மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

ராஜ்யசபாவின் பூஜ்ய நேர சாதனை!

ராஜ்யசபாவின் பூஜ்ய நேர சாதனை!

மாநிலங்களவையின் பூஜ்ய நேரத்தில் பட்டியலிடப்பட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும், இன்று (ஜனவரி 2) விவாதிக்கப்பட்டது. இது ஒரு வரலாற்று சாதனை என்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் துணை குடியரசுத்தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு.

கடந்த இரண்டு வாரங்களாக நாடாளுமன்றம் தொடர்ந்து அமளியைச் சந்தித்து வருகிறது. குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், மதச்சார்பற்றவர்கள் பற்றி மத்திய அமைச்சர் அனந்த்க்குமார் ஹெக்டே தெரிவித்த விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் ராஜ்யசபா எனப்படும் மாநிலங்களவையும் லோக்சபா எனப்படும் மக்களவையும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று மாநிலங்களவையின் பூஜ்யநேரம் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.

நாடாளுமன்றத்தில் பூஜ்ய நேரம் என்பது கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் இதர அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் ஆகும். இந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட அத்தனை விவகாரங்கள் மற்றும் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் குறித்து முழுமையாக விவாதம் நடந்ததில்லை. ஆனால், இன்று மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில் பட்டியலிடப்பட்ட பத்து பிரச்சனைகள் மற்றும் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது.

”முதன்முறையாக, பூஜ்யநேரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து பிரச்சனைகள் மற்றும் கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து முழுவதுமாக விவாதிக்கப்பட்டது” என்று கூறிய வெங்கையா நாயுடு, அவையில் இருந்த மூத்த உறுப்பினர்களை நோக்கி கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.

“உங்களது ஒத்துழைப்பு அற்புதமாக இருந்தது. எனது நடவடிக்கையும் அருமையாக அமைந்தது. இதனால் இந்த அவை சாதனை புரிந்திருக்கிறது” என்று அவர் தெரிவித்தார். எதிர்காலத்திலும் இதேபோல நேரத்தை வீணடிக்காமல் வகுக்கப்பட்ட அட்டவணையின் கீழ் அவை நடைபெற வேண்டுமென, மாநிலங்களவை உறுப்பினர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பூஜ்ய நேரத்தில் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் கவன ஈர்ப்பு தீர்மானங்களைத் முன்கூட்டியே தெரிந்துகொண்டு, அதற்கேற்ப பதிலளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தயாராக இருக்க வேண்டுமென்று தெரிவித்தார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 2 ஜன 2018