ஒன்றில் வேலை பார்த்துட்டு இருந்தான். அவன் தான் என்னை அந்த கன்னட பத்திரிகையில் புரூஃப் ரீடராக வேலைக்கு சேர்த்துவிட்டான். மூணு மாசம் அங்கே வேலை பார்த்தேன். அதுக்குப் பிறகு வாழ்க்கை மாறிடுச்சு. 1979-ம் வருஷம்னு நினைக்கிறேன்... என்னோட முதல் பேட்டி பொம்மை பத்திரிகையில் வந்துச்சு.

இப்போ நான் அரசியல் கட்சி தொடங்கப் போறதாக அறிவிச்சு இருக்கேன். அதுக்கு உங்க ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் வேணும். சுதந்திரப் போராட்டம் போல இப்போ இன்னொரு புரட்சிக்கு நான் தயாராகப் போறேன். சுதந்திரப் போராட்டத்துல தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்திருக்கு. அதைப் போல இன்னொரு புரட்சி, போராட்டம் இப்போ நடக்கப் போகுது. அதுக்கு தமிழ்நாடு எனக்கு நிச்சயம் ஒத்துழைப்பு கொடுக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. தமிழ்நாட்டில் இப்போ ஒரு மாற்றம் தேவை என்பது உங்களுக்கும் தெரியும். பார்ப்போம்... இன்னும் போகப் போக நிறைய பேசலாம்!” என்று பேசி முடித்தார்.

பிறகு பத்திரிகையாளர்கள் உட்கார்ந்த இடத்துக்கே சென்று ஒவ்வொருவருக்காக கைகொடுத்து நலம் விசாரித்தார். ‘இதெல்லாம் இருக்கட்டும் சார்... குடும்பத்தைப் பாருங்க.. அவங்களை சந்தோஷமா வெச்சுக்கோங்க. அப்போதான் நாம சந்தோஷமா இருக்க முடியும்’ என ஒரு பத்திரிகையாளருக்கு அட்வைஸும் செய்தார். அதன் பின், ஒவ்வொருவரையாக அருகே அழைத்து நிறுத்தி புகைப்படமும் எடுத்துக் கொண்டார் ரஜினி.

ரஜினியின் இந்த திடீர் சந்திப்புக்கு என்ன காரணம் என விசாரித்தோம். ‘அவர் கூட போட்டோ எடுக்க பத்திரிகையாளர்கள் பலரும் போன் போட்டு கேட்டுட்டே இருந்தாங்க. ஒவ்வொருத்தரையும் தனித்தனியாக சந்திக்க வைக்க முடியாது என்பதால்தான் இந்த ஏற்பாட்டை செஞ்சோம். அதுவும் இல்லாமல், அவர் அரசியல் அறிவிப்பு வந்ததும் பல பத்திரிகைகளும், மீடியாவும் கிண்டல் செய்யவும் ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையும் நேரில் அழைத்துப் பேசி சமாதானம் செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஏற்பாட்டை செய்தோம் என்று சொல்கிறார்கள். இது தவிர, மீடியா முதலாளிகள் சிலரையும் நேரில் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறாராம் ரஜினி. அந்த சந்திப்பும் விரைவில் இருக்கும் என்கிறார்கள்” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், தொடர்ந்து ரஜினி தொடர்பான ஸ்டேட்டஸ் ஒன்றையும் பதிவிட்டது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 2 ஜன 2018