மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: எங்களுக்கான ராணுவம் உருவாகிறது!

சிறப்புக் கட்டுரை: எங்களுக்கான ராணுவம் உருவாகிறது!

பார்வதி

முன்னணி மலையாள நடிகர்களில் ஒருவரான மம்முட்டியின் ‘கசாபா’ திரைப்படத்தில் பெண்களை இழிவாகப் பேசும் வசனங்கள் இடம்பெற்றதை நடிகை பார்வதி விமர்சித்தார். அதற்கு, மம்முட்டியின் ரசிகர்கள் ட்விட்டரில் பார்வதியை மிரட்டினார்கள், ஆபாசமாகப் பேசினார்கள்.

இப்போதுதான் அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுவிட்டார்களே, இதில் பேச இன்னும் என்ன இருக்கிறது என்று சிலர் சர்வ சாதாரணமாகக் கேள்வி எழுப்புகிறார்கள். இது பார்வதி என்ற தனிப்பட்ட பெண் அல்லது நடிகை அல்லது மலையாளத் திரையுலகில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கான பிரச்னை இல்லை. மிரட்டல்களுக்காகவோ, தனக்கு ஆபத்து ஏதும் நேர்ந்துவிடும் என்பதற்காகவோ காவல் துறையிடம் தான் செல்லவில்லை என்பதையும் பார்வதி ஏற்கெனவே விளக்கிவிட்ட நிலையில், பிறகு எதற்குத்தான் இத்தனை பிரச்னை என்ற கேள்விகள் திரும்பத் திரும்ப அவரை நோக்கி வீசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதற்கு அவரிடமே பதில்களைக் கேட்டுப் பிரசுரித்திருக்கிறது Scroll.in இணையதளம். அதில் என்ன எழுதியிருக்கிறார் பார்வதி?

இலக்கணம் ஏன் முக்கியம்?

நான் மம்முட்டியை அவமானப்படுத்தவில்லை. உண்மையில் சிறந்த நடிகருக்கும் மேலாக நான் அவரை நம்புகிறேன். அவரை மிகவும் மதிப்பதோடு, எங்களுக்கிடையில் பகை ஏதும் இல்லை. ஆனால், நான் பேசியது வெளியே தெரிந்ததும் நான் அவரை விமர்சித்ததாகச் செய்தி வெளியானது. சில ஊடகங்கள் மட்டுமே பெண்களைத் தவறாகப் பேசுவதைப் பெருமைப்படுத்துவதை விமர்சித்தேன் என்று குறிப்பிட்டார்கள். அப்படி மம்முட்டியை விமர்சித்ததாக வெளியான செய்தியை முழுவதுமாகப் படிக்காமல், டைட்டிலை மட்டும் படித்துவிட்டு என்னைத் தாக்கத் தொடங்கிவிட்டார்கள். எனக்கெதிராகப் பேசிய இண்டஸ்ட்ரியில் இருப்பவர்கள்கூட அந்த வீடியோவைப் பார்க்கவில்லை. ஒருவேளை பார்த்திருந்தால் அவருக்கு எதிராக நான் பேசவில்லை என்பது தெரிந்திருக்கும்.

படைப்பாளிகள் விஷுவல் இலக்கணத்தின் மூலம் கெட்ட செயல்களையும், தவறான கண்ணோட்டத்தையும் ரசிக்க வேண்டும் என்ற விதத்தில் படமாக்குவதைத்தான் நான் விமர்சித்தேன். அதை விளக்கமாகச் சொல்வதற்கு, இது குறித்து ஸ்ரீஹரி ஸ்ரீதரன் பதிவு செய்த ஒன்றைச் சொல்லலாம். ஒரு காரின் கதவைத் திறந்து வெளியே வருவதைப் பல விதங்களில் காட்டலாம். ஒரு சாதாரண நடிகர் கதவைத் திறந்து கீழே இறங்கியதும் கதவை மூடுவார். இதுவொரு சாதாரண காட்சி. ஒரு காமெடியன் கதவைத் திறந்தது, கீழே விழுந்து தள்ளாடி அந்தக் கதவை மூடுவார். இதைப் பார்த்து மக்கள் சிரிப்பார்கள்.

