மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: இந்தியாவின் சிவப்பு நிற மோகம்!

சிறப்புக் கட்டுரை: இந்தியாவின் சிவப்பு நிற மோகம்!

நேஹா மிஸ்ரா, ரொனால்ட் ஹால்

இந்தியாவின் அழகு நிலையங்களில் “நன்றாகத் தேய்த்து வெள்ளையாக்குதல்” என்பது அடிக்கடி கூறப்படும் ஒரு வாக்கியம். வெள்ளைத் தோல்தான் அழகு என்று பெண்களுக்குத் தொடர்ந்து இங்கே கூறப்பட்டுவருகிறது.

“எம்.பி.ஏ. பட்டதாரி, ஐந்தரை அடி, ஆங்கில வழிக் கல்வி, வெண்மை நிறம்” என்ற ஞாயிறுதோறும் வெளிவரும் வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் முதல் வயதானவர்கள் கூறும் குங்குமப்பூவைப் பயன்படுத்துங்கள் என்ற அறிவுரை வரை “உங்கள் தோலை வெள்ளையாகவும் மென்மையாகவும் வைத்திருங்கள்” என்பதுதான் எங்கு பார்த்தாலும் காணப்படுகிறது.

இந்த 2017லும்கூட இந்தியா முழுவதும் “அவள் அதிர்ஷ்டசாலிதான் கறுப்பா இருந்தாலும் அவன் அவளைக் கல்யாணம் பண்ணிகிட்டான்” என்ற உரையாடல்கள் நடைபெற்றுதான் வருகின்றன.

மாறிவரும் சூழல்

இன்றைய இளைய சமுதாயம் இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளத் தொடங்கியுள்ளது. ஜூலை மாதம் 7ஆம் தேதி யூடியூபில் 18 வயது ஆரண்யா ஜோஹர், ‘ஹர் பிரவுன் கேர்ள்ஸ் கைடு டு பியூட்டி’ வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவில், உரைநடை பாணி கவிதையில், “ஸ்னோ ஒயிட்டை மறந்துவிடுங்கள், சாக்லேட் பழுப்பு நிறத்துக்கு ஹலோ சொல்லுங்கள். நான் என் சொந்த தேவதைக் கதையை எழுதுவேன்” போன்ற வரிகள் இடம்பெற்றிருந்தன. முதல் நாளிலேயே இது வைரலாகி, உலகம் முழுவதும் ஒன்றரை மில்லியன் வியூக்களைக் பெற்றது.

ஜோகரின் வெளிப்படையான இந்த அறைக்கூவலுக்கு முன்பாக பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக், இந்தியத் திரைப்படத் துறையில் நிலவும் இனவெறிக் கலாசாரம் குறித்து ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

‘நான் கறுப்பாக, அசிங்கமாக இருப்பதால் வெளுப்பான, அழகானவர்களுடன் சேர்ந்து என்னால் நடிக்க முடியாது என்பதை என்னை உணர வைத்தமைக்காக உங்களுக்கு நன்றி. ஆனால், நான் என்றுமே அதில் கவனம் செலுத்தியதில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.

2016இல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனிஷா சாட்டர்ஜி அவரது தோல் நிறம் காரணமாகப் பரிகசிக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டார். அதைக் குறிப்பிட்டே நவாசுத்தீன் இவ்வாறு குறிப்பிட்டார்.

தோல் நிறத்தை அடிப்படையாகக்கொண்ட சமூகப் பாடுபாடு பற்றி இன்னமும் அறியாததுபோல ஏராளமான இந்திய மக்கள் பாசாங்கு செய்கிறார்கள். ஆனால், நாட்டில் வெள்ளைத் தோல் குறித்து நிலவும் மோகம் வன்முறையாகவும் மாறுகிறது. சமீப காலங்களில், கறுப்பு நிறம், மாநிறம் குறித்த பயம் துன்புறுத்தல்களைத் தூண்டி, இந்தியாவில் பயிலும் ஆப்பிரிக்க மாணவர்கள்மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.

இந்தியர்கள் ஏன் தங்கள் சொந்த நிறத்தை இவ்வளவு வெறுக்கின்றனர்? இந்திய வரலாறு இதற்கான சில பதில்களைக் கூறுகிறது.

மத்திய கால மற்றும் நவீன வரலாறு முழுவதும், இந்தியத் துணைக்கண்டம் பல்வேறு ஐரோப்பியக் குடியேறிகளையும் வர்த்தகர்களையும் கவர்ந்திழுக்கும் இடமாக இருந்துவந்தது. இதில் 15 முதல் 17ஆவது நூற்றாண்டு வரையில் இங்குவந்து குடியேறிய போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரான்ஸ் நாட்டினரும் அடங்குவர். இந்தத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதி 16ஆம் நூற்றாண்டில் முகலாயர்களால் ஆளப்பட்டது. 17ஆம் நூற்றாண்டு முதல் 1947 ஆகஸ்ட் மாதம் வரை பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்டது. இந்த அனைத்து அந்நியர்களும் ஒப்பீட்டளவில் வெண்மை நிறம் கொண்டவர்கள். இவர்களில் பலர் தங்களை உயர்ந்தவர்களாகக் கூறிக்கொண்டனர்.

