அசாம்: குடிமக்கள் பட்டியல் வெளியீடு!

அசாமில் சட்டவிரோதமான தங்கியுள்ளவர்களை அடையாளம் காணும் விதமாக குடிமக்கள் தேசிய பதிவேட்டின்( முதல் வரைவு ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி வருகின்றனர். இதனால் யார் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், யார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அசாம் மக்களோடு மக்களாக அவர்கள் கலந்து வசித்து வருவதால் அதிகாரிகளுக்கு அவர்களை இனம் பிரிப்பதில் சிக்கல் உள்ளது.
எனவே, இதனைத் தடுப்பதற்காக அசாம் மாநிலத்தில் குடிமக்கள் தேசிய பதிவேட்டை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இந்தப் பணி கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கியது. தங்களின் பெயரை பதிவு செய்ய 3.29 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இதுவரை 6.5 கோடி ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், என்ஆர்சியின் முதல் வரைவு ஆவணம் நேற்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆவணம் வெளியிடப்படும்போது பாதுகாப்பு கருதி அசாம் முழுவதிலும் ராணுவம் குவிக்கப்பட்டது. 80 ஆயிரம் பேர் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆவணத்தில், 1.9 கோடி பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. பலர் தங்களின் பெயர் இடம் பெறவில்லை எனப் பதற்றம் அடைந்தனர். அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பத்ரூதின் அஜ்மலின் பெயரும் இடம்பெறவில்லை. எனினும் பெயர் இடம் பெறாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக என்ஆர்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா கூறுகையில், “முதல் வரைவு பதிவேட்டில் பெயர் இடம்பெறாததால் மக்கள் வருத்தப்படத் தேவையில்லை. அடுத்த வரைவுப் பதிவேட்டில் அவர்களது பெயர் இடம்பெறும். சரிபார்க்கும் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. ஒரு குடும்பத்தில் சிலரது பெயர்கள் விடுபட்டிருந்தாலும் அதுகுறித்து அவர்கள் கவலைப்படத் தேவையில்லை.