மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: பெயர்களெல்லாம் பெயர்களல்ல!

சிறப்புக் கட்டுரை: பெயர்களெல்லாம் பெயர்களல்ல!

ஸ்டாலின் ராஜாங்கம்

நான் பள்ளியில் படிக்கும்போது ‘தொப்பை’ என்ற பெயரில் மாணவரொருவர் இருந்தார். அந்தப் பெயர் அவருக்குப் பிடிக்கவில்லை. அந்தப் பெயர் சொல்லி அழைக்கும்தோறும் தான் அவமானப்படுத்தப்படுவதாகவே உணர்வார். அப்பெயருக்கான ‘இயல்பும்’ அப்பெயர் சொல்லி அழைத்தால் கோபப்படுகிறார் என்பதும் சக மாணவர்களாகிய எங்களுக்குத் தெரிந்தபோது அப்பெயரால் அழைத்தே ‘இன்பம்’ அடைவோம். அதாவது அவரை அவமானப்படுத்துவோம்.

கல்லூரி படிக்கும்போது இதேபோல மற்றுமோர் அனுபவம். தனக்கு நன்கு தெரிந்த ஒருவனே தன்னைத் தெரியாது என்று கூறிவிட்டதாக என் நண்பரொருவர் வேதனைப்பட்டார். கிராமத்துப் பள்ளியில் தன்னோடு படித்த முனியாண்டியை எதேச்சையாகப் பார்த்த நான் பெயர் சொல்லி அழைத்தேன். அவன் என் பெயர் முனியாண்டி இல்லை, முனீஸ் என்று சொல்லிவிட்டு முன் நகர்ந்துவிட்டான் என்றார்.

வெறும் பெயர் மாற்றமல்ல

விஷயம் இவ்வளவுதான். அடியோடு மறக்க விரும்புகிற தன்னுடைய பழைய பெயரை, அடையாளத்தை நினைவுபடுத்துகிறவர் நண்பராகவே இருந்தாலும் அவரையே துறக்க விரும்புகிறான் என்பதே அது. பழைய பெயரால் கிடைத்துவந்த அவமானத்தைப் புதிய பெயரால் துடைத்திருப்பதாக அவன் கருதியிருக்கிறான். அதேவேளையில் தன் பழைய பெயரை முற்றிலும் துறக்க முடியாவிட்டாலும் (அது அவனின் குலசாமி பெயர்) அதில் சிறு மாற்றமொன்றைச் செய்து அதாவது பழையதை ‘மாடர்னாக்கி’, தக்கவைத்துக் கொண்டிருக்கிறான்.

அண்மையில் என் வகுப்பில் மாணவரொருவரின் பெயரைக் கேட்டபோது கர்ணா என்றார். நான் வருகைப் பதிவில் அப்படியொரு பெயரே இல்லையே என்றேன். கருணன் என்றிருக்கும், கர்ணா என்பதுதான் ஸ்டைலாக இருக்கும் என்பதால் அப்பெயரால் அழைக்கப்படுவதையே விரும்புவேன் என்று வெளிப்படையாகச் சொன்னான். விரைவில் கர்ணா என்ற பெயரையே கெசட்டிலும் மாற்றிக்கொள்ளப் போவதாகவும் சொன்னான். ஏறக்குறைய இதுவும் முனியாண்டி, முனீஸ் ஆன கதைதான்.

பெயர் வெறும் பெயரல்ல. அது ஒருவரின் அடையாளத்தையே கட்டமைக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரையிலும் ஏன் ஒருவர் தன் சந்ததியினராலும் அப்பெயராலேயே அறியப்படப் போகிறார். அதனாலேயே வரலாறு நெடுகவும் பெயர்கள் சூடுவதும் மாற்றுவதும் முக்கிய நடவடிக்கையாக இருந்துவந்திருக்கின்றன. பெயர்கள் சூடுவதில் காலந்தோறும் மாற்றங்கள் நடந்துவந்துள்ளன.