வெள்ளைத் தோல் கொண்டவர்களால் நெடுங்காலம் ஆளப்பட்டுவந்ததால், இந்திய மக்களிடையே சிவப்பு நிறம் அதிகாரம், அந்தஸ்து, விரும்பத்தக்க தன்மை ஆகியவற்றோடு தொடர்புபடுத்தப்பட்டு வருகிறது. இன்று, பழுப்பு நிறம் ஆளும் வர்க்கம், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகிய இருவரிடையேயும் அவமதிக்கப்பட்டு வருகிறது, மேலும் பத்திரிகைகளால் இது தினமும் வலியுறுத்தப்பட்டும் வருகிறது. அழகு குறித்த பத்திரிகைகளின் அட்டைகளை வெளுப்புத் தோல்கொண்ட பெண்கள் - பெரும்பாலும் வெளிநாட்டு மாடல்கள் - அலங்கரிக்கின்றனர்.

வெள்ளையர் அல்லாத நாடுகளைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் அழகு குறித்த மேற்கத்திய கருத்தாக்கத்தில் ஈர்ப்புக் கொண்டுள்ளதும், கறுப்பு நிறத்தவருக்குச் சுமையாகியுள்ளது. காலனி ஆதிக்கத்துக்குப் பிந்தைய நடவடிக்கைகள்கூட இதை மாற்றவில்லை.

2013 முதல் 2016 வரை நாங்கள் நடத்திய ஓர் ஆய்வுக்காக 300 ஆண், பெண்களிடம் நேர்முகம் நடத்தினோம். இதில், 70% பேர் வெள்ளைத் தோலுடைய யாராவது ஒருவரைத் துணையாக்கிக் கொள்ளவோ அல்லது அந்த நபரிடம் டேட்டிங் செய்யவோ விருப்பம் தெரிவித்தனர். நிறம் குறித்த இந்தக் கண்ணோட்டம் பல இந்தியர்களைத் தங்கள் சருமத்தை வெள்ளையாக்கிக் கொள்ள வைத்து, ‘ப்ளீச்சிங் சின்ட்ரோம்’ என்று குறிப்பிடப்படும் ஒரு நிலையையை உருவாக்கியுள்ளது.

‘ப்ளீச்சிங் சின்ட்ரோம்’ என்பது மூட நம்பிக்கையான ஒரு பாணியல்ல. ஒரு மேன்மையான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளும் யுக்தி இது. வெள்ளைத் தோல் கொண்டவர்கள்தான் சிறந்தவர்கள், சக்தி வாய்ந்தவர்கள், அழகானவர்கள் என்று வேரோடிவிட்ட நம்பிக்கையின் பிரதிபலிப்பு இது. இந்தக் கண்ணோட்டம், இந்தியாவில் மட்டுமே காணப்படவில்லை. ஸ்கின் ப்ளீச்சிங் என்பது மற்ற ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவியுள்ளது.

பெருகிவரும ப்ளீச்சிங் மார்க்கெட்

சருமத்தைப் பாதுகாப்பாகவும் பளபளப்பாகவும் பராமரிக்கப் பயன்படுவதாகச் சொல்லப்படும் க்ரீம்கள் போன்ற அழகு சாதனங்கள் அதிகரித்துவரும் மார்க்கெட், மக்களிடையே உருவாகியுள்ள தேவையைப் பூர்த்தி செய்யவதாக உள்ளது. ஆண்டுக்கு 40 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இந்த வியாபாரம் பெருகியுள்ளது.

மிக அதிகமாக அனைத்துத் தரப்பு மக்களிடமும் விற்பனையாகும் அழகு சாதனப் பொருள்களில், ஃபெம், லோட்டஸ், ஃபேர் அண்ட் லவ்லி, ஆண் பெண் சமத்துவத்தை அடையாளப்படுத்தும் ஃபேர் அண்ட் ஹான்சம் ஆகியன அடங்கும். மிகவும் வசீகரமான பெயர்கொண்டுள்ள பெரும்பாலான இந்த க்ரீம்கள் ஸ்டீராய்ட், ஹைட்ரோகுவினோன், ட்ரெடினோயின் ஆகியவற்றால் ஏற்படும் ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தும். நீண்ட காலமாக, இவற்றைப் பயன்படுத்துவதால், நிரந்தரமான தோல் பாதிப்பு, சருமப் புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக் கேடுகள் ஏற்படும்.

