மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

தாய்ப்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? நீதிமன்றம்!

தாய்ப்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? நீதிமன்றம்!

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பால் கொடுத்தால் பெண்களின் அழகு குறைந்துவிடும், வேலைப்பளு அதிகம் இருப்பதால் பால் கொடுக்க முடியவில்லை என்பன போன்ற காரணங்களால் இன்றைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பது குறைந்துவருகிறது. இந்நிலையில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது குறித்து உயர் நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சிவகாசியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “நான் ஆந்திரம் மாநிலம், சித்தூரில் உள்ள ராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிவந்தேன். எனது 6 மாத பேறு விடுப்பைக் கருத்தில் கொள்ளாமல் என்னைத் தொடர்ந்து பணியாற்ற ஆரம்ப சுகாதார நிர்வாகம் கட்டாயப்படுத்தியது” என்று கூறியிருந்தார். இதனால் தன்னால் முதுநிலை படிப்பை தொடர முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று (ஜனவரி 2) நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஸ்வர்யாவின் முதுநிலைப் படிப்பைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பின்னர், ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்க கூடாது என்று மத்திய மாநில அரசுகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் எழுப்பிய கேள்விகள் வருமாறு:

குழந்தைகளுக்கான உணவுப்பொருள் விளம்பரப்படுத்துதல் தடைச்சட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா?

தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து நடிகை நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மூலம் ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடாது?

பேறுகாலத்திற்குச் சிறப்பு காப்பீட்டுத் திட்டங்கள் ஏன் கொண்டு வரக்கூடாது?

பணிக்குச் செல்லும் பெண்களுக்குத் தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடாது?

தமிழகம் போல மத்திய அரசும் பெண் ஊழியர்களுக்குப் பேறுகால விடுமுறையை ஏன் அதிகரிக்கக் கூடாது?

இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி கிருபாகரன் எழுப்பினர். இது குறித்து மத்திய மாநில அரசுகள் ஜனவரி 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், “பிறந்த குழதைகளுக்கு பிறந்த ஆறு மாதம் வரை வேறு உணவின்றித் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதானால் மார்பகப் புற்றுநோய் வராது என்பன போன்ற அறிவுரைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு மூலம் அதனைச் சரி செய்ய வேண்டும். அதைத் தவிர்த்து, கட்டாயமாக்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல. பொது இடங்களில் தாய்மார்களுக்குத் தனி அறை அமைத்துக் கொடுக்க வேண்டும். சமூகத்தினரும், அக்கம்பக்கத்தினரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க ஊக்குவிக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்துக்கும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது” என்றார்.

தமிழகத்தில் பேறுகால விடுமுறை 9 மாதம் அளிக்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 12 வாரம் என்றிருந்த பேறுகால விடுமுறை சமீபத்தில் மகப்பேறு நன்மைகள் திருத்த மசோதா மூலம் 26 காலமாக அதிகரிக்கப்பட்டது இதுவே போதுமான விடுமுறை என்றும் ரவீந்திரநாத் தெரிவித்தார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 2 ஜன 2018