இங்கு ஒரு சூப்பர் ஸ்டார் அதிக மெனக்கெடல்களை எடுக்க வேண்டும். கார் வரும்போதே ஒரு பின்னணி இசை மிகவும் வலிமையாக மாறிக்கொண்டிருக்கும். கார் அப்படியே நிற்காமல், திரும்பி நிற்கும். ஹீரோ வெளியே வந்து கண்ணாடியை மாட்டியதும் ஸ்லோமோஷனில் ஓர் அடி நகர்வதற்குள் பின்னணி இசை உச்சத்தைத் தொட்டிருக்கும். அடுத்து தனது காலால் கதவை உதைத்து மூடுவார். இது பெருமைப்படுத்துவது. ஹீரோயிசத்தைக் கொண்டாடுவது.

இந்த கேரக்டரில் யாரை வேண்டுமென்றாலும் பொருத்தலாம்.

ஆபாசவாதியாகவோ, வெறுக்கக்கூடியவராகவோ இருந்தாலும் அதைத் தவறான செயலாகக் கோடிட்டுக் காட்டுகிறோமா அல்லது நல்லதாக முன்நிறுத்துகிறோமா என்பது எப்படிப்பட்ட திரைமொழி இலக்கணத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது. உண்மையாகவே இந்தச் சமூகத்தில் இருக்கும் ஒரு மனிதனின் தவறான குணத்தை, கேரக்டர்களில் பிரதிபலிப்பதில் தவறில்லை. ஆனால், அது நல்ல பண்பு எனும் வகையில் காட்சிப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டிய கடமையும் இருக்கிறது.

ஊடகத் தாக்கம்

‘கருத்துச் சுதந்திரத்தை முடக்கப் பார்க்கிறேன்’ என்பது எனக்கெதிராக வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று. அப்படியெல்லாம் இல்லை. ஆபாசவாதியோ, தவறானவனோ, கொடூரமானவனோ, சமூகத்திலிருக்கும் வித்தியாசமான மனிதனோ, ஏன் தொடர் கொலைகள் செய்பவனாகக்கூட ஒரு கேரக்டரை உருவாக்கிக்கொள்ளுங்கள். ஆனால், தவறான ஒன்றைப் பெருமைப்படுத்திக் காட்டாதீர்கள்.

சினிமாவை, சினிமாவாகப் பாருங்கள் என்கிறார்கள் சிலர். ஓர் இருட்டு சினிமா அறையில் ஆயிரம் பேர் அமர்ந்து சிரித்து, கைதட்டி, அழுது இரண்டரை மணி நேரக் கதையை புரிந்துகொள்ளும்போது அது ஓர் அரசியல் நிகழ்வாக மாறி அவர்களது கூட்டுணர்வுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ரியாலிட்டியைக் காட்டலாம். ஆனால், அதன் தீமையை எப்படிப் பெருமையாகப் பேசலாம்? இது எழுத்தாளர், இயக்குநர் ஆகியோரின் வரம்புக்குள் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாகத் திரையில் என்ன காட்சிப்படுத்த வேண்டும் என்பதை முடிவெடுக்கும் சக்திகொண்ட ஒரு நட்சத்திரத்தின் கருத்தும் இதில் உடன்படுவதாகத்தான் அர்த்தம் அல்லவா?

நான் பேசிக்கொண்டிருப்பது விழிப்புணர்வு பற்றியல்ல. இந்த விவாதத்தை எனது ஒவ்வொரு திரைப்படத்திலும் நடத்திக்கொண்டிருக்கிறேன். என்னுடைய படத்தில் எந்த எழுத்தாளரும், இயக்குநரும் இதில் முரண்படவில்லை.

அதிலும், சில படங்களில் இப்படிப்பட்ட ஆபாசமும், பெண்களுக்கெதிரான வெறுப்பும் வியாபாரத்துக்காகப் பெருமைப்படுத்தப்படுகிறது என்று சொல்லும்போது அங்கு விற்கப்படுவது என்ன என்ற கேள்வியெழுகிறது. தவறான ஏதோ ஒன்றை ‘கெட்டவன்’ என்ற போர்வைக்குள் சந்தைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இந்த மாதிரியான கேரக்டர்களில் வில்லன்கள் நடிக்கும்போது பிரச்னையே இல்லை. வில்லன்கள் செய்வதைத் திரும்பச் செய்ய வேண்டுமென்று இந்த சினிமா நமக்குக் கற்றுத்தரவில்லை. ஆனால், அவற்றையே பின்னணி இசையுடன் ஸ்லோமோஷனில் ஒரு ஹீரோ செய்யும்போது அவரைப் போலவே நடந்துகொள்ள வேண்டும் என ஒரு ரசிகன் நினைக்க மாட்டாரா?