ஆனாலும் 2014இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கிட்டத்தட்ட 90 சதவிகித இந்திய இளம் பெண்கள் சருமத்தை வெண்மையாக்கிக் கொள்வது மிக முக்கியமான தேவை எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த இளம் பெண்கள் ப்ளீச்சிங் செய்துகொண்ட பிறகு ஏற்படும் பின்விளைவுகளை அலட்சியப்படுத்தவும் தயாராக உள்ளனர். இணையதள வழி விற்பனையில் இந்தப் பொருள்கள் கிடைப்பதால் இவர்கள் ரகசியமாகவே இவற்றைப் பயன்படுத்த முடிகிறது.

ஆரம்பத்தில், பெண்களின் அழகை மையமாக வைத்து விற்பனை செய்யப்பட்ட அழகூட்டும் க்ரீம்களுக்கான மார்க்கெட் இப்போது ஆண்களை மையமாகக்கொண்ட மார்க்கெட்டாகவும் விரிவடைந்துள்ளது. வியர்வையைத் தடுக்கக்கூடியது என்றும் அக்குள்களை வெண்மையாக்கக்கூடியது, பெண்களைக் கவரக்கூடியது எனவும் உறுதி அளித்து இவை விற்பனை செய்யப்படுகின்றன.

பெருமளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள ஷாருக் கான், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் தொடர்ந்து ஸ்கின் ப்ளீச் சாதனங்களை விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

க்ளீன் அண்ட் ட்ரை பிரான்ட் ப்ளீச்சிங் விளம்பரத்தை 2012இல் ஒரு புதிய கட்டத்துக்குக் கொண்டு சென்றது. பெண்ணுறுப்பை இது வெண்மையாக்கும் எனத் தொடர்ந்து விளம்பரம் செய்யப்பட்டது.

2013இல், விமன் ஆஃப் வொர்த் என்ற செயல்பாட்டுக் குழு கறுப்பே அழகு என்ற பிரசார இயக்கத்தைத் தொடங்கியது. இந்திய நாடக நடிகை நந்திதா சென் இது தொடர்பான விளம்பரத்தில் பங்கேற்றார்.

பெண்ணியக் குழுக்களுடன் இணைந்து, பல பெண்கள் கொடுத்த நெருக்கடியால் அட்வர்டைசிங் ஸ்டான்டர்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா 2014இல் விலம்பரங்கள் குறித்த சில வழிகாட்டு நெறிகளை வெளியிட்டது. தோலின் நிற அடிப்படையிலோ அல்லது கறுப்பு நிற தோல் கொண்டவர்கள் தாழ்ந்தவர்கள், வாழ்க்கையின் எந்தக் அம்சத்திலும் வெற்றிபெற முடியாதவர்கள். குறிப்பாக, எதிர்ப் பாலினரை ஈர்க்க முடியாதவர்கள் என்றெல்லாம் அந்த வழிகாட்டு நெறிகள் கூறின.

அனைவருக்கும் சமத்துவம் வழங்க வழிவகுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14ஆவது பிரிவு மற்றும் மத, இன, ஜாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில், பாரபட்சம் காட்டுவதைத் தடைசெய்யும் 15ஆவது பிரிவின்படி இந்தக் கொள்கை வகுக்கப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக, இந்திய சமுதாயத்தில் காணப்படும் சகிப்புத்தன்மையற்ற நிலவரத்தையும் இனவெறியின் மிக நுட்பமான வெளிப்பாடுகளையும் சட்டத்தால் தடுக்க முடியவில்லை. இன்று வரைக்கும் பெண்ணுறுப்பு ப்ளீச்சிங் சாதனம் விற்பனையாகிக்கொண்டுதான் இருக்கிறது.

ப்ளீச்சிங் சின்ட்ரோம் (வெளுப்பாக விரும்பும் மனநிலை) என்பது, தோலின் நிறத்தைத் தாண்டி வேறு கட்டங்களையும் எட்டியுள்ளது. இந்தியப் பெண்கள் இப்போது கூந்தலின் அடர்த்தி மற்றும் நிறம், பேச்சு, திருமண தெரிவுகள், ஆடை அணியும் பாணி ஆகியன குறித்து கேள்வி எழுப்புகின்றனர். இது, பெண்களின் சுய மதிப்பு குறித்த உண்மையான கவலையை எழுப்பியுள்ளது.

யாரோ ஒருவரை என்றாவது ஒருநாள் தன் மீது காதல் கொள்ள வைக்க முடியும் என்ற நம்பிக்கையைவிட, நம்மைக் காதலிக்கும் முதல் நபராக நாம்தான் இருக்க வேண்டும் என யூடியூபில் ஆரண்யா ஜோஹர் மிகப் பொருத்தமாகக் கூறியுள்ளார்.

(கட்டுரையாளர்கள் குறிப்பு: நேஹா மிஸ்ரா, பெங்களூரில் உள்ள ரெவா பல்கலைக்கழகத்தில் சட்டத் துணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ரொனால்ட் ஹால், மிஷிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் சோஷியல் வொர்க் துறையின் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.)

நன்றி: https://qrius.com/india-and-its-obsession-with-light-skin/

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 2 ஜன 2018