மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

திவாகரனுக்கு ஒன்பது மாவட்டங்கள்!: புத்தாண்டு முடிவு

திவாகரனுக்கு ஒன்பது மாவட்டங்கள்!: புத்தாண்டு முடிவு

ஜனவரி முதல் நாள் மன்னார்குடியில் டிடிவி தினகரனும், திவாகரனும் சந்தித்து மதிய விருந்து சாப்பிட்டுக் கொண்டே கட்சி தொடர்பாக பேசி சில முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். இந்த சந்திப்புதான் இப்போது அதிமுகவில் மன்னை முதல் சென்னை வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆர்.கே.நகரில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகிவிட்ட டிடிவி தினகரன் புத்தாண்டின் முதல் நாள் ஜனவரி 1ம் ஆம் தேதி திருத்துறைப்பூண்டி மன்னார்குடி சாலையில் உள்ள தட்டான்கோயில் கிராமத்துக்கு சென்றார். அங்கே தனது குல தெய்வக் கோயிலுக்கு மனைவி, மகளுடன் சென்று வழிபாடு நடத்தியவர், அங்கிருந்து மதியம் மன்னார்குடி சென்று திவாகரனை சந்தித்தார்.

மன்னார்குடி மன்னைநகரில் திவாகரனுக்கு ஒரு பங்களா இருக்கிறது. வழக்கமாக புத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி அன்று தனது ஆதரவாளர்களை இங்கேதான் சந்திப்பார் தினகரன். இந்த வருடம் தினகரனும் மன்னார்குடிக்கு வந்துவிட்டதால் அவரையும் அழைத்து அறுசுவை மதிய விருந்து அளித்திருக்கிறார் திவாகரன்.

தினகரன் பங்களாவுக்கு வந்தபோது திவாகரன் மற்றும் ஆதரவாளர்கள் சார்பில் ஆர்.கே.நகர் வெற்றிக்காக ஆளுயர மாலையை தினகரனுக்கு அணிவித்திருக்கிறார்கள். அப்போது தினகரன், எனக்கு மட்டும் எதற்கு இவ்ளோ பெரியமாலை? மாமாவுக்கும் சேர்த்தே போடுங்க என்று சொல்லி திவாகரனையும் தன் பக்கத்தில் அழைத்து இருவரும் சேர்ந்து அந்த மாலையைப் பெற்றுக் கொண்டனர்.

அப்போது இருவரது ஆதரவாளர்களும் குவிந்து இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும் மாற்றுக் கட்சியில் இருந்து பலரும் தினகரனை சந்தித்து அவரது அணியில் சேர்ந்தனர்.

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராம்குமார் வந்து தினகரனுக்கும் திவாகரனுக்கும் சால்வை அணிவித்து சேர்ந்தார்.

மதியவிருந்துக்குப் பின் தினகரனும் திவாகரனும் தனியாக பேசி சில முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். இதுபற்றி மன்னார்குடியின் உள் வட்டாரங்களில் பேசினோம்.

’’ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றுவிட்டபோதும் குடும்பத்தில் சிலர் இன்னும் தன் மேல் கோபத்தில் இருப்பதைச் சொல்லி திவாகரனிடம் வருத்தப்பட்டிருக்கிறார் தினகரன். ’அதற்கெல்லாம் கவலைப்படாதே, எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்’ என்று தைரியம் சொன்னாராம் திவாகரன். தினகரன் குறிப்பிட்டது விவேக்கைதான்.

மேலும் இந்த சந்திப்பின்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், கடலூர் ஆகிய ஒன்பது மாவட்டங்கள் திவாகரன் கட்டுப்பாட்டில் இருப்பது என்றும் இந்த மாவட்டங்களில் கட்சி விவகாரங்களை திவாகரன் கவனிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. மன்னார்குடியில் தன்னை சந்தித்த தனது ஆதரவாளர்களிடம் இதைத் தெரிவித்துவிட்ட தினகரன், ‘மாமா சொல்றபடி கேளுங்க. கட்சி கூடிய விரைவுல நமக்குதான் வரும். அதனால யாரும் தளராம வேலை செய்யுங்க’ என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

ஒன்பது மாவட்டங்களின் பொறுப்பு தனக்கு வந்துவிட்டதால் உற்சாகத்தில் இருக்கும் திவாகரன் இந்த மாவட்டங்களில் இப்போது இருக்கும் எம்பி, எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் கொண்டுவருவதற்கான வேலையில் தீவிரமாகிவிட்டார்’’ என்கிறார்கள்!

-ஆரா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

செவ்வாய் 2 ஜன 2018