இதைப் புரிந்துகொள்ளச் சில காலம் ஆகும். ஆனால், சற்றுப் பின்னோக்கி வந்து மொத்தமாகப் பார்த்தால் தவறான வழிநடத்துதல் மூலமாகக் கலை என்ற ஒன்று சமூகத்தின் கட்டுமானத்தை எந்த அளவுக்கு ஆழமாகப் பாதித்திருக்கிறது என்று புரியும்.

எது சரியான சகிப்பின்மை?

சமூகத்திடமிருந்து கலை எடுத்துக்கொள்வது போலவே, கலையின் மூலமாக எது கொடுக்கப்படுகிறதோ, அதையே இந்தச் சமூகம் பிரதிபலிக்கிறது. சோஷியல் மீடியா என்ற பெயரில் சகிப்பின்மை வரம்புகளை மீறி நடத்தியிருக்கும் பாய்ச்சலைப் பாருங்கள். வசதிக்கு ஏற்ப நிர்ணயித்திருக்கும் ஆண் / பெண் எல்லையைத் தாண்டியவர்களை ஏற்றுக்கொள்வதே கிடையாது. உணர்ச்சியற்ற கேரக்டர்களை ஏன் நமது படங்களில் உருவாக்குகிறோம்? தன்பாலின ஈர்ப்பாளர்களையும் திருநங்கைகளையும் ஏன் மோசமாக பாவிக்கிறார்கள்? அவர்களை அடிப்படையாக வைத்து நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்குவதன் காரணம் என்ன? ஆண் தன்மையற்ற ஆண், கறுப்பானவர்கள், பருமனாக இருப்பவர்கள் ஆகியவர்களை எல்லாம் பொழுதுபோக்குப் பொருளாக மாற்றுவது ஏன்?

இந்தச் சகிப்பின்மையை ஏன் நாம் சகித்துக்கொள்ள வேண்டும்?

ஒருவேளை நீங்கள் என்னைச் சகிப்புத்தன்மை இல்லாதவர் என்று சொன்னால். ஆம், எனக்கு சினிமாவில் பெண்களையும், மாறுபட்ட மக்களையும் இழிவுபடுத்துபவர்கள் மீதும் சகிப்புத்தன்மையே இல்லை. நான் உட்காரந்த இடத்தில் நெளிந்துகொண்டு அப்படிப்பட்ட காட்சிகளைப் பார்க்கத் தயாராக இல்லை. இது என்னுடைய சினிமாத் துறை. நான் அங்கு வேலை செய்கிறேன். அதனால், அதைப்பற்றிப் பேச எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. யாரிடமாவது நேர்மையாக நடத்துமளவுக்கு விவாதப் பொருள் இருந்தால் என் காதுகள் இங்குதான் இருக்கும். நான் கேட்பதெல்லாம் ஆரோக்கியமான விவாதம் அவ்வளவே.

ஒருவேளை இந்தச் சம்பவம் ‘கேரளாவில் வியாபித்திருக்கும் பெண்கள் மீதான வெறுப்பு’ என்ற விவாதத்தைத் தொடங்கினால், இது வேறெந்த நாட்டிலும் நடைபெறாத சம்பவம் அல்ல என்பதையும், இது பொது உலகத்துக்குத் தேவையான விவாதம் என்பதையும் சொல்ல நான் விரும்புகிறேன். தேசிய ஊடகங்கள் இதை ஓர் எல்லைக்குட்பட்ட பிரச்னையாக மாற்றுவதை நான் விரும்பவில்லை. இது எல்லா இடத்திலும் நடைபெறும் ஒரு பிரச்சினை என்பதை உணர்ந்தால்தான் இதற்கு ஏதாவது செய்ய முடியும்.

எதற்காகக் கவலைப்பட வேண்டும்?

பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன், நடிகை விஜய்யின் படம் குறித்த தனது கருத்துகளை முன்வைத்ததற்காக மிக மோசமான கருத்துகளால் தாக்கப்பட்டார். பத்திரிகையாளர் அன்னா எம்.எம். வெட்டிக்காட்டும் சூப்பர் ஸ்டார்களைப் பற்றி எழுதியபோது இதே நிலைக்கு ஆளானார். உண்மையில் சொல்லப்போனால், இங்கு சகிப்பின்மை உருவாவதற்குக் காரணமே ஒரு பெண் பேசலாம் என இவர்கள் வைத்திருக்கும் அளவுக்கும் மேல் பேசிவிட்டார் என்பதுதான். கண்டிப்பாக ஆலோசித்து, விவாதிக்கப்பட வேண்டிய இந்தத் தலைப்பு பேசப்படுவதற்கான இடமே இல்லாமல் போய்விட்டது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 2 ஜன 2018