மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

மருத்துவர்கள் போராட்டம்: தலைவர்கள் கருத்து!

மருத்துவர்கள் போராட்டம்: தலைவர்கள் கருத்து!

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாகத் தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய மசோதாவைத் தயாரித்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆணையம் அமைக்கப்பட்டால் அது மருத்துவர்களையும், மக்களையும் நேரடியாகப் பாதிக்கும் எனக்கூறி நாடுமுழுவதும் மருத்துவர்கள் இன்று(டிசம்பர் 2) ஒருநாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவர்களின் போராட்டம் குறித்து தலைவர்களின் கருத்து:

"இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை, மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகு மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என, தமிழகத்தின் சார்பில் எங்கள் கருத்துகளை ஏற்கெனவே பதிவு செய்துள்ளோம். மேலும் இந்த மசோதாவில் உள்ள சில சரத்துகளை நீக்க வேண்டும். இந்திய அளவில் தமிழ்நாட்டின் பங்கு என்பது மிக முக்கியமானது.

மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பு எதுவும் இல்லை. அரசு மருத்துவர்கள் ஒருமணிநேரம் மட்டும் அடையாள வேலைநிறுத்தம் செய்துவிட்டு பணிக்குத் திரும்பி விட்டனர். தனியார் மருத்துவமனைகளிலும் அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சைகள் பாதிக்கப்படவில்லை" எனச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

"மருத்துவக் கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில், மாநில உரிமைகளை மீண்டும் பறித்து அத்துமீறல் நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் எனும் ஒன்றை அமைக்கும் முயற்சியில் மத்தியில் உள்ள பாஜக அரசு ஈடுபட்டிருப்பது பெரும் கண்டனத்திற்குரியது.

ஏழை – எளிய, கிராமப்புற மற்றும் நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு, போராடும் மருத்துவர்களின் உணர்வு, குக்கிராமத்திலும் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய மாநில அரசின் உரிமை போன்றவற்றிற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கே பிரதிநிதித்துவம் இல்லாத தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

"தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மருத்துவ சுகாதாரப் பணிகளை கடுமையாக பாதிக்கக் கூடியதாகும். இதன்மூலம் மக்களின் அடிப்படை மருத்துவப் பணி, குடும்ப நல மருத்துவ சேவை கடுமையாகப் பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் வேலை நிறுத்த அறிவிப்பினால் பொதுமக்கள், நோயாளிகள் பாதிக்கப்படுகிற நிலை உருவாகியிருப்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த இந்திய மருத்துவ கவுன்சில் ஒழிக்கப்பட்டு, மத்திய பாஜக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேர் கொண்ட தேசிய மருத்துவ ஆணையக் குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை நிலுவையில் வைப்பதற்கு மத்திய பாஜக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கத் தவறினால் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், மாணவர்கள் இணைந்து போராட்டம் நடத்தி பாஜக அரசுக்கு கடும் எதிர்ப்பு உருவாக நேரிடும்'' என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்திருந்தார்.

"நீட் நுழைவுத் தேர்வு மூலம் சாதாரண கிராமப் புற ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவு தகர்ந்துவிட்டது மட்டுமின்றி, மாநிலங்களின் கல்வி உரிமையும் பறிபோய்விட்டது. தற்போது கூட்டாட்சித் தத்துவத்துக்கும், ஜனநாயக கோட்பாடுகளுக்கும் எதிராக 'தேசிய மருத்துவ ஆணையம்' கொண்டுவர முயற்சிப்பதை அனைத்து மாநிலங்களும் முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைத்து வரும் பாஜக அரசு, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்'' என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

"கிராம மக்களுக்கும் தரமான மருத்துவ சேவைகள் கிடைக்கவே தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுகிறது. முன்பிருந்த அகில இந்திய மருத்துவ கவுன்சில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருந்தது. இதனால் பாமர மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவ உதவிகள், தேவைகள் கிடைக்காமல் இருந்தது. இதனை அறிந்த மத்திய அரசு, பொது மக்களுக்கு உதவும் நோக்கத்தோடு, ஊழலற்ற, பாமர மக்கள் பயன் பெறும் வகையில், யாருடைய தலையீடும் இல்லாத, தூய்மையான நிர்வாகம் கொடுக்கும் நோக்கத்தில்தான் தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கியது. இது ஏழை, எளியவர்களுக்கு அடிப்படை மருத்துவ உதவி கிடைக்கச் செய்யும் திட்டம்.

மருத்துவத் துறையில் ஊழல் ஒழிக்கப்பட்டு, தரமான, நியாயமான மருத்துவ வசதி கிராம மக்களுக்கு கிடைக்கச் செய்வதே ஏழை எளியவர்களுக்கு நாம் ஆற்றும் மிகப் பெரிய பங்காகும். இந்த புதிய தேசிய மருத்துவ ஆணையம் இந்தத் திசையில் பயணிக்க உதவும் ஒரு மிகப் பெரிய மைல் கல்லாகும்'' என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

"மருத்துவக் கல்வியையும், சுகாதார வசதியையும் தனியாருக்கு ஒப்படைக்க பாஜக அரசு முயற்சித்து வருகிறது. மருத்துவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாறாக நியமனம் செய்யப்படும் மருத்துவ ஆணையம் அமைப்பது தவறானது, மேலும் மாநில உரிமைகளை பறிக்கக் கூடியதுமாகும்.

ஏற்கெனவே பல மத்திய அரசு நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். நபர்களை மத்திய பாஜக அரசு நியமித்துள்ளது. ஒட்டுமொத்தமாக அகில இந்திய மருத்துவ நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் இந்த மசோதாவை உடனடியாக திரும்ப பெறவேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 2 ஜன 2018