அஜித், விஜய் – கறுப்பன், மாடசாமி

இந்தத் தலைமுறையினரில் உள்ள அஜய், அஜித், பிரணவ், தினேஷ், விஜய், சதீஷ் போன்ற பெயர்கள் முப்பதாண்டுகளுக்கு முன் அதிகம் இல்லை. நம்முடைய உள்ளூர் பெயர்கள் பற்றிச் சமூகத்தில் நிலவும் அசூயையும் அதை மாற்றி நவீன மனிதர்களாக்கிவிடும் ஆர்வத்தையும் இவ்வாறு சூட்டப்படும் புதிய பெயர்களுக்கான சமூக உளவியலில் காண்கிறோம். கல்வி, இடப்பெயர்ச்சி, நகர்மயமாதல், நவீன உலகுக்கான மனிதர்களாக மாறுதல் போன்ற நடைமுறைகள் இதன் பின்னாலுள்ளன.

பொதுவாக உள்ளூர் அளவில் குலசாமி (வேடியப்பன் மாடசாமி), வடிவம் (கருப்பன் / குட்டையன்), செயல் (கொனஷ்டை குரங்கன்) ஆகியவை சார்ந்து அதிகம் மெனக்கெடாமல் பெயர்கள் இடப்பட்டிருக்கின்றன. பின்னரே மெல்ல மெல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நம்மை ஆளும் அதிகாரம் கொண்டவர்கள் கட்டமைத்த அடையாளத்தோடு ஒப்பிடத் தொடங்கியபோது பல்வேறு அடையாளங்களில் முதன்மையானதாகிய பெயரைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையும் அதை மாற்றுவதன் மூலம் மதிப்புமிக்க அல்லது சமமான அடையாளத்தை அடைவதாகவும் உணரத் தொடங்கினோம்.

பெயரிலும் உள்ள சாதி

பெயர்கள் சூடுதலில் சாதி சார்ந்த ஆதிக்கமும் இருந்தன. ‘கீழே இருப்போர்’ மதிப்புமிக்க பெயரைச் சூடிக்கொள்ள மேலோர் அனுமதிப்பதில்லை. சூடிக்கொண்டாலும் அவ்வாறு அழைப்பதுமில்லை. சின்னச்சாமி, கருப்பசாமி போன்ற பெயர்களில் இருந்த சாமி நீக்கி, சின்னா(ன்) கருப்பா(ன்) என்று அழைக்கும் போக்கு இங்குண்டு. மாற்றம் செய்து அழைக்க வாய்ப்பில்லாதபோது அவன் அப்பாவின் பெயரைக்கூறி அவன் மகன் என்பதையே பெயராக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்பா பெயர் கருப்பன் போன்று பழைய பெயராக இருந்துவிடும் நிலையில் கருப்பன் மகனே என்று அழைத்துக்கொள்ள முடியும்.

இவற்றுக்கெல்லாம் எதிர்ப்புகள் இல்லாமலும் இல்லை. பெருந்தெய்வங்களின் பெயர்களைக் கீழோர் சூடிக்கொண்டிருப்பதே மீறல்தான். பெரியசாமி ராஜா என்ற பெயரை எதிர்கொள்ளும்போதெல்லாம் எத்தகைய பொருளில் அதைச் சூட்டியிருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்ததுண்டு.

ஓர் ஆசிரியராக, வகுப்பறையில் மரபான பெயர்களுக்கு ஏறக்குறைய முடிவு நெருங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். ஒரே வகுப்பறையில் நான்கு அஜித்துகள். மீனாட்சி சுந்தரன்களையும் ராதாகிருஷ்ணன்களையும் கருப்பசாமிகளையும் அரிதாகவே பார்க்க முடிகிறது.

மரபான பெயர்களே முற்றிலும் விடப்படுகிறது என்பது இதற்கு பொருளில்லை. வேறு மாற்றங்களோடு அவை வலம்வருகின்றன. சாமி அல்லது தாத்தா உள்ளிட்ட முன்னோர்களின் பெயர்களைச் சூட வேண்டியிருக்கும்போது நவீனமான பெயர்களோடு இணைத்துச் சூட்டும் வழக்கம் உருவாகியிருக்கிறது. பூபதி விஜயன் போன்ற தாத்தாக்களின் பெயர்கள் அஜய் பூபதி என்றும் விஜய் கபிலன் என்றும் மாறிக்கொள்கின்றன.

பெயரும் மொழியும்

இவ்விடத்தில் தமிழ்ப் பெயர்கள் சூடும் வழக்கத்தைப் பற்றியும் கூற வேண்டும். அரசியல் ஓர்மை சார்ந்து சூடப்பட்ட தமிழ்ப் பெயர்களும் இப்போது நவீன பெயர்களாகவே கருதப்பட்டுச் சூடப்படும் சிறுபான்மை வழக்கம் இருக்கிறது. சாதியைக் கடக்கும் கடவுள் உள்ளிட்ட அடையாளங்களைத் தாண்டிய செக்கூலர் அடையாளம் இருப்பதாகவும் கருதப்பட்டு, அரசியல் ஓர்மை தமிழ்ப் பெயர் சூட்டல்களில் இருக்கிறது. சாதியற்ற, கடவுள், மத நம்பிக்கையற்ற ஆதி வடிவத்தில் தமிழ்ச் சமூகம் இருந்ததென்ற கற்பிதத்திலிருந்து எடுத்து அதை மீட்டெடுப்பதாகக் கருதி இது உருவாகியிருக்கிறது. எனினும் இவர்கள் நம்புவதுபோல் கடந்த காலப் பண்பாட்டு வரலாற்றிலோ சமகாலச் சமூக யதார்த்த உளவியலிலோ இதற்கு இடமிருந்திருக்கிறதா என்பதே பெரும் கேள்விதான்.

தமிழ்ப் பெயர்களில் மட்டுமல்ல சதீஷ், விஜய், தினேஷ் என்ற பெயர்களில்கூடச் சாதி அடையாளத்தைக் கண்டுவிட முடியாது. இன்றைய சமூக மதிப்புக்கு இப்பெயர்கள் மூலம் நகர முடியும் என்ற ‘யதார்த்தம்’ நிலவும் சூழலில் இப்பெயர்களைச் சூடிக்கொள்கின்றனர். ஒருவகையில் பாரம்பர்யத்துக்கு எதிரான கலகம் என்று இதையும் கொள்ளலாம்.

இவற்றில் தமிழ் சம்ஸ்கிருதம் என்ற எதிர்வுக்கு மட்டுமே இடமிருப்பதாக அரசியல் ஓர்மையுடையவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், மக்கள் உளவியல் அதற்கு முக்கியத்துவம் தருவதாகத் தெரியவில்லை.

பெயர்கள் மூலம் சாதியை - மதத்தை - கடவுளை மறுக்கும் பிரக்ஞை வெகுஜன மக்களுக்கு இருக்கிறதோ, இல்லையோ... பெயர்கள் சார்ந்து ஏதோவொரு வகையில் மதிப்புமிக்க நிலையையே சூட விரும்புகிறார்கள். அதற்கு வாய்ப்பளிப்பது தமிழா, சம்ஸ்கிருதமா என்பது பற்றிய கவலை அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எனவேதான் இந்த சமூக உளவியலை மொழிவழி புரிந்துகொள்ள முடியாது என்கிறோம்.

ஒரு வகையில் தமிழ்ப் பெயர்களைக்கூட சிறுபான்மையாகவேனும் நவீன பெயர்கள் என்ற விதத்தில் ஏற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேவேளையில் அதை செக்குலர் தன்மையோடு புரிந்து கொண்டிருக்கும் நிலை சமூகதளத்தில் இல்லை. என் கிராமத்தில் குழந்தைகள் பிறந்தால் தமிழ்ப் பெயர் கேட்டு எனக்கு தொலைபேசி வரும். வருடத்துக்கு 4, 5 குழந்தைகளுக்காவது அவ்வாறு பெயர்கள் சொல்ல வேண்டி வருகிறது. கடவுள் மற்றும் சடங்குகள்மீது நம்பிக்கைகள் கொண்டிருப்பதோடு எப்பாடுபட்டாவது ஆங்கில வழியில் படிக்க வைத்துவிட வேண்டுமென்றும் கனவுகள் கொண்ட பெற்றோர்களே அவர்கள். அரசாங்கச் சான்றிதழைப் பொறுத்தவரை அவை இந்துப் பெயர்களே. இன்றைய தமிழ்ப் பெயர்களுக்கான அரசியல் ஓர்மையில் இந்த இடைவெளிக்கான பூர்வாங்க யோசனைகள் இல்லை.

மொழித் தூய்மைவாத அரசியல்

இன்றைக்கு தமிழ்ப் பெயர்கள் என்றறியப்படுவது மக்கள் வழக்கு அல்ல. மாறாக செவ்வியல் பெயர்கள்தாம். இவை வழக்குத் தமிழ்ப் பெயர்களையும் சேர்த்தே மறுக்கின்றன. மொழியின் ஆதி வடிவம் என்று கூறிப் பிரதி சார்ந்த பெயர்களையே தமிழ்ப் பெயர்களாக கட்டமைப்பது மொழித் தூய்மைவாத அரசியல். கருப்பசாமி, கருப்பன், முருகன், அய்யனார், முனியசாமி, வீரன், பொன்னன் என்பதெல்லாம்கூடத் தமிழ்ப் பெயர்களே. உள்ளூர் வழக்கில் அறியப்படுவதாலேயே இவை நவீனமானதல்ல என்று கைவிடப்படுகின்றன.

உண்மையில் வழக்குச் சொற்களிலுள்ள உள்ளூர் தன்மையும் வரலாறும் செவ்வியல் தமிழில் இருப்பதில்லை. உள்ளூர் கோயில் திருவிழா, சடங்குகள், நம்பிக்கைகள் இவைகளுக்கு பின்னாலிருக்கும் கதைகள் ஆகியவற்றிலேயே அசலான வரலாறு தங்கியிருக்கும். இன்றைய தமிழ் மீட்பில் வழக்கிலுள்ள இந்த உள்ளூர் தன்மையும் சேர்ந்தே மறைகிறது. அதாவது சம்ஸ்கிருத அடையாளங்களை எதிர்கொள்ளுதல் என்பதற்கு மாற்றாக, பிரதிமயப்பட்ட செவ்வியல் தமிழே இங்கே முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

பாரம்பர்யப் பெயர்கள் இழிவானவை, மேலானவை அல்ல என்று வைதீக பிரதிகள் தொடங்கி நவீன முதலாளிய போக்குகள் வரை வெவ்வேறு வகைகளில் ஒரு மனப்பாங்கைக் கட்டமைத்திருக்கின்றன. இவற்றுக்குப் பின்னால் அதிகார மேலாதிக்கம் இருந்திருக்கின்றன. பின்னர் கிறிஸ்துவம் கொணர்ந்த பெயர்களும் இந்த நவீனம் பற்றிய ஏக்கத்துக்குக் காரணமாகி இருக்கிறது. இதன் அடிப்படையில் உள்ளூர்காரர்களுக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகி அதை மீற முற்பட்டு அதை பெயரிலிருந்தே தொடங்குகிறார்கள்.

நீட்சிபெறும் தாழ்வு மனப்பான்மை

இதனோடு தொடர்புடைய பல்வேறு தாழ்வு மனப்பான்மைகள் இருக்கின்றன. உடை, முடி, பாவனைகள் ஆகியவற்றுக்காக இவ்வாறே மெனக்கிடுகிறோம். குறிப்பாக தங்களின் நிறம் பற்றிய சிக்கல் சிவப்பு அல்லது வெள்ளைதான் அழகு, அதிகாரம் கொண்டது என்ற கட்டமைப்பிலிருந்து தொடங்குகிறது. இதன்படி கறுப்பு நிறத்தை மாற்றிப் பார்க்க விரும்புகிறோம். பாரம்பர்யம் உருவாக்கிய இந்தத் தாழ்வு மனப்பான்மையைத்தான் ‘சிவப்பழகு’ கம்பெனிகள் பயன்படுத்திக்கொள்கின்றன. சிவப்பான பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முனைவது மேற்கண்ட மனப்போக்கைக் கடந்துவிட யத்தனிக்கும் முயற்சிகளே.

இதையொட்டிய வேறொரு கருத்து நிலையும் இங்கே இருந்திருக்கிறது. கறுப்புதான் அழகு என்று சொல்வது. இக்கூற்று கறுப்பு நிறத்தை மேன்மைப்படுத்துகிறது. இதைச் சொல்ல வேண்டிய தேவை எப்படி எழுந்திருக்கும்? கறுப்பு அழகில்லை என்று சொல்லப்பட்டதால் உருவான தாழ்வு மனப்பான்மையைக் கடக்கும் உளவியல்தான் இந்தச் சொல்லாடலில் இருக்கிறது எனலாம். தன்னுடைய போதாமைகளில்; ஏதாவதொன்றை மறைக்க திரும்ப திரும்ப நான் இப்படியாக்கும், நான் இப்படியாக்கும் என்று சொல்லிக் கொண்டிருப்பதைப்போல. பயத்தை மறைக்க தடித்த மீசையை வைத்துக்கொள்ளும் உளவியலைப் போல. இவையெல்லாம் ஆதிக்க வடிவங்கள் உண்டாக்கிய தாழ்வு மனப்பான்மையின் எதிர்வினைகள்.

இதே பின்னணியோடு வேறொன்றையும் நாம் இங்கு யோசிக்கலாம். தலித் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் பொதுவில் சந்திக்கும் அனுபவங்களின் உளவியலே அது. ‘ஸ்காலர்ஷிப் வந்திருக்கு எஸ்.சியெல்லாம் எழுந்திருச்சு நில்லு’ என்று கூறி பெயர் வாசிக்கும்போது அம்மாணவர்கள் எழுந்து நின்று ‘சாதி தெரியாதவனுக்குக்கூட இப்போது தெரியுமே’ என்றும் ‘இனி சக மாணவர்கள் தன்னை எவ்வாறு அணுகுவார்கள்’ என்றும் யோசித்து அடுத்தடுத்த ஒவ்வொரு தருணங்களையும் அந்தத் தவிப்பை தாங்கியபடியே இருக்கப்போகும் உளவியல் முற்றிலும் வேறானது.

இதுபோன்ற தருணத்தில் அதிலிருந்து (பெயரை போல) மாறிக்கொள்ள வாய்ப்பிருந்தால் உடனே மாறிக்கொள்வார்கள். இந்த நிலையில்தான் அவனுக்குப் பெயரும் தொந்தரவான உளவியலாக இருக்கும்பட்சத்தில் எளிதாக சாத்தியமாவதால் உடனே மாற்றிக்கொள்கிறான். அதற்கு வழிவிடுவதே இந்த மாடர்னான பெயர்கள் மற்றும் அடையாளங்கள்.

தங்களை ஆண்ட பரம்பரையாகக் கற்பிதம் செய்துகொண்டு சாதிய வரலாற்று நூல்கள் வெளியாகின்றன. குறிப்பிட்ட சாதியினர் அடிமைகளாகவே இருந்தவர்கள் என்று வரலாற்று ரீதியாகக் கூறப்பட்டுவந்ததால் உருவான தாழ்வு மனப்பான்மையிலிருந்து குழுவாக வெளியேறுவதற்கான பிரதியாக்க முயற்சிகளே இவை என்று சொல்லலாம்.

இவ்வாறு சாதியைத் தக்கவைத்தல், சாதியை ஒழித்தல் என்ற அரசியல் இருமைகளுக்கு அப்பால் தங்களை மதிப்பானவர்களாகக் காட்டிக்கொள்ளும் வெகுமக்கள் முயற்சிகள் வேறு வேறு வழிகளில் நடந்திருக்கின்றன. இம்முயற்சிகள் சாதி ஓர்மையை அறிந்தே நடக்கின்றன என்று சொல்ல முடியாது. ஆனால், அவர்களின் முயற்சியில் தங்களை அறியாமலேயே அதைத் தாண்டுவதற்கான உளவியல் ஊடாடுகிறது எனலாம்.

இங்கு நாம் முதலில் யோசிக்க வேண்டியது சாதியமைப்பையும் ஆதிக்க வகுப்பினரையும் பற்றியே தவிர, அதற்கு எதிர்வினைகளாக அமையும் வெகுமக்கள் முயற்சிகளைப் பற்றி அல்ல.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 2 ஜன 2018