மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டையில் தொடக்கம்!

முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டையில் தொடக்கம்!

ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு இன்று காலை (ஜனவரி 2) புதுக்கோட்டையில் தொடங்கியது.

தமிழகத்திலேயே, புதுக்கோட்டை மாவட்டத்தில் தான், அதிக அளவில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு போட்டிகள் நடக்கின்றன. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. அதில் 450 காளைகளுடன் 100 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். போட்டி தொடங்குவதற்கு முன், மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ், அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது மாடுகளைத் துன்புறுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர்.

விழாவில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “முதல்வர் அறிவுரைப்படி தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு அதிகாரிகளின் துணையுடன் அனைத்து மாவட்டங்களிலும் தடையின்றி ஜல்லிக்கட்டு நடைபெறும்” எனக் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்காகப் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மெய்வழிச்சாலை, நார்த்தாமலை, ஆலங்குடி, அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட காளைகளுக்கு, அவற்றை வளர்ப்போர், பல்வேறு பயிற்சிகளை அளித்துவந்தனர். மேலும், பாய்ச்சல், நீச்சல், உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளைக் காளைகளுக்கு அளித்து மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்கிப் பயிற்சியில் ஈடுபட்டுவந்தனர்.

தமிழர்களின் தொன்மையான ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் வழக்குத் தொடுத்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2014ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதித்து உத்தரவிட்டது. 2016 நவம்பர் 16ஆம் தேதி, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம், மத்திய அரசின் மிருகவதை தடைச் சட்டம் இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு அமைந்துள்ளன. வீட்டில் வளர்க்கப்படும் காளைகளை ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிக்காக அடக்கப்படுவது அறுவடை சார்ந்த பண்டிகையின் ஒரு பகுதியாக ஏற்க முடியாது. எனவே ஜல்லிக்கட்டு போட்டிகளை மதத்துடன் தொடர்புப்படுத்தும் தமிழக அரசின் வாதத்தை ஏற்க முடியாது. மேலும், ஜல்லிக்கட்டு அனுமதிக்கக்கூடியது அல்ல எனக் கூறி தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 2 ஜன 2018