மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

மசோதா நிறுத்திவைப்பு: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

மசோதா நிறுத்திவைப்பு: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்த ஆணையம் மருத்துவர்களின் தரத்தைக் குறைக்கும் வகையிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சாதகமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

25 பேர் கொண்ட தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதி 156இன்படி எம்பிபிஎஸ் படித்தால் மட்டும்தான் அலோபதி மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும். இந்த மசோதாவில் சித்தா, ஆயுர்வேதம் பயின்றவர்களும் தனி கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு எந்த விதத் தேர்வுமின்றி அலோபதி மருத்துவர்களாகச் செயல்படலாம். இந்த மசோதாவில் மேலை நாட்டு மருத்துவர்கள் தகுதித்தேர்வு இன்றிப் பணியாற்றலாம் என விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த மருத்துவ ஆணையம் அமைக்கும் புதிய மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தித் தனியார் மருத்துவர்கள் இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியா முழுவதும் 2.9 லட்சம் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் பணியாளர்களும், 65 ஆயிரம் மருத்துவர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் மருத்துவமனைகளில் அவசர அறுவை சிகிச்சை மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சை தவிர டி.பி. நோயாளிகளுக்கு இன்று சிகிச்சை அளிக்கப்படவில்லை. மேலும் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது. இதனால் சிகிச்சை பெற வந்த வெளி நோயாளிகளும் சிகிச்சை பெறமுடியாமல் பாதிக்கப்பட்டனர். அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் பணியில் இருந்ததால், அங்கிருந்த நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏதுமில்லை.

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவைப் பாராளுமன்ற நிலைக்குழுக்கு அனுப்பிக் கருத்துக்களைக் கேட்க வேண்டும் எனப் பல்வேறு எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவை நிலைக்குழுவிற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுப்பி வைத்தார். மருத்துவர்களின் கடும் எதிர்ப்பினால் இந்த மசோதா தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

செவ்வாய் 2 ஜன 2018