மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!

நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!

மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாகத் தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய மசோதாவைத் தயாரித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் மருத்துவர்கள் இன்று(டிசம்பர் 2) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடைபெறும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா டிசம்பர் 29 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா இன்று (செவ்வாய்க் கிழமை) விவாதத்துக்கு வருகிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆணையம் அமைக்கப்பட்டால் அது மருத்துவர்களையும், மக்களையும் நேரடியாகப் பாதிக்கும் எனக்கூறி நாடுமுழுவதும் மருத்துவர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய மருத்துவ ஆணையத்தில், மொத்தமுள்ள 21 உறுப்பினர்களில் 6 பேர் மட்டுமே மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இதனால், மக்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்க முடியாது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் போலி மருத்துவர்கள் அதிகரிப்பார்கள். இதனால் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை பாதிக்கப்படும் என்றும் தேசிய மருத்துவ கூட்டமைப்பின் துணைத் தலைவர் பிரகாஷ் கூறியுள்ளார்.

மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவ கல்வி தொடர்பான பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் நோக்கத்தில், இந்த புதிய ஆணையத்தை மத்திய அரசு அமைக்க உள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால் உண்மை அது அல்ல. ஜனநாயக முறையில் அமைக்கப்பட்டது தான் இந்திய மருத்துவ கவுன்சில். இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு பிரதிநித்துவம் இருக்கக் கூடிய ஒரு அமைப்பு. ஆனால் மத்திய அரசு கொண்டுவரக்கூடிய தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் தான் 80 சதவீதம் பேர் இருக்கிறார்கள். மீதி 20 சதவீதம் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே இந்த அமைப்பால் ஜனநாயக முறை மாற்றப்பட்டுவிடும்.

அரசு சார்ந்த எல்லாத் துறையும் முறைப்படி நடக்கிறது என்று சொல்வது நியாயமில்லை. ஒரு அமைப்பில் தவறு இருந்தால் அந்த அமைப்பை சீர்திருத்த வேண்டுமே தவிர அந்த அமைப்பை மாற்றுவதால் முறைகேடு குறைந்துவிடும் என்று நினைக்கக்கூடாது. எனவே இந்தத் தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பை நாங்கள் எதிர்க்கிறோம் என்கிறார் பிரகாஷ்.

இந்தியாவில் மருத்துவ துறை வியாபாரமாகிவிட்டது என்கிறது, மத்தியஅரசு. அதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் தான் காரணமா? என்று கேள்வி எழுப்புகிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்க தலைவர் ரவீந்திரநாத்.

நாடு முழுவதும் தனியார் மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டதற்கு மத்திய அரசு தான் காரணம். மருத்துவ கல்விக்கான கட்டணம், மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட கல்வி கட்டண நிர்ணய குழு தான் கட்டணத்தை நியமிக்கிறது. அரசு ஒதுக்கீடு இடங்களுக்கும் மற்றும் தனியார் கல்லூரி இடங்களுக்கும் இந்தக் குழு தான் கட்டணத்தை நியமிக்கிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு 100 சதவீத இடங்களுக்கும் இந்த குழு தான் கட்டணத்தை நியமிக்கும். ஆனால் தேசிய மருத்துவ ஆணையத்தில் 40 சதவீதம் இடங்களுக்கு மட்டும் தான் கட்டணங்களை நியமிப்போம், மீதி 60 சதவீதம் இடங்களுக்கு அந்த அந்தக் கல்வி நிறுவனமே கல்வி கட்டணத்தை நியமிக்கும். இதைத் தான் தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவருகிறது. இதனால் மருத்துவ மாணவர்கள் பெரிதும் பாதிப்படைவார்கள். தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கோரிக்கைகளும் வைக்கப்பட்டது. ஆனால் இந்தத் தேசிய ஆணையமே நீட் தேர்வு நடத்தச் சட்டம் வழிவகுக்கிறது.

முறையாக எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்ற மற்றும் பயிற்று மருத்துவர்கள் மீண்டும் ஒரு முறை தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின்னரே தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடும் மருத்துவர்களைப் பாதிக்கும். இந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அமைப்பால் மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் நிறையப் பாதிப்பு ஏற்படும். எனவே இந்த மசோதாவை கைவிடவேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 2 ஜன